சர்வதேச குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, விழிப்புணர்வு நிகழ்ச்சி
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் (12.06.2024) ஜீன்-12 சர்வதேச குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை, பள்ளிக்கல்வித்துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, தேசிய குழந்தை தொழிலாளர் திட்டம் மற்றும் வேல்டு விசன் இணைந்து நடத்திய பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S, அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
அதன்படி, சர்வதேச குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தின விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் துவக்கி வைத்தார்.குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு குறித்து பல்வேறு விழிப்புணர்வு தகவல்கள் அடங்கிய விழிப்புணர்வுப் பிரச்சார வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்பின்னர், பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு மனித சங்கிலியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் துவக்கி வைத்து, துண்டு பிரசுரங்களை வழங்கி மாணவர்களுடன் கலந்துரையாடி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.அதனைத்தொடர்ந்து, சர்வதேச குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, குழந்தைத் தொழிலாளர் முறை அகற்றுதல் குறித்த விழிப்புணர்வு உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் பள்ளி மாணவ, மாணவிகள் எடுத்துக்கொண்டனர்.பின்னர், குழந்தைத் தொழிலாளர் முறை அகற்றுதல் குறித்த விழிப்புணர்வு உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் அனைத்து அரசுத்துறை அலுவலர்களும் எடுத்துக்கொண்டனர்.
ஒவ்வொரு ஆண்டும் ஜீன் 12ம் நாள் சர்வதேச குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. குழந்தை தொழிலாளர் முறையை முற்றிலுமாக அகற்றி சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும், குழந்தைகளை பள்ளிக்கு செல்வதை ஊக்குவித்து குழந்தை தொழிலாளர் அற்ற மாநிலமாக மாற்றுவதற்கு தான் சர்வதேச குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் கடைபிடிக்கப்படுவதின் முக்கிய நோக்கம் ஆகும்.அதன்படி, சர்வதேச குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாவட்டத்தில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. சிவகாசி, இராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சாத்தூர் மற்றும் அருப்புக்கோட்டை ஆகிய இடங்களில், வட்ட சட்டப் பணிகள் ஆணையக்குழு சார்பு நீதிபதி தலைமையில் குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி, விழிப்புணர்வு ஸ்டிக்கர் விநியோகித்தல் மற்றும் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 11 வட்டாரங்களிலும், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தலைமையில், மகளிர் திட்டத்தின் கீழ் இயங்கும் மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் மனிதசங்கிலி நிகழ்ச்சி நடைபெற்றது.
மேலும், விருதுநகர் மாவட்டத்தில் பள்ளி மாணவர்களிடையே குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வுக் கூட்டம் தொழிலாளர் துறை மற்றும் பள்ளிக் கல்வித் துறை இணைந்து நடத்தப்பட்டது.குழந்தை மற்றும் வளரிளம் பருவ தொழிலாளர் (தடுத்தல் மற்றும் முறைப்படுத்துதல்) சட்டம் 1986-ன் கீழ் District Task Force அலுவலர்களுடன் இம்மாதம் முழுவதும் கூட்டாய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.குழந்தை மற்றும் வளரிளம் பருவத் தொழிலாளர் (தடுத்தல் மற்றும் முறைப்படுத்துல்) சட்டத்தின்படி, 14 வயதிற்குட்பட்ட குழந்தைகளை எவ்வித பணியிலும் ஈடுபடுத்துவதும், 15 வயது முதல் 18 வயதிற்கு உட்பட்ட வளரிளம் பருவத்தினரை அபாயகரமான தொழில்களில் ஈடுபடுத்துவதும் தடை செய்யப்பட்டுள்ளது. இச்சட்டவிதிகளை மீறுவோருக்கு ரூ.20,000/- முதல் ரூ.50,000/- வரை அபராதம் அல்லது ஆறு மாதம் முதல் இரண்டு ஆண்டு வரை சிறை தண்டனை அல்லது இவை இரண்டும் சேர்த்து நீதிமன்றத்தால் விதிக்கப்படும்.
பொதுமக்கள் கடைகள், நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் குழந்தைத் தொழிலாளர்கள் பணிபுரிவதை கண்டறிந்தால் “155214” “1098” (கட்டணமில்லா தொலைபேசி எண்), தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) தொலைபேசி எண்: 04562-225130 அல்லது Pencil.gov.in என்ற குழந்தைத் தொழிலாளர் இணையதள முகவரியில் புகார் தெரிவிக்கலாம்.அனைத்து அரசு துறைகளிலும் ஒப்பந்த பணிகளுக்கு டெண்டர் விடும்போது, குழந்தை மற்றும் கொத்தடிமைத் தொழிலாளர்களை பணியமர்த்த மாட்டோம் என்ற சுய உறுதிமொழிச் சான்று கட்டாயம் பெறப்படவேண்டும் என தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. அனைத்து அரசு துறைகளும், அரசு துறை சார்ந்த நிறுவனங்களும் இந்த அரசாணையை தவறாது கடைபிடித்து நமது மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர் இல்லாத நிலையினை உருவாக்க ஒத்துழைப்பு நல்க வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
0
Leave a Reply