தர்ம சிந்தனை
தர்மம் செய்தல் என்பது பணம் இருந்தால்தான் செய்ய முடியும். 1 ஆம் தேதி சம்பளம் வாங்குவதற்குள் 30 ஆம் தேதி வரை சிரமப்பட்டு ஓட்டுகின்ற குடும்பத்தினர் தர்மசிந்தனையாவது தர்மமாவது என்று விட்டு விடுகின்றனர். 'தனக்குப் போகத் தானம் செய் என்பதை கெட்டியாக பிடித்துக் கொள்கின்றனர். இது தவறான எண்ணம் ஆகும்.
தர்மம் என்பது பணத்தால்தான் முடியும் என்பதே கிடையாது. மனதால் தான் உள்ளது. எது தர்மம் என்று தெரியாமலே பலர் இருக்கின்றனர். உன் வீட்டின் அருகில் ஒரு தர்மசிந்தனை உள்ளவன் மரக் கன்றுகளை நட்டு வைக்கிறான் அதற்கு நாம் தண்ணீர் ஊற்றினால் அது தர்மம். அவன்தானே வைத்தான் என்று நாம் திருப்பிப் பார்க்காமல் இருப்பது அதர்மம். ஒருமுதியவர் கஷ்டப்பட்டு பாரத்தை சுமந்து சென்று கொண்டிருக்கிறார், அவரைப் பார்த்துக் கொண்டே அதே வழியில் செல்லும் இளைஞன் ,அந்த பாரத்தை அவன் செல்லும் வழி வரையாவது தூக்கினால் அது தர்மம்.
என்னதான் உனக்கு கஷ்டம் இருப்பினும் பணத்தால் முடியாவிட்டால் மனதளவில் என்ன முடியுமோ அதைச் செய்தால், அது பெரிய தர்மம். பிறருக்கு உதவும் மனப்பான்மையை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும். கணவனை இழந்த பெண் தன் குழந்தைகளை வைத்துக் கொண்டு கஷ்டப்படுகிறாள் என்றால், அந்த தெருவில் உள்ள அனைவரும் அவளுடைய ஜீவனத்திற்கு தங்களால் ஆன பல உதவிகளைச் செய்தால், அந்த நன்றி கலந்த பார்வையினால் ஏற்படும் திருப்திக்கு ஆயிரம் கோடி கொட்டிக் கொடுக்கலாம். பிரதி பலன்களை எதிர்பார்க்காமல் உதவ வேண்டும் என்ற தர்மசிந்தனைகளை நம்மிடம் கூடக்கூட நம்முடைய ஆத்மா சுத்தமடைகின்றது.
ஆத்மா சுத்தமடைய அடைய உங்களுடைய எண்ணங்களும் நல்ல எண்ணங்களாக பிரகாசிக்கும். பகைவனாக இருந்தாலும் தர்மம் செய்தால் நாமும் பகைமை மறந்து விடுவோம். அவர்களும் நம்மிடம் அபரிதமான பாசக்கரம் நீட்டுவார்கள். கெடுதல் செய்தவர் நம்மைப் பார்த்து உங்களுக்கு நான் தீமை செய்தேனே என்று வெட்கப்படும் அளவிற்கு நன்மை செய்ய வேண்டும். தர்மத்தை ஜாதி, மதம், பேதம், நேரம், குணம், தரம் என்று பார்க்காமல் செய்வது தெய்வ சேவைக்கு சமமானது.
0
Leave a Reply