வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் பராமரிப்பு குறித்த இலவச கட்டணமில்லா பராமரிப்பு மேளா
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், வேளாண் பொறியியல் துறையின் மூலமாக (26.07.2024) வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் பராமரிப்பு குறித்த இலவச கட்டணமில்லா பராமரிப்பு மேளாவினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,I A S அவர்கள் துவக்கி வைத்தார்.
வேளாண் இயந்திரங்களை முறையாகப் பராமரித்தால் தான் அவற்றின் பணித்திறன் மேம்பட்டு, நீண்ட கால பயன்பாட்டிற்கு உழவு பணிகளில் ஈடுபடுத்த இயலும்.டிராக்டர்களை பராமரிக்கும் வழிமுறைகள், வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை இயக்குதல், பழுதுகளைக் கண்டறிதல், உதிரிபாகங்கள் குறித்த தெளிவுரை, உயவுப் பொருட்கள் பயன்பாடு உள்ளிட்டவை பற்றியும் விவசாயிகள் அனைவரும் அறிந்து கொண்டார்கள்.
வேளாண் இயந்திரங்கள், கருவிகளை திறம்பட இயக்குதல் மற்றும் பராமரிக்கும் வழிமுறைகளையும் விவசாயிகள் தெரிந்து கொள்ளும் வகையிலும், இம்முகாம் இன்று நடைபெற்றது.பின்னர், இம்முகாமில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் தயாரிக்கும் நிறுவனங்களின் பொறியாளர்கள் டிராக்டர்களுடன் உபகரணங்களைப் பொருத்தி இயக்கிடும் செயல்முறை விளக்கத்தினை செய்து காண்பித்தார்கள்.மேலும், வேளாண்மைப் பொறியியல்துறையில் பணித்தளத்திலேயே பழுதுநீக்கம் செய்து தரும் வண்ணம் அறிமுகப்படுத்தப்பட்டு, விவசாயிகளும் பயன்பெறும் வகையில் செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.
வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் தயாரிக்கும் நிறுவனங்களின் பொறியாளர்களுடனும், அலுவலர்களுடனும் தங்களது சந்தேகங்களை விவசாயிகள் நேரில் கலந்துரையாடி தெரிந்து கொண்டார்கள் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ராஜேந்திரன், வேளாண்மைத்துறை இணை இயக்குநர் திருமதி க.விஜயா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் திருமதி நாச்சியார் அம்மாள், வேளாண்மைத்துறை செயற்பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள்,வேளாண் பொறியியல் மற்றும் தொழிற்பயிற்சி மாணவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply