தந்தை பெரியார் நினைவு சமத்துவபுரம் மற்றும் ஒட்டுமொத்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் நிதி திட்டத்தின் கீழ் ஊராட்சி ஒன்றிய பேருந்து நிலையம்
விருதுநகர் மாவட்டம், திருச்சுழி பேருந்து நிலைய அமைவிடத்தில் நடைபெற்ற விழாவில், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்., I A S., அவர்கள் தலைமையில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில், ரூ.6.20 கோடி மதிப்பில் தந்தை பெரியார் நினைவு சமத்துவபுரம் மற்றும் ஒட்டுமொத்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் நிதி திட்டத்தின் கீழ் ரூ.5.60 கோடி மதிப்பில் ஊராட்சி ஒன்றிய பேருந்து நிலையம் அமைப்பதற்கும்,நரிக்குடி ஊராட்சி ஒன்றியம் ஆணைக்குளம் அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில், ரூ.1.31 கோடி மதிப்பில் விடுதிக் கட்டடம் கட்டுவதற்கும் நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.தங்கம்தென்னரசு அவர்கள் (19.09.2024) அடிக்கல் நாட்டினார்.பின்னர், மல்லாங்கிணரில் நடைபெற்ற விழாவில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில், ரூ.30.81 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள மல்லாங்கிணறு வருவாய் ஆய்வாளர் அலுவலகம் மற்றும் குடியிருப்பினையும், மண்டபசாலையில்(இருப்பு) ரூ.30.84 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள ரெட்டியபட்டி வருவாய் ஆய்வாளர் அலுவலகம் மற்றும் குடியிருப்பினையும் நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.தங்கம்தென்னரசு அவர்கள் திறந்து வைத்தார்.
மேலும், மாவட்டத்தில் உள்ள 27 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் 100 துணை சுகாதார நிலையங்களுக்கு சமூக பொறுப்புணர்வு நிதியின் கீழ் ரூ.34 இலட்சம் மதிப்பில் மருத்துவ உபகணரங்களை (Vertical Autoclave Machine, ECG Machine, Semi Auto Analyser, Glucometer with Strips, Rediant Warmer, Fowler Cart) நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.தங்கம்தென்னரசு அவர்கள் வழங்கினார்.கன்னிச்சேரி புதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், அறுவை அரங்கம் தொடர்ச்சியாக செயல்படுத்தும் வகையில், அறுவை சிகிச்சை மேற்கொள்ள அறுவை சிகிச்சை மருத்துவர் மற்றும் மயங்கவியல் மருத்துவர்களை பணியமர்த்தும் கட்டணத்தை சமூக பொறுப்புணர்வு நிதியின் கீழ் ரூ.6.44 இலட்சத்திற்கான காசோலையினை வட்டார மருத்துவ அலுவலரிடம் நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.தங்கம்தென்னரசு அவர்கள் வழங்கினார்.
திருச்சுழி ஒன்றியப்பகுதியில் நீண்ட நெடுங்காலமாக மக்களுடைய கோரிக்கையாக இருந்து வந்த பெரும் திட்டங்களுக்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.திருச்சுழி பகுதியானது இன்றைக்கு வேகமாக முன்னேற்றம் காணக்கூடிய வளர்ந்து வரும் தொகுதியாக இருந்து வருகிறது. ஒரு காலத்தில் சாலைகள் இல்லாமல் இருந்த இந்த பகுதி, தற்போது ஒவ்வொரு கிராமம் மற்றும் நகரங்களுக்கு இடையில் மாவட்ட சாலைகள் மற்றும் மாநில நெஞ்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.திருச்சுழி தொகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மருத்துவமனை, தொழிற்பயிற்சி நிலையம், சமூக சுகாதாரக் கூடங்கள், மகளிர் காவல் நிலையங்கள் என அனைத்து வசதிகளிலும் முன்னேறி இருக்கக்கூடிய பகுதியாக மாறி வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்தில், ரூ.6.20 கோடி மதிப்பில் புதிய 100 சமுதாய வீடுகள், சமுதாயக் கூடம், நூலகம், குழந்தை நல மையம், விளையாட்டு மைதானம், பூங்கா, சாலை, குடிநீர் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் பிறப்பால் அனைவரும் சமம் என்ற எண்ணத்தை உருவாக்கிய தந்தை பெரியார் அவர்களின் பெயரில் சமத்துவபுரம் அமைக்கவும், திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.5.60 கோடி மதிப்பில் 1097.22 சதுர மீட்டர் பரப்பளவில் பேருந்து நிற்கும் இடம், கடைகள், ஓய்வறை, மழைநீர் வடிகால், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, இருசக்கர வாகன நிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் ஊராட்சி ஒன்றிய பேருந்து நிலையம் அமைப்பதற்கும் அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.மேலும், மல்லாங்கிணறு மற்றும் ரெட்டியபட்டியில்(மண்டபசாலையில்-இருப்பு) அலுவலக அறை, பொது அறை, உணவு அருந்தும் அறை, சமையல் அறை, படுக்கை அறை, காத்திருப்போர் அறை, கழிப்பறை உள்ளிட்ட வடதிகளுடன் கட்டப்பட்டுள்ள வருவாய் ஆய்வாளர் அலுவலகம் மற்றும் குடியிருப்புகள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.
மேலும், இப்பகுதியில் சாலைகளாக இருந்தாலும் சரி, குடிநீராக இருந்தாலும் சரி அல்லது ஒவ்வொரு கிராமங்களுக்கும் இருக்கக்கூடிய அனைத்து அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் என அனைத்தையும் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறோம்.
தந்தை பெரியார் நாட்டிலேயே சாதி, சமய வேறுபாடுகளை உரித்து, சமதர்மத்தை மேம்படுத்த வேண்டும். அனைவரும் பிறப்பின் அடிப்படையில் இருக்கக்கூடிய வேறுபாடுகளை உரித்து எல்லோரும் நாம் மனித குலம், அனைவருக்கும் சமவாய்ப்புகள் என்று நம் அனைவரையும் தலை நிமிர செய்திருக்கக் கூடிய தந்தை பெரியார் நினைவு சமத்துவபுரம் உருவாக்க அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. ஊராட்சி ஒன்றிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்படும்.தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அரசு உங்களைத்தேடி உங்கள் ஊரில், மக்களுடன் முதல்வர் உள்ளிட்ட திட்டங்களின் மூலம் மக்களின் இருப்பிடத்திற்கே சென்று அரசு சேவைகளை வழங்கி வருகிறது. இதுபோன்ற மக்களுக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் அரசு தொடர்ந்து செயல்படுத்தும் என அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.
பொருளாதாரத்தில் இன்னும் பல்வேறு உயர்வுகளை அடைவதற்குடைய வாய்ப்புக்களை பெற்றிருக்கும் இந்த பகுதியின் உடைய பொருளாதார வளர்ச்சிக்கும், சமூக வளர்ச்சிக்கும் முக்கியமாக இருப்பது உட்கட்டமைப்பு வசதிகள். சாலைகள், பள்ளிகள், கல்லூரிகள், புதிய பேருந்து வழித்தடங்கள் என்று ஒரு பகுதியினுடைய பொருளாதார வளர்ச்சிக்கு இதுபோன்று உட்கட்டமைப்புகள் தான் இன்றியமைதாதது. மக்கள் தொகை அடர்த்தி குறிப்பிட்ட அளவு இருந்தால்தான், அந்த பகுதிக்கென்று மக்கள் தொகைக்கேற்ப ஆரம்ப சுகாதார நிலையம், பேருந்து நிலையம் உள்ளிட்ட வசதிகள் வரும். ஆனால் இந்தப் பகுதியில் மக்கள் தொகை அடர்த்தி குறைவாக இருந்தாலும், அதற்குரிய அரசு விதிமுறைகளில் உரிய விதிவிலக்குகளை பெற்று, இந்த பகுதிக்கென்று புதிய ஆரம்ப சுகாதார நிலையங்களையும், புதிய பேருந்து வழித்தடைகளையும் மாண்புமிகு அமைச்சர் அவர்களின் முயற்சியால், இப்பகுதியில் அதிகமாக கிடைக்கப்பெற்றிருக்கிறது.நீண்ட கால கோரிக்கையான திருச்சுழியில் அரசு கலைக் கல்லூரி கட்டப்பட்டு செயல்பட்டு வருகிறது. மேலும், இந்த ஆண்டு புதிதாக அங்கு மாணவர்கள் விடுதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அந்த பணிகள் தற்போது துவங்கப்பட்டுள்ளது.
மேலும், திருச்சுழி ஊராட்சி பேருந்து நிலையம், தந்தை பெரியார் சமத்துவபுரம் உள்ளிட்ட பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகள் மூலமாக இந்த பகுதி எதிர்காலத்தில் சிறந்த பொருளாதார வளர்ச்சியடையவும், இந்த பகுதி மக்கள் சிறந்த பொருளாதார வாழ்க்கை முன்னேற்றம் பெறுவதற்கும் இது போன்ற திட்டங்கள் உதவியாக இருக்கும்.இதுபோன்ற திட்டங்கள் உரிய காலகட்டத்திற்குள் விரைந்து நிறைவேற்றி, இதை தரமாகவும் அதே நேரத்தில் விரைவாகவும் முடிக்க மாவட்ட நிர்வாகம் மூலம் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், திட்ட இயக்குநர்(மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) மரு.தண்டபாணி, விருதுநகர் மாவட்ட சுகாதார அலுவலர் மரு.யசோதாமணி, அருப்புக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் திரு.வள்ளிக்கண்ணு, உதவி செயற்பொறியாளர் திருமதி அனிதா, திருச்சுழி ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவர் திரு.பொன்னுத்தம்பி, நரிக்குடி ஊராட்சி ஒன்றியக் குழுத்தலைவர் திருமதி காளீஸ்வரி, காரியாபட்டி பேரூராட்சி தலைவர் திரு.செந்தில், மல்லாங்கிணறு பேரூராட்சித் தலைவர் திரு.துளசிதாஸ், மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் திரு.கமலி பாரதி, தங்கதமிழ்வாணன், திரு.சிவக்குமார், திருச்சுழி ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் திரு.சந்தனபாண்டியன், முக்கிய பிரமுகர்கள், வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சிமன்றத்தலைவர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள், உட்பட அரசு அலுவலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply