வீர தீர செயல்கள் புரிந்தவர்கள் ஜீவன் ரக்ஷா பதக் விருதிற்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இந்திய அரசின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஜீவன் ரக்ஷா பதக் விருதானது வழங்கப்பட்டு வருகின்றது. இவ்விருதானது நீரில் மூழ்கியவரை காப்பாற்றுதல், விபத்துகள், தீ விபத்துகள், மின்சார விபத்துகள், நிலச்சரிவுகள், விலங்குகள் தாக்குதல் மற்றும் சுரங்கங்களில் நடைபெறும் மீட்புப் பணிகள் போன்ற சம்பவங்களில் ஒருவரின் உயிரைக் காப்பாற்றும் மனிதநேயமிக்க செயல்களுக்காக வழங்கப்படுகின்றது.
இவ்விருதானது பின்வரும் மூன்று பிரிவுகளில் வழங்கப்படுகிறது. சர்வோத்தம் ஜீவன் ரக்ஷா பதக் - மீட்பவரின் உயிருக்கு மிகப் பெரிய ஆபத்து நிலவும் சூழ்நிலைகளில், உயிரைக் காப்பாற்றுவதில் காட்டிய அசாத்திய தைரியத்திற்காக வழங்கப்படும் விருதாகும். உத்தம் ஜீவன் ரக்ஷா பதக் - உயிருக்கு மிகுந்த ஆபத்து நிலவும் சூழ்நிலைகளில், உயிரைக் காப்பாற்றுவதில் காட்டும் துணிச்சல் மற்றும் உடனடிச் செயலுக்காக வழங்கப்படும் விருதாகும். ஜீவன் ரக்ஷா பதக் - மீட்பவருக்குக் கடுமையான உடல் காயம் ஏற்பட்ட சூழ்நிலைகளில், உயிரைக் காப்பாற்றுவதில் காட்டும் துணிச்சல் மற்றும் உடனடிச் செயலுக்காக ஜீவன் ரக்ஷா பதக் வழங்கப்படுகிறது.
எனவே, விருதுநகர் மாவட்டத்தினைச் சார்ந்த தகுதி வாய்ந்த நபர்கள் 2026 ஆம் ஆண்டிற்கான ஜீவன் ரக்ஷா பதக் விருதிற்கு விண்ணப்பிக்கலாம். இவ்விருதிற்கு அனைவரும் விண்ணப்பிக்கலாம். மேலும், இராணுவம், காவல் துறை மற்றும் தீயணைப்பு துறையில் பணியாற்றி உயிர்காக்கும் வீர தீர செயல் புரிந்தவர்களும் இவ்விருதிற்கு விண்ணப்பிக்கலாம். இவ்விருதானது 01.10.2024க்கு பின் மீட்பு பணியில் ஈடுபட்டவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும்.
இவ்விருதிற்கான விண்ணப்ப படிவத்தினை https://www.awards.gov.in என்ற இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தினை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், விருதுநகர் மாவட்ட விளையாட்டரங்கத்தில் 14.08.2026 அன்று மாலை 5.00 மணிக்குள் சமர்பித்திட வேண்டும்.
மேலும் விபரங்களுக்கு 04562-225947 அல்லது 7824009970 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S ., அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply