தேனி மாவட்டத்தில் உள்ள கொழுக்குமலை சுற்றுலா
தமிழ்நாட்டில் கேரள எல்லையை ஒட்டி உள்ள தேனி மாவட்டத்தில் உள்ள கொழுக்குமலை சுற்றுலா தலத்திற்கு கேரளா வழியாகவே போக முடியும்.. இப்போது போனால் ரம்மியான அதன் சூரிய உதயம் மற்றும் காலநிலையை கண்டு மெய்சிலிர்க்கலாம்.கேரளாவின் இடுக்கி மாவட்டம் சூரியநல்லி அருகே கொழுக்குமலை என்ற அழகிய கிராமம் மிகப்பெரியமலை சிகரங்களுடன் குளுகுளு கால நிலையில் அமைந்துள்ளது. இந்த கிராமத்திற்கு கேரளா வழியாக மட்டுமே வாகனங்களில் உங்களால் போக முடியும் . ஆனால் இது தமிழ்நாட்டின் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தாலுகாவுக்கு உட்பட்டது.போடிமெட்டிலிருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள சூர்யநெல்லிக்கு உங்கள் சொந்த வாகனங்களில் போக முடியும். ஆனால் காரை அங்கு நிறுத்திவிட்டு, அங்குள்ள ஜீப்பில் பயணித்து மட்டுமே உங்களால் கொழுக்குமலையை அடைய முடியும்.
வானமே வசீகரித்து சூரியனை நீல ஒளி வீச வைக்கும் இடம்.. பச்சை பசேலென தேயிலை தோட்டங்கள் பனி மூட்டத்தில் ஒளிந்து கொண்டிருக்கும் கொழுக்குமலை தான் ஆசியாவின் மிக உயரமான தேயிலை தோட்டம் அமைந்துள்ள பகுதியாகும். மூணாறுக்கு யார் வந்தாலும் கண்டிப்பாக வரக்கூடிய பகுதி தான் கொழுக்குமலை. கொழுக்குமலைக்கு மாலைக்குள் போய் இரவில் தங்கி சூரிய உதயத்தை இங்கு காண கோடி கண்கள் வேண்டும். கொழுக்குமலை கடல் மட்டத்திலிருந்து சுமார் 7130 அடி உயரத்தில் அமைந்துள்ளது. மூணாறிலிருந்து சுமார் 32 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. கொழுக்குமலை இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற டிரக்கிங் தலம் ஆகும். கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருவார்கள் . ஆனால் கொழுக்குமலையில் ஒரே ஒரு தங்கும் விடுதி தான் உள்ளது. இந்த இடத்தில் புக்கிங் செய்தவர்கள் தான் தங்க முடியும்.
கொழுக்குமலை போகிறவர்கள் அப்படியே மூணாறில் இருந்து 42 கிலோ மீட்டர் தூரத்தில் பூம்பாறை அருகே அமைந்துள்ள சந்தாம்பாறைக்கும் சென்று வருவார்கள் . சாந்தாம்பாறை பகுதியிலிருந்து சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்தில் சதுரங்க பாறை என்ற சுற்றுலாத்தலம் அமைந்துள்ளது... இங்கிருந்து ஒருபக்கம் தமிழ்நாட்டையும் மறுபக்கம் கேரளாவையும் பார்க்க முடியும். குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள தேனி மாவட்டம் மாவட்டத்தின் மொத்த அழகையும் ரசிக்க முடியும்.இந்த சதுரங்கப்பாறை கிராமத்திற்கு பூம்பாறை அல்லது சூரிய நெல்லியில் இருந்து ஜீப் மூலமாக போகலாம். கொழுக்குமலையில் காலையில் சூரிய தரிசனத்தை பார்த்துவிட்டு மலைகளை ரசித்துவிட்டு மதியம் சூரிய நெல்லி வந்து அங்கிருந்து ஜீப் மூலம் சதுரங்கப்பாறைக்கு போகலாம். இதேபோல் சதுரங்கப்பாறையை அருகில் ராமக்கல் மேடு என்ற இடமும் உள்ளது. இதுவும் சிறப்பான சுற்றுலா தலம் ஆகும்..
0
Leave a Reply