அனைத்துத் துறை திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்து அரசு உயர் அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் (26.07.2025) அனைத்துத் துறை திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்து அரசு உயர் அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் முன்னிலையில், மாவட்ட கண்காணிப்பு அலுவலர்/தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு கழகத்தின் மேலாண்மை இயக்குநர் திருமதி ஆர்.வி.ஷஜீவனா,I A S., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் வரப்பெற்ற மனுக்கள் குறித்தும், உடனடியாக தீர்வு காணப்பட்ட மனுக்கள் குறித்தும், கலைஞர் மகளிர் உரிமை தொகை தொடர்பாக பெறப்பட்ட மனுக்கள் குறித்தும் கேட்டறிந்து பல்வேறு துறை சார்ந்து பெறப்படும் மனுக்களுக்கு உரிய நாட்களுக்குள் தீர்வு காணுவதற்கு தொடர்புடைய அலுவலர்களை அறிவுறுத்தினார். முதலமைச்சரின் காலை உணவு திட்டம் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் விரிவாக்கம் செய்யப்பட உள்ளதை முன்னிட்டு, நடைபெற்று வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்து தொடர்புடைய அரசு அலுவலர்களிடம் கேட்டறிந்து ஆய்வு செய்தார்.மேலும், முதலமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவாக்கம் திட்டம் தொடங்கப்படுவதற்கு முன்பாக அனைத்து முன்னேற்பாடு பணிகளையும் விரைந்து முடித்து தயார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தினார்.
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் மூலம் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்தார்.மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் மினி பஸ் திட்டத்தின் செயல்பாடுகள், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் புதுமைப்பெண் மற்றும் தமிழ்புதல்வன் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்தும், மருத்தும் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மூலம் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மருத்துவ சேவைகள் குறித்தும், மாவட்ட தொழில் மையத்தின் மூலம் மாவட்டத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர்களுக்கு வழங்கப்படும் உதவிகள், ஆலோசனைகள், சந்தை வாய்ப்புகள், நிதி உதவி, மற்றும் பிற தொழில் நுட்ப உதவிகள் வழங்குவது குறித்தும் கேட்டறிந்து ஆய்வு செய்தார்.விருதுநகர் மாவட்டத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் நடைபெற்று வரும் கூட்டுக் குடிநீர் திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்தார்.
நமக்கு நாமே திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் நடைபெற்று வரும் அறிவியல் பூங்கா அமைக்கும் திட்டப்பணிகள் குறித்தும் அருங்காட்சியகம் அமைக்கும் பணிகள் குறித்தும் கேட்டறிந்து ஆய்வு செய்தார்.பின்னர், தொழிலாளர் நலத்துறையின் மூலம் செயல்பட்டு வரும் நல வாரியம் குறித்தும், நலவாரியத்தின் மூலம் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள் குறித்தும் கேட்டறிந்து ஆய்வு செய்தார்.வைகை ஆற்றினை நீர் ஆதாரமாகக் கொண்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள காரியாபட்டி மற்றும் மல்லாங்கிணறு பேரூராட்சிகளுக்கான ரூ.75.85 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் குடிநீர் திட்டப்பணிகள் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்தார்.
விருதுநகர் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர், சாலை, மின்சார வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் குறித்து நடைபெற்று வரும் திட்டப் பணிகளில் அதிக கவனம் செலுத்தி குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று மாவட்ட கண்காணிப்பு அலுவலர்/தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு கழகத்தின் மேலாண்மை இயக்குநர் அவர்கள் தொடர்புடைய அரசு அலுவலர்களை அறிவுறுத்தினார்.
0
Leave a Reply