ஆசிரியர் தின விழாவை முன்னிட்டு, மாவட்டத்தில் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பில் 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு பாராட்டு விழா
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் (05.09.2024) ஆசிரியர் தின விழாவை முன்னிட்டு, விருதுநகர் மாவட்டத்தில் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பில் 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு பாராட்டு விழா மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,I A S, அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், 74 அரசுப்பள்ளிகளை சேர்ந்த தலைமையாசிரியர்களும், 51 அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த தலைமையாசிரியர்களும், 65 தனியார் பள்ளிகளை சேர்ந்த தலைமையாசிரியர்களும் என மொத்தம் 190 பள்ளிகளை சேர்ந்த தலைமையாசிரியர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சான்றிதழ்களை வழங்கி, பாராட்டி, வாழ்த்துக்களை தெரிவித்தார்.
ஆசிரியர்கள் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு உயர்கல்வி குறித்த வழிகாட்டுதல் வழங்க வேண்டும். மாணவர்கள் எடுத்த மதிப்பெண்களுக்கு ஏற்ப துறைகளை தேர்ந்தெடுப்பதற்கான வழிகாட்டுதல் மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இதன்மூலம் அந்தந்த பகுதியில் இருக்கக்கூடிய அங்கீகாரம் பெறாத சில கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் சேர்க்கை பெறுவது தவிர்க்க முடியும்.ஆசிரியர்களாகிய நீங்கள் மாணவ, மாணவியர்களுக்கு ஒரு உத்வேகத்தை கொடுக்க வேண்டும். பெற்றோர்களின் விருப்பம் இல்லை என்றாலும், அவர்களின் அனுமதி கிடைக்கவில்லை என்றாலும், பெற்றோர்களுக்கு உயர்கல்வி படிப்பது குறித்த உரிய விளக்கத்தை அளிக்க வேண்டும்.
மேலும், மாவட்டத்தில் உயர்கல்வி சேராமல் இருக்கும் மாணவர்களின் குடும்பங்களில் பொதுவாக 99 சதவிகிதம் அவர்களின் முந்தைய தலைமுறையினர் பட்டதாரிகளாக இருக்க மாட்டார்கள். தற்பொழுதும் உயர்கல்வி படிக்கவில்லை என்றால் இன்னும் அவர்கள் ஒரு தலைமுறை காலம் காத்திருக்க வேண்டும். அதனால், நாளைய வாழ்க்கை சிரமங்களை எதிர்கொள்வதற்கு மிகவும் கடினமாக இருக்கும்.ஒரு ஆசிரியர் பணியில் குறிப்பாக உயர்கல்விக்கு மாணவர்களை பன்னிரெண்டாம் வகுப்பு முடித்தவுடனே அவர்களை வழிகாட்டுவது மட்டுமல்ல, அவர்களை நீண்டகாலமாக அவர்களுக்கான பிரச்சினைகளை எடுத்துக்கூறி வழிகாட்டுவதும் தான். மாணவர்களுக்கு பாடத்திட்டங்களை தவிர அதிகமான விஷயங்கள் பற்றி எடுத்துச்சொல்ல வேண்டியுள்ளது.
மாணவர்கள் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்து எந்த துறையை தேர்வு செய்து படித்தாலும் அவர்களுக்கு வெற்றி, தோல்வி என்பது மாறி மாறி வரும். இது எல்லாவற்றையும் எடுத்துக் கூறி மாணவர்களை ஊக்கப்படுத்த வேண்டும்.
மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெறுவதோடு, வாழ்க்கை குறித்து புரிதல்கள் ஏற்படுத்துவதிலும் ஆசிரியர்களுக்கான பணியில் மிகப்பெரிய தேவை இருக்கிறது.மாணவர்களை சரியான வழியில் ஆற்றுப்படுத்துவதற்கும், எதிர்கால வாழ்வியல் சிக்கல்களை எதிர்கொள்வதற்கும் தொடர்ச்சியாக செயல்படுவதற்கு தான் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
எனவே, மாணவர்களின் வாழ்க்கையில் எவ்வாறு முன்னேற முடியும் என்பது குறித்து ஆசிரியர்கள் மாணவர்களுக்கு எடுத்துக் கூறி, அவர்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு நாம் செயல்பட வேண்டும் எனவும், இந்த ஆண்டும் நமது மாவட்டத்தில் 100 சதவிகிதம் அனைத்து பள்ளிகளிலும் தேர்ச்சி பெற அனைத்து தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் முழு முயற்சி மேற்கொள்ள வேண்டுமென எனவும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.இந்நிகழ்ச்சியில், பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply