முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் என்ற திட்டம்
முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தின் மூலம் விருதுநகர் மாவட்டத்தில் 3500 ஏக்கர் பசுந்தாள் உர விதைகள் விநியோகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. ஒரு விவசாயிக்கு ஒரு ஏக்கர்க்கு 20 கிலோ தக்கைப் பூண்டு விதைகள் 50 சதவீத மானியத்தில் வழங்கப்படும்.
விருதுநகர் மாவட்டத்தில் 2024-2025-ம் ஆண்டில் தமிழக முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தில் பசுந்தாள் உர உற்பத்தியினை ஊக்குவித்தல் இனம் செயல்படுத்தப்படவுள்ளது. தற்போது உள்ள தொழில் முறை வேளாண்மையில் ஒரே பயிரை சாகுபடி செய்வதாலும் மண்ணிலிருந்து சத்துக்களை அதிக உறிஞ்சும் வீரிய ஒட்டு ரக பயிர்களை சாகுபடி செய்வதாலும் மண்ணின் வளம் குறைந்து கொண்டே வருகிறது.இது தவிர உற்பத்தி அதிகரிப்பதற்கென அதிக அளவில் இராசயன உரங்கள், களைக்கொல்லிகள், பூச்சி மருந்துகள், போன்றவற்றை பயன்படுத்துவதால் மண்ணில் உள்ள நுண்ணுயிர்களின் எண்ணிக்கை குறைந்து மண்வளமும், நலமும் குன்றி அதிக அளவில் நிலங்கள் களர்; உவர், அமில நிலங்களாக மாறியுள்ளன.
இந்த நிலை தொடர்ந்து நீடித்தால் மலடான மண்ணைத்தான் நம் எதிர்கால தலைமுறையினருக்கு நாம் விட்டுச் செல்லும் நிலை ஏற்படும். மண்வளத்தை பேணி காக்கவும், மக்கள் நலம் காக்கும் விதமாகவும் உயிர்ம வேளாண்மை அதிகரித்திட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் அனைத்து விவசாயிகளும் பயன்பெற தகுதி உடையவர் ஆவர். விவசாயிகள் நேரடியாக உழவன் செயலில் பதிவு செய்து இத்திட்டத்தின் பயனை எளிதில் பெறலாம். விவசாயிகள் நில ஆவணங்களுடன் தங்கள் பகுதி வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுகி பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்., I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply