மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழுக் கூட்டம் 2024-2025
விருதுநகர் மாவட்ட ஆட்சியரக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில், (25.09.2024) மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுத்தலைவர்/ விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் திரு.ப.மாணிக்கம்தாகூர் அவர்கள் தலைமையில், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழு உறுப்பினர் செயலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,I A S, அவர்கள், இராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் திரு.கே.நவாஸ்கனி அவர்கள், தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் திருமதி ராணி ஸ்ரீகுமார் அவர்கள், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் அவர்கள், சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.ரகுராமன் அவர்கள், சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் திரு.ஜி.அசோகன் அவர்கள் மற்றும் சிவகாசி மாநகராட்சி மேயர் திருமதி சங்கீதா இன்பம் அவர்கள் ஆகியோர் முன்னிலையில், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழுக் கூட்டம் நடைபெற்றது.
மத்திய அரசு திட்டங்கள் மற்றும் அதன் நோக்கம் சரியாக நிறைவேற்றப்படுவதை மாவட்ட அளவில் கண்காணித்து நிறைவேற்றுவது மற்றும் ஆலோசனைகள் வழங்குவது மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுவின் (DISHA) பணியாகும். மத்திய அரசின் திட்டப்பணிகளை செயல்படுத்தும்போது ஏற்படும் இடர்களை சரியான நேரத்தில் களைந்து அதற்கான தீர்வுகளை கண்டு பணிகளை சிறப்பாக நிறைவேற்ற மாவட்ட நிர்வாகத்திற்கு வழிகாட்டியாக இந்தக்குழு செயல்படுகிறது.விருதுநகர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம் மத்திய அரசுத் திட்டங்களை செயல்படுத்துவதை கண்காணித்திடும் பொருட்டு மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு (DISHA) கூட்டம் காலாண்டிற்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. அதன்படி 2024-2025 ஆம் நிதியாண்டிற்கான இரண்டாம் காலாண்டிற்கான கூட்டம் இன்று நடைபெற்றது.விருதுநகர் மாவட்டத்தில் மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தும் தொடர்புடைய மாவட்ட அளவிலான அனைத்து அலுவலர்களிடம் திட்ட செயல்பாடுகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இக்கூட்டத்தில், விருதுநகர் மாவட்டத்தில் மத்திய அரசின் திட்டங்களான பிரதம மந்திரி வேலைவாய்ப்பு திட்டம், பிரதம மந்திரி உஜ்வாலா திட்டம், தேசிய உணவு பாதுகாப்புச் சட்ட பொது விநியோகத்திட்டம், டிஜிட்டல் இந்தியா - பொது தகவல் மையம், நில ஆவணங்கள் கணினி மயமாக்குதல், தேசிய நெடுஞ்சாலை- மத்திய சாலைதிட்டம், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டம், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம், பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டம், மதிய உணவு திட்டம், பிரதம மந்திரி கௌசல் விகாஸ் யோஜனா, பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத்திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், பிரதம மந்திரி குடியிருப்புத் திட்டம் (PMAY(G) தூய்மை பாரத இயக்கம் (கி) (SBM(G) ஜல் ஜீவன் மிஷன் திட்டம், பிரதம மந்திரி கிராம முன்னேற்றத் திட்டம்(PMAGY) பிரதம மந்திரி கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டம் (PMGSY), தமிழ்நாடு மாநில ஊரக வாழ்தார இயக்கம், தூய்மை பாரத இயக்கம் - மாநகராட்சி, நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள் (SBM) அம்ருத் திட்டம், அனைவருக்கும் வீடுகள் வழங்கும் திட்டம், இராஷ்டிரிய கிருஷி விகாஸ் யோஜனா (RKVY), பரம்பரக்கத் கிருஷி விகாஸ் யோஜனா (PMVY) நீர்வடிப் பகுதிகளில் பருவநிலை பாதுகாப்புத் திட்டம், மண் வள அட்டை இயக்கம், பிரதான் மந்திரி கிரிஷ் சஞ்சாயி யோஜனா இயக்கம், பிரதம மந்திரி விவசாய நீர்பாசனத் திட்டம் (PMKSY), தேசிய விவசாய வளர்ச்சித் திட்டம் (NADP), தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டம், மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டம்(e-NAM), தேசிய நலக் குழுமம், பிரதம மந்திரி கனிஜ் சேஷ்த்ரா கல்யாண் யோஜனா(PMKKY), மாவட்ட கனிம வள நிதி, தேசிய சமூக நலத்திட்டம், மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, தேசிய கால்நடை நோய் கட்டுப்பாட்டு திட்டம், தேசிய செயற்கை முறை கரூவூட்டல் திட்டம், தேசிய கால்நடை இயக்கம், உட்பட பல்வேறு திட்டங்களின் மூலம் செயல்படுத்தப்பட்டுள்ள பணிகள் மற்றும் மேற்கொள்ளப்படவுள்ள பணிகள், இலக்கு நிர்ணயம் செய்யப்பட்ட பணிகள், முடிவுற்ற பணிகள், நிலுவையில் உள்ள பணிகள் குறித்தும் துறை வாரியாக ஆய்வு மேற்கொண்டு, நிலுவையில் உள்ள பணிகள் மற்றும் நடைபெற்று வரும் பணிகளை தரமாக விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்களை நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் அறிவுறுத்தினார்கள்.
இக்கூட்டத்தில், முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உணவின் தரம் நன்றாக உள்ளது எனவும், அதேபோன்று மதிய உணவு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உணவினை அந்தந்த பள்ளி தலைமையாசிரிகள் ஆய்வு செய்து உறுதி செய்திட வேண்டும் எனவும் தெரிவிக்கப்ட்டது.
மேலும், அங்கன்வாடி மையங்களில், குழந்தைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்திட வேண்டும் எனவும், பதிவு செய்துள்ள குழந்தைகள் தொடர்ச்சியாக அங்கான்வாடி வருவதையும் உறுதி செய்ய வேண்டும் எனவும்,மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் மூலம் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு, தனியார் நிறுவனங்களின் மூலம் பயிற்சி வழங்கப்பட்டு, வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் செயல்படுத்தப்பட்டு வரும் பிரதம மந்திரி கௌசல் விகாஷ் யோஜனா திட்டம் குறித்து விழிப்புணர்வையும், முகாம்களையும் நடத்தி, அதிக நபர்கள் பயன்பெறுவதை உறுதி செய்திட வேண்டும் எனவும், தொடர்புடைய அரசு அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
மேலும், மேற்கண்ட திட்டங்களின் கீழ் செயல்படுத்தப்படும் பணிகளில் என்னென்ன சிரமங்கள் உள்ளது என்பது குறித்தும், என்னென்ன திட்டங்களுக்கு நிதி வராமல் நிலுவையில் உள்ளது என்பது குறித்தும், புதிய திட்டங்களுக்கு தேவையான நிதிகள் ஆகியவை குறித்தும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தெரிவிக்கும் பட்சத்தில் அது குறித்து, சம்பந்தப்பட்ட துறை மத்திய அமைச்சர்கள் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, நமது மாவட்டத்திற்கு தேவையான திட்டங்கள் அனைத்தும் விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும், அரசு அலுவலர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்கி, நமது மாவட்டத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல அனைவரின் ஒத்துழைப்பை நல்குமாறும் நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.ராஜேந்திரன், சிவகாசி சார் ஆட்சியர் திருமதி ப்ரியா ரவிச்சந்திரன்.,இ.ஆ.ப., திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) மரு.தண்டபாணி, உட்பட அனைத்து நகராட்சித் தலைவர்கள், பேரூராட்சித் தலைவர்கள், ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர்கள், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு துறை சார்ந்த அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply