இளைஞர் நீதிக்குழுமத்தில் தொகுப்பூதிய அடிப்படையிலான காலிப் பணியிடங்களுக்கு தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் .
குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் கீழ் செயல்படும் விருதுநகர் இளைஞர் நீதிக்குழுமத்தில் உதவியாளர் உடன் இணைந்த அமர்வு எழுத்தர் -1, இளநிலை உதவியாளர் உடன் இணைந்த பதிவேடு எழுத்தர் -1 மற்றும் அலுவலக உதவியாளர் -1 உள்ளிட்ட 3 பணியிடங்களும் ஒப்பந்த அடிப்படையில் (முற்றிலும் தற்காலிக பணியிடம்) நிரப்பப்பட உள்ளது. இப்பணியிடங்களுக்கான வயது வரம்பு 42 வயதிற்குட்பட்டவர்களாக இருக்கவேண்டும். இப்பணிடங்களுக்கு சென்னை உயர்நீதி மன்ற விதி 2015-இன் அடிப்படையில் கல்வித்தகுதியும், மிஷன் வாத்சல்யா வழிகாட்டுதல் அடிப்படையில் வயது வரம்பும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
விருதுநகர் இளைஞர் நீதிக்குழுமத்திற்கு கூடுதல் பணியிடமாக உதவியாளர் உடன் இணைந்த அமர்வு எழுத்தர் பணிக்கு மாத தொகுப்பூதியம் ரூ.25,000/-யும், இளநிலை உதவியாளர் உடன் இணைந்த பதிவேடு எழுத்தர் பணிக்கு மாத தொகுப்பூதியம் ரூ.20,000/-யும், அலுவலக உதவியாளர் பணிக்கு தொகுப்பூதியம் ரூ.13,000/- ஆகிய மூன்று பணியிடங்களை தொகுப்பூதிய வழங்கப்படும்.
உதவியாளர் உடன் இணைந்த அமர்வு எழுத்தர் பணிக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகம் ஒன்றில், 10+2+3 அல்லது 11+1+3 என்ற கல்வி முறையில் அறிவியல், கலை, வணிகவியல், பொறியியல், மருத்துவம் அல்லது வேறு ஏதேனும் ஒரு துறையில் பெறப்பட்ட இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். இப்பணிக்கு நேரடி நியமனம் செய்யப்படும்போது, தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தால் (Directorate of Technical Education) நடத்தப்படும் 'Computer on Office Automation' பயிற்சியில் தேர்ச்சி பெற்றவர்களுக்கோ அல்லது அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றில் கணினி தொடர்பான பட்டயம் (Diploma) அல்லது பட்டப்படிப்பு (Degree) முடித்தவர்களுக்கோ முன்னுரிமை அளிக்கப்படும்.
இளநிலை உதவியாளர் உடன் இணைந்த பதிவேடு எழுத்தர் பணிக்கு அரசு அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில் 10-ஆம் வகுப்பு (SSLC) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது அதற்கு இணையான தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.அலுவலக உதவியாளர் பணிக்கு அரசு அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில் எட்டாம் வகுப்பு (VIII) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேற்கண்ட பணிக்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மேலும் உரிய விண்ணப்பங்களை அதிகாரப்பூர்வ இணைய தளமான www.virudhunagar.nic.in லிருந்து பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். இப்பதவிகளுக்கான தகுதியுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் உரிய சான்றுகளுடன் “மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், 5-ஆவது தளம், அறை எண்.503, விருதுநகர்- 626002 தொலைபேசி எண். 04562-293946” என்ற முகவரிக்கு 25.09.2026 அன்று மாலை 5.30 மணிக்குள் வந்து சேரும் வகையில் அனுப்பப்பட வேண்டும். மேற்குறிப்பிட்ட தேதிக்குப் பின்வரும் விண்ணப்பங்கள் தகவலின்றி நிராகரிக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply