சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி கு.ஜெகதீஸ்வரி அவர்கள் இராஜபாளையம் நகராட்சியில், 329 தூய்மை காவலர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை வழங்கினார்.
விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் நகராட்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி கு.ஜெகதீஸ்வரி அவர்கள் (20.06.2026) 329 தூய்மை காவலர்களுக்கு ரூ.6.22 இலட்சம் மதிப்பீட்டில் பாதுகாப்பு உபகரணங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் தலைமையில், வழங்கினார்.நான் உங்கள் வீட்டுப் பிள்ளை. இன்று உங்களால் தான் இந்த நிலையை அடைந்துள்ளேன். அந்த வகையில், மக்களுக்காக பணியாற்றுவது எனது கடமை.
நமது தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்திற்காகவும், பொருளாதார முன்னேற்றத்திற்காகவும் தனது அரசு தனிக்கவனம் செலுத்தும் என அறிவித்துள்ளார்கள்.அந்த வகையில், மக்களுக்கான அரசை நியாயமாகவும், நேர்மையாகவும் ஊழலற்ற அரசாங்கத்தினை உருவாக்குவதில் உறுதியோடு பல்வேறு நலத்திட்டங்களை ஏற்படுத்தி மக்களின் நம்பிக்கையினை காப்பாற்றும் வகையில் செயல்பட்டு வருகிறார்.
அதனடிப்படையில், தூய்மை காவலர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் மேம்பாட்டிற்காக தூய்மை காவலர் நலவாரியம் மற்றும் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மேம்பாட்டுக் கழகத்தின் மூலம், பல்வேறு விதமான நலத்திட்டங்கள், பொருளாதாரம் மற்றும் தொழில் மேம்பாட்டிற்கான கடனுதவிகள், பணியாளர்களின் குழந்தைகளின் கல்விக்கான கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை போன்றவையும், 10 இலட்சம் ரூபாய் வரையிலான விபத்துக் காப்பீட்டுத் திட்டம், 20 ஆயிரம் ரூபாய் இயற்கை மரண உதவித் தொகையும், ஈமச்சடங்கு உதவித்தொகை, கண் கண்ணாடி உதவித்தொகை, மகப்பேறு உதவித் தொகை, முதியோர் ஓய்வூதியம் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும், தூய்மை காவலர்கள் சுய தொழில் புரிந்து தொழில் முனைவோர்களாக முன்னேறும் வகையில், 35 சதவீத மானியத்தில் ஆட்டோ, கார், பல் மருத்துவ கிளினிக், பல்பொருள் அங்காடி, உணவகம் போன்றவை ஏற்படுத்திடவும்,ஆடு, மாடு உள்ளிட்டவைகளை வளர்த்திட 6 இலட்சம் வரையிலான மானிய உதவித்தொகையும், நில உடைமைதாரர்களாக பயன்பெறும் வகையில், நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டத்தின் கீழ், 5 இலட்சம் (அல்லது) 50 சதவீத மானியத்தில் கடனுதவி வழங்கப்படுகிறது.
இராஜபாளையம் நகராட்சியில் 80 நிரந்தர தூய்மை காவலர்களும், 265 ஒப்பந்த தூய்மை காவலர்களும் என மொத்தம் 345 தூய்மை காவலர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதுவரை, 419 தூய்மை காவலர்களுக்கு, தூய்மை காவலர் நலவாரியத்தில் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது.நமது சுகாதாரத்தினை பாதுகாத்திடும் தூய்மை காவலர்களின் நலனை கருத்தில் கொண்டு, அவர்கள் சிறப்பாக பணிபுரியும் வகையில் இன்று சீருடை, காலணி மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படுகிறது. இதனை, பணியின் போது அவரவர் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, நகராட்சி மற்றும் உள்ளாட்சிப் பகுதிகளில் பணிபுரிகின்ற பணியாளர்களின் நலன் கருதி பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.அதன் ஒரு பகுதியாக, இன்றைய தினம் இராஜபாளையம் நகராட்சி பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படவுள்ளது.தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையில் செயல்படுத்தப்படும் அனைத்து நலத்திட்டங்களும் பொதுமக்களை சென்றடையும் வகையில் மாவட்ட நிர்வாகம் செயல்படும் எனத் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், ஆணையாளர் திரு.சே.நாகராஜன், மாவட்ட வழங்கல் அலுவலர் திரு.அமர்நாத், நகர் நல அலுவலர் மரு.ராஜ்குமார் மற்றும் தூய்மை காவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply