இராஜபாளையம் ஸ்ரீரமண வித்யாலயா மாண்டிசோரி பதின்ம மேல்நிலைப்பள்ளியில்இலக்கிய மன்ற தொடக்க விழா
விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் ஸ்ரீரமண வித்யாலயா மாண்டிசோரி பதின்ம மேல்நிலைப்பள்ளியில் (11.09.2024) இலக்கிய மன்ற தொடக்க விழா மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன். I A S , அவர்கள் தலைமையில் நடைபெற்றது.பாடப்புத்தகங்களில் இல்லாததையும், உங்களுடைய கற்பனைகளின் இருக்கக்கூடியவற்றை மொழியாக மாற்றுவதற்கும் நீங்களும் முயல வேண்டும் என்பதற்குத்தான் இலக்கிய மன்றம் துவங்கப்படுகிறது.
இலக்கியம் போன்று பெரிய நூல்கள், இலக்கண விதிகளின் அடிப்படையில் எடுத்துக் கொண்ட பாடல்கள் மட்டுமல்ல ஒரு சாதாரண கதை அந்த கதை இந்த சமூகத்தில் ஏற்படுத்தக்கூடிய தாக்கம் மிகப்பெரிய இலக்கியமாக இருக்கும்.மிகச் சாதாரணமான கதையில் ஒரு சமூகத்தின் அவல நிலையை சொல்ல முடியும். எதை நீங்கள் கோபமாக பார்க்கிறீர்களோ அந்த கோபத்தை ஒரு கதையாக கொண்டு வர முடியும். நீங்க எந்த ஒன்றை மிக விசித்திரமாக நோக்குகிறீர்களோ அதை ஒரு கவிதை வடிவில் மாற்ற முடியும்.மனிதன் வாழக்கூடிய வாழ்க்கையை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வது தான் இலக்கியம். இந்த வாழ்க்கையை எளிமையாக, பிரச்சினை இல்லாமல் வாழ்வதற்கு தேவையான எல்லா வழிகாட்டுதலும் கிடைத்து விடுமா என்றால் இல்லை. அப்போது நம் முன்னோர்களும், இலக்கியமும் நமக்கு வழிகாட்டுகிறது.
இலக்கியம் என்பது படைப்பு இலக்கியங்கள், கற்பனை இலக்கியங்கள் மட்டுமல்ல. எந்த ஒன்றையும் பதிவு செய்து வைத்திருந்தால் அதுவும் இலக்கியம். அப்படிப்பட்ட அந்த இலக்கிய மரபின் தொடர்ச்சியில் நாம் வாழக்கூடிய காலகட்டத்தில் நாம் எதிர் கொள்ளக்கூடிய சிக்கல்களை, சிக்கல் இல்லாமல் வாழ்வதற்கு வழி காட்டுவது இலக்கியம். ஒரு சிறிய கவிதை, ஒரு திருக்குறள் மனிதருடைய சிந்தனையையும், மனிதர்களுக்கு தேவையான வாழ்க்கையையும் அப்படியே மாற்றும்.
ஒரு வாழ்க்கையில் எந்தெந்த விழுமியங்களை எல்லாம் நம் சார்பாக கடைபிடிக்க வேண்டும். அறிவியல் சிந்தனையோடு நாம் எப்படி செயல்பட வேண்டும். மற்றவர்களின் மாற்றுக் கருத்துக்கு எவ்வாறு மதிப்பளிக்க வேண்டும். இப்படி எல்லாவற்றையும் சொல்லித் தந்து மனிதனை மனிதனாக ஆக்குவது தான் இலக்கியம். இதை பாடப் புத்தகம் முழுமையாக செய்ய முடியாது. இலக்கியம் என்பது மிகப்பெரிய பாடநூலோ, புரியாத கவிதை நூல்களோ அல்ல. மிக எளிமையாக சொல்வதும் இலக்கியம்தான். எனவே இந்த இலக்கிய மன்றத்தின் உடைய நோக்கம் என்பது நீங்களும் அவ்வப்போது வாசிக்க வேண்டும். வாசிப்பதன் மூலமாக அதில் இருக்கக்கூடிய சிறிய சொற்கள் மூலம் நாமும் ஒரு நான்கு வரியில் ஏதாவது ஒன்றை குறித்து எழுத முடியுமா என்று முயற்சிப்பது தான்.
இந்த சமூகப் பார்வை எப்படி இருக்கிறது. இந்த சமூகத்தில் நம்மை சுற்றி நடக்கக்கூடிய அவலங்களின் மீது நம்முடைய பார்வை என்ன. நாளை நீங்கள் இந்த சமூகத்தில் மிக முக்கியமான நபராக எந்த தொழிலை மேற்கொண்டாலும். ஒரு மருத்துவராக, விஞ்ஞானியாக, எழுத்தாளராக, ஒரு அறிவியல் நிபுணராக, அரசு அலுவலராக நீங்கள் எந்த சூழ்நிலையில் இருந்தாலும், அந்த சூழ்நிலையில் இந்த சமூகத்தை நீங்கள் பார்த்த அவலங்களை மாற்றுவதற்கு ஏதேனும் வாய்ப்பிருக்கிறீர்களா என்பது குறித்து, உங்களை இப்போது இருந்து யோசிக்க வைப்பதற்கு தான் இலக்கியம். அப்படிப்பட்ட இலக்கியத்தை நீங்கள் தொடர்ச்சியாக வாசிப்பதற்கு இந்த இலக்கிய மன்றம் பயன்படும் என நம்புகிறேன் என தெரிவித்தார்.
பின்னர், இப்பள்ளியில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பரிசுகளை வழங்கினார்.மேலும் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகள் எழுப்பிய பல்வேறு கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் விளக்கமளித்தார்.இந்நிகழ்ச்சியில், பள்ளி முதல்வர், ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply