உலகம் முழுவதும் விரும்பக்கூடிய பறவை மயில்கள்.
பறவைகளில் மிக அழகானது மயில். முருகப்பெருமானின் வாகனமாக போற்றப்படுகிறது. பொதுவாக, பறவைகளில் பெண் இனங்கள்தான் அழகாக தோன்றும். ஆனால், மயில் இனத்தில் ஆண் மயில்கள்தான் அழகாக தோன்றுகிறது. மயில்கள் தெற்காசிய நாடுகளில் பரவி காணப்படும் மிகப்பெரிய பறவை இனம். இவற்றின் அழகை கண்டு, ஐரோப்பிய செல்வந்தர்கள் வளர்ப்பு பறவைகளாக தங்கள் நாடுகளுக்கு கொண்டு சென்றதாக வரலாறுகள் கூறுகின்றன.
பின்னர் அமெரிக்கா போன்ற நாடுகளிலும் மயில்கள், வளர்ப்பு பறவைகளாக மாறின. எகிப்து நாட்டுக்கு கொண்டு செல்லப்பட்ட மயில்களின் அழகில் மயங்கிய எகிப்தியர்கள் அதனை மாயப் பறவை என்று புகழ்ந்தனர். மயில்கள் நல்ல நல்ல அதிர்ஷ்டங்களை கொண்டு வரும் என்று நம்பினர். மயில்கள் தோகையை விரிக்கும் அழகிய நிகழ்வை வெளிநாடுகளில் வியந்து ரசிக்கிற மக்கள் ஏராளம். மயில்கள் கோழி இனத்தை சேர்ந்த பறவைகள் என்றாலும், கோழிகளை விட புத்திசாலித்தனமும், மனிதர்களோடு எளிதாக பழகும் தன்மையும் கொண்டிருக்கின்றன.
ஒரு காலத்தில், மயில் இறைச்சியை அதிக அளவில் உணவாக சாப்பிட்ட ஐரோப்பியர்கள், மயில்களை பாதுகாக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு பெற்று, மயில் இறைச்சியை விட்டுவிட்டு ,வான்கோழி இறைச்சிக்கு மாறியதாக கூறப்படுகிறது. இந்தியாவின் பெருமைமிகு பறவை இனமான மயில்கள், உலகம் முழுவதும் விரும்பக்கூடிய பறவைகள் என்பதில் சந்தேகமில்லை.
0
Leave a Reply