மாநில நெடுஞ்சாலைகளில் அனுமதியின்றி வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்படும் பட்சத்தில், வேகத்தடைகளை அமைத்த அமைப்பினர் / தனி நபர் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் மாநகராட்சி, நகராட்சி மற்றும் ஊரக பகுதிகளில் உள்ள சாலைகளில் பொதுமக்கள் சிலர் தன்னிச்சையாக வேகத்தடைகளை சட்டவிரோதமாக அரசு அனுமதியின்றி அமைத்துள்ளார்கள் என்றும், வேகத்தடைகள் உரிய அளவீட்டின்படி அமைக்கப்படாத காரணத்தினால் பல விபத்துகள் ஏற்பட்டு, அதனால் உயிர்சேதங்களும், கொடுங்காயங்களும் ஏற்படுகின்றன என்றும், முறையற்ற வேகத்தடைகளை தொடர்ச்சியாக கடந்து செல்லும் வாகன ஒட்டிகளுக்கு முதுகுதண்டுவடம் மற்றும் இடுப்பு பகுதிகளில் பாதிப்புகள் ஏற்படுகின்றன என்றும், மேலும் இதனால் வாகனத்திலும் பழுதுகள் ஏற்படுகின்றன எனத் தெரிவித்து, உரிய அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ள வேகத்தடைகளை அகற்ற வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு தொடர்ச்சியாக புகார்கள் வந்தவண்ணம் உள்ளன.
மேற்படி, புகார்களின் அடிப்படையில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மாநில நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடைகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க மாவட்ட ஆட்சியர் அவர்களால் கோரப்பட்டதற்கு மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள 255 வேகத்தடைகளில் 46 இடங்களில் வேகத்தடைகள் போக்குவரத்திற்கு இடையூறாக விபத்து ஏற்படுத்தும் வகையிலும், மேலும் ஆம்புலன்ஸ் போன்ற அவசர வாகனங்கள் செல்லுவதற்கும் தடை ஏற்படுத்தும் வகையிலும் உள்ளதாக நெடுஞ்சாலைத்துறையினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் ஊரக பகுதிகளில் உள்ள 672 வேகத்தடைகளில், உரிய அளவீட்டின்படி இல்லாத வேகத்தடைகளையும், போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள வேகத்தடைகளையும் கண்டறிய மாவட்ட ஆட்சியர் அவர்களால் உதவி இயக்குனர்(ஊராட்சிகள்) மூலமாக குழுக்கள் அமைக்கப்பட்டு, மேற்படி வேகத்தடைகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.
Indian Road Congress(IRC) அளவீட்டின்படி இல்லாத வேகத்தடைகளையும், அவசியமற்ற இடங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள வேகத்தடைகளையும், போக்குவரத்திற்கு இடையூறாக விபத்து ஏற்படுத்தும் வகையிலும், மேலும் ஆம்புலன்ஸ் போன்ற அவசர வாகனங்கள் செல்லுவதற்கும் தடை ஏற்படுத்தும் வகையிலும் உள்ள வேகத்தடைகளை சம்மந்தப்பட்ட துறையினர், வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினருடன் ஒத்துழைப்புடன் அகற்றிட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அவர்களால் உத்தரவிடப்பட்டுள்ளது.
வேகத்தடைகள் அவசியமாக தேவைப்படும் இடங்களில், வேகத்தடைகளுக்கு பதிலாக Rumble stripe அமைக்கலாமா என்பது குறித்து ஆய்வு செய்தும், சாலை பாதுகாப்பிற்கு வேகத்தடை அமைக்க வேண்டிய அவசியமான நேர்வுகளில் மாவட்ட சாலைப்பாதுகாப்பு குழுக்கூட்டத்தில் விவாதப்பொருளாக வைத்து ஒப்புதல் பெற்ற பின்புதான் சம்மந்தப்பட்ட துறையினர் Indian Road Congress(IRC) அளவீட்டின்படி வேகத்தடைகளை அமைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அவர்களால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.வேகத்தடைகள் ஆனது Indian Road Congress – 99-1988-ல் குறிப்பிட்டுள்ள விதிமுறைகளின்படி அமைக்கப்பட வேண்டும்.அதாவது அகலம் 3.7 மீட்டர், நடு மையம் 10 செ.மீ மற்றும் வட்டம் 17 மீட்டர்(ரேடியஸ்) என்ற அளவில் தான் அமைக்கப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அவர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில், சாலைகளில் உரிய அனுமதியின்றி வேகத்தடைகள் அமைக்க கூடாது என்றும், அவ்வாறு அனுமதியின்றி வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்படும் பட்சத்தில், வேகத்தடைகளை அமைத்த அமைப்பினர் /தனி நபர் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகள் சம்மந்தப்பட்ட துறையினர் மூலமாக மேற்கொள்ளப்படும் என்றும், மேலும் அனுமதியின்றி வேகத்தடையினை அமைத்த அமைப்பினர் / தனி நபர் ஆகியோர்களின் சொந்த செலவிலேயே வேகத்தடைகளை அகற்ற உரிய நடவடிக்கைகள்மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்., I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply