சிவகாசி வட்டத்தில் "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" என்ற திட்டத்தின் கீழ், அரசின் திட்டங்கள் மற்றும் சேவைகள் பொதுமக்களிடம் சென்றடைவது குறித்து கள ஆய்வு
மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட அளவிலான அலுவலர்கள் மக்களை தேடிச்சென்று குறைகளைக் கேட்டறியவும், பல்வேறு துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள், செயல்பாடுகளை விரைவுபடுத்தவும் மற்றும் வழங்கப்படும் சேவைகளின் தரத்தை மேம்படுத்தவும், மக்களை நாடி மக்கள் குறைகளைக் கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே சென்று ஆய்வு செய்திட "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" என்ற புதிய திட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டத்தில் "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" என்ற புதிய திட்ட முகாமானது 18.07.2024 இன்று காலை 9 மணி முதல் மறுநாள் 19.07.2024 அன்று காலை 9 மணி வரை நடைபெறவுள்ளது. இந்த முகாமின் கீழ், பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் அரசின் திட்டங்கள், செயல்பாடுகளை விரைவுபடுத்தவும் மற்றும் வழங்கப்படும் சேவைகளின் தரத்தை மேம்படுத்தவும் கள ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.அதனடிப்படையில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் இன்று சிவகாசி சிறுகுளம் கண்மாயில் நடைமேடை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டு பணிகளின் தரம் குறித்து ஆய்வு செய்தார்.பின்னர், சிவகாசி நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தினை பார்வையிட்டு, அங்கு உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களிடம் சிகிச்சை முறைகள், அடிப்படை வசதிகள் குறித்தும் கேட்டறிந்து ஆய்வு செய்தார். மேலும், மகபேறு அடைந்த தாய்மார்களுக்கு தாய் சேய் நல பரிசு பெட்டகங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.
அதனை தொடர்ந்து, அண்ணா காலனியில் செயல்பட்டுவரும் அங்கன்வாடிக்கு நேரில் சென்று அங்கு பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படும் ஊட்டசத்து உணவுகள், வயதிற்கேற்ற உயரம், எடை உள்ளிட்டவைகள் குறித்து கேட்டறிந்து ஆய்வு செய்தார்.
பின்னர், சிவகாசி சார்பாவதிவாளர் அலுவலகத்தினை பார்வையிட்டு, அங்கு பராமரிக்கப்படும் பதிவேடுகள், கோப்புகளை கணினியில் பதிவேற்றம் செய்தல் குறித்து ஆய்வு செய்தார்.சிவகாசி மாநகராட்சி அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் இ-சேவை மையத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்து, பொதுமக்களிடமிருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் மற்றும் வழங்கப்படும் சேவைகளுக்காக பெறப்படும் கட்டண விவரங்கள் குறித்து கேட்டறிந்தார்.
பின்னர், சிவகாசி கிராம நிர்வாக அலுவலகத்திற்கு சென்று பார்வையிட்டு அங்கு பராமரிக்கப்படும் கிராம கணக்குகள், பதிவேடுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு செய்தார்.சிவகாசி நகர காவல் நிலையத்தினை நேரில் சென்று பார்வையிட்டு நகரப்பகுதிகளில் சட்டம் ஒழுங்கு, குற்றச்சம்பவங்களின் எண்ணிக்கை, அதன் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள், சாலைபாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்து ஆய்வு செய்தார்.
சிவகாசி தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்து, நிலையத்தின் செயல்பாடுகள், ஊர்தி மற்றும் உபகரணங்களின் பராமரிப்பு, தீயணைப்பு வீரர்களுக்கு வழங்கப்படும் பயிற்சிகள், நிலையத்தில் உள்ள வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.பின்னர், சிவகாசி துணைமின் நிலையத்தை பார்வையிட்டு, நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்து, மின் உபகரணங்களை முறையாக பராமரிப்பு செய்து, தடையில்லா மின்சாரம் வழங்குவதை உறுதி செய்ய அலுவலர்களை அறிவுறுத்தினார்.
அதனை தொடர்ந்து, சிவகாசி முஸ்லீம் துவக்கப்பள்ளியை பார்வையிட்டு, கற்பிக்கும் முறைகள், அடிப்படை வசதிகள் குறித்தும், மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவின் தரம் குறித்து ஆய்வு செய்து, மாணவர்களுடன் உணவருந்தினார்.அதனை தொடர்ந்து, ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், அனைத்து ஊராட்சிகளில் மேற்கொள்ள வேண்டிய குடிநீர், சுகாதாரம் மற்றும் சாலைப் பணிகள், அரசின் திட்டங்கள் மற்றும் சேவைகள் உரிய பயனாளிகளை சென்றடைவதை உறுதி செய்வது குறித்து அனைத்து அரசு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கா.பெரோஸ்கான் அப்துல்லா அவர்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில், வெடி விபத்தில் காயமடைந்த 10 நபர்களுக்கு தலா 1 இலட்சம் வீதம் மொத்தம் ரூ.10 இலட்சம் மதிப்பிலான காசோலைகளை மாவட்ட ஆட்சித்தலைவர்கள் அவர்கள் வழங்கினார்.
0
Leave a Reply