25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் பொன்னகரம் சந்தன மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா >> ராஜபாளையத்தில் அரசு ஆஸ்பத்திரி புதியகட்டிடம் திறப்பு விழா . >> தைப்பூச திருவிழா முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு >> மாற்றுத்திறனாளிகளுக்கு தொழில் முனைவோர் பயிற்சி சான்றிதழ் வழங்கும் விழா >> ராஜபாளையம் மட்டுமின்றி சுற்றியுள்ள  நகரங்கள் ,கிராமங்களில் நேற்றிரவு 9 :08 மணிக்கு 3 ரிக்டர் அளவுக்கு லேசான நிலநடுக்கம் . >> ராம்கோ இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி கல்லூரி கருத்தரங்கில் குழந்தை திருமணத்தைத் தடுக்க சமூக வலைதளங்களை கருவியாக பயன்படுத்த வேண்டும் – சமூக ஆர்வலர்கள் கோரிக்கை. >> சாலை விரிவாக்க ஆக்கிரமிப்பு அகற்றுவதில், முறையாக அளவீடு செய்யாமல் பணிகள் நடப்பதாக  விவசாயிகள் குற்றச்சாட்டு . >> சேத்தூர் அடுத்த கோவிலுாரில் அரசு சார்பில் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது. >> தென்னையை தாக்கும் சாறு உறிஞ்சி பூச்சிகளான ரூகோஸ் வெள்ளை ஈக்கள் . >> ராம்கோ குரூப் டெக்ஸ்டைல் டிவிசன் ராஜபாளையம் மில்ஸ் லிமிடெட் இராஜபாளையம் 56-வது பொங்கல் விளையாட்டு விழா-2026 >>


சூடோமோனாஸ் ஏருகினோசா (Pseudomonas aeruginosa)   என்ற பாக்டிரியா
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சூடோமோனாஸ் ஏருகினோசா (Pseudomonas aeruginosa)  என்ற பாக்டிரியா

அமெரிக்காவில் இருக்கும் என் நண்பரின் தாயார் மரணமடைந்துவிட, துக்கம் விசாரிப்பதற்காக போன் செய்தேன். தாயாரின் மறைவுக்கான காரணமாக அவர் சொன்ன தகவல் கடும் அதிர்ச்சியை உண்டாக்கியது. 

அவரது வயதான பெற்றோர் மும்பையில் வசித்து வந்தார்கள். அவரது தந்தை கடும் வயிற்றுப்போக்கு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட, அவரை உடனிருந்து கவனித்துக்கொள்ள அவரது தாயார் மருத்துவமனைக்குச் சென்றார். ஆனால் மருத்துவமனைகளில் மட்டுமே பரவும் சூடோமோனாஸ் ஏருகினோசா (Pseudomonas aeruginosa)   என்ற பாக்டிரியா அவரைத் தாக்கிவிட்டது, அதை அவர் உணரவில்லை.

கணவரை டிஸ்சார்ஜ் செய்து வீட்டிற்கு அழைத்து வந்த சில நாட்களில், அந்தத் தாய் வீட்டில் திடீரென மயங்கி விழுந்தார். அமெரிக்காவில் இருந்த அவரது மகன், தற்செயலாகத் தனது செல்போனில் சிசிடிவி காட்சிகளைப் பார்த்தபோது, தனது தாய் தரையில் அசைவற்று கிடப்பதைக் கண்டு பதறிப்போனார். 

உடனடியாக மும்பையில் உள்ள தனது தந்தைக்கும் மருத்துவமனைக்கும் போன் செய்து சிகிச்சைக்கான ஏற்பாடுகளைச் செய்தார். ஆனால், அந்தத் தாயின் உடலில் அதற்குள் சூடோமோனாஸ் ஏருகினோசா எனும் கொடிய பாக்டீரியா தனது ஆதிக்கத்தைச் செலுத்திவிட்டது.

இந்த பாக்டீரியா உடலில் நுழைந்தவுடன் பெரிய அறிகுறிகளைக் காட்டாது. அந்தத் தாய்க்குச் சாதாரண உடல் சோர்வு மட்டுமே இருந்தது. வயதான காலத்தில் ஏற்படும் பலவீனம் என்று அவர் அதைத் தவறாகக் கருதிவிட்டார். பாக்டீரியா இரத்தத்தில் கலந்தவுடன், அது நரம்பு மண்டலத்தை நிலைகுலையச் செய்தது. இதனால் அவர் திடீரென மயங்கி கோமா நிலைக்குச் சென்றார். 

இந்த பாக்டீரியா வெளியிடும் நச்சுக்கள் ரத்த அழுத்தத்தை மிகக் கடுமையாகக் குறைத்தன. அத்துடன் ரத்த சர்க்கரை அளவும் சரிந்ததால், சிறுநீரகங்களுக்குச் செல்லும் ரத்த ஓட்டம் நின்று அவை முழுமையாகச் செயலிழந்தன. உடலில் நச்சுக்கள் தேங்கி, இனி அவரைக் காப்பாற்ற முடியாது என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர். அதன் பின் அவர் சில நாட்கள் கோமா நிலையிலேயே இருந்து வீட்டிலேயே உயிர் பிரிந்தது.

நன்றாக இருந்தவரின் சிறுநீரகங்கள் செயலிழந்து டயாலசிஸ் மற்றும் கோமா நிலைக்கு சென்று உயிரிழந்ததை அவர்களால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. "இப்படி ஒரு பாக்டிரியாவும், வியாதியும் இருப்பதே அம்மா இறந்தபின்னர் தான் தெரிகிறது" என்கிறார்

இந்தத் தொற்றுக்கு பெரும்பாலும் மருந்துகள் அல்லது முறையான சிகிச்சைகள் வேலை செய்வதில்லை. இது பலவிதமான ஆன்டிபயாட்டிக் மருந்துகளையும் எதிர்க்கும் திறன் கொண்ட ஒரு சூப்பர் பக் ஆகும். ஒருமுறை இது தாக்கினால், நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தி அதனுடன் போராடி வென்றால் மட்டுமே உயிர் பிழைக்க முடியும், இல்லையெனில் மரணம் உறுதி. குறிப்பாக முதியவர்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு (Immune compromised people) இந்தத் தொற்று ஒரு மரண தண்டனை போன்றது.

மும்பை போன்ற நெரிசலான நகரங்களில் உள்ள மருத்துவமனைகளில் இத்தகைய தொற்றுகள் பரவுவது பெரும் சவாலாக உள்ளது. இந்த பாக்டீரியா ஈரப்பதமான ஏசி குழாய்கள், மருத்துவ உபகரணங்கள் மற்றும் சுத்தமற்ற இடங்களில் மறைந்திருக்கும். நோயாளிகளை விட, அவர்களைப் பராமரிக்கச் செல்லும் முதியவர்களுக்கே இதன் பாதிப்பு அதிகம் ஏற்படுகிறது.

இந்தியாவின் பெருநகரங்களில் உள்ள மருத்துவமனைகளில் இந்தத் தொற்று ஒரு பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது. இந்தியாவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளில் 10% முதல் 30% வரை இத்தகைய தொற்றுகளால் பாதிக்கப்படுகின்றனர். 

இவை ஈரப்பதம் மிகுந்த இடங்களில் எளிதில் வளரும். முறையான சுகாதாரப் பராமரிப்பு மற்றும் கிருமி நீக்கம் இல்லாதபோது, உதவியாளர்களையும் இது எளிதில் தாக்குகிறது. இது ஒரு சாதாரண காய்ச்சல் போலவே தெரிவதால், நோயாளிகள் கோமா நிலைக்குச் செல்லும் வரை இந்தத் தொற்று இருப்பதை மருத்துவர்களோ அல்லது குடும்பத்தினரோ கண்டறிய முடிவதில்லை.

தற்போது பல மருத்துவர்கள் இந்தத் தொற்று பரவுவது குறித்துக் கடுமையான எச்சரிக்கைகளை விடுத்து வருகின்றனர். 

நீங்கள் யாரையும் மருத்துவமனைக்குச் சென்றுதான் பார்க்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. குறிப்பாக வயதானவர்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் மருத்துவமனைகளுக்குச் செல்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். 

அவர்கள் தப்பாக நினைப்பார்களோ என்று எண்ணி உங்கள் உயிரைப் பணையம் வைக்காதீர்கள். உங்கள் உயிர் மிகவும் மதிப்புமிக்கது. அவர்களை நேரில் பார்க்க வேண்டும் என்றால், அவர்கள் குணமடைந்து வீடு திரும்பிய பிறகு நிதானமாகச் சென்று பாருங்கள்.

~ நியாண்டர் செல்வன்

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News