796 அரசு பள்ளிகளில் பணிபுரிந்துவரும் 2083 ஆசிரியர்களுக்கு கையடக்கக் கணினிகளை வழங்கல்
விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி கலையரங்கத்தில் (18.07.2024) பள்ளிக்கல்வித்துறை சார்பில், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்., I A S, அவர்கள் தலைமையில், விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ப.மாணிக்கம் தாகூர் அவர்கள், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் அவர்கள் மற்றும் சிவகாசி மாநகராட்சி மேயர் திருமதி சங்கீதா இன்பம் அவர்கள் ஆகியோர் முன்னிலையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் மற்றும் நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் ஆகியோர் 796 அரசு பள்ளிகளில் பணிபுரிந்துவரும் 2083 ஆசிரியர்களுக்கு கையடக்கக் கணினிகளை வழங்கினார்கள்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கல்வியின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். அதன்படி, மாறிவரும் கற்றல், கற்பித்தல் முறைகளுக்கேற்ப தங்களை சிறப்பாக மெருகேற்றிக் கொள்வதற்கென அனைத்து இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு கைக்கணினி (Tablet) வழங்கப்படும் என்று அறிவித்தார்கள்.
அதன்படி, தமிழ்நாடு அரசு, தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் 79,723 ஆசிரியர்களுக்கு 101.48 கோடி ரூபாய் செலவில் கைக்கணினிகள் (Tablet) வழங்கும் திட்டத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆசிரியர்களுக்கு கைக்கணினிகள் வழங்கி தொடங்கி வைத்தார்.அதனடிப்படையில், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 796 அரசு பள்ளிகளில் பணிபுரிந்துவரும் 2083 ஆசிரியர்களுக்கு இக்கையடக்கக் கணினி வழங்கப்படுகிறது.
நமது விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 796 அரசு தொடக்க/நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் (937+1146) என மொத்தம் 2083 ஆசிரியர்களுக்கு இக்கையடக்கக் கணினி வழங்கப்படுகிறதுஇதன் மூலம் ஆசிரியர்கள், மாணவர்களின் வருகை பதிவு, மாணவர்களுக்குக் கிடைக்கக்கூடிய அரசு வழங்கும் நலத்திட்டஉதவிகளை பதிவேற்றம் செய்வது மற்றும் மாணவர்களின் அறிவுத்திறனைஅறிந்துகொள்ள ஏதுவாக தேர்வுகள் நடத்திட என பல வழிகளில் பயனுள்ள இக்கையடக்கக் கணினி அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர், இடைநிலை உதவியாசிரியர் மற்றும் அரசு நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள் அனைவருக்கும் இக்கையடக்கக் கணினி வழங்கப்படுகிறது.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆசிரியர் பெருமக்கள் தான் பெற்றோர்களை விட இளைய சமுதாயத்தை சரியான வழியில் கொண்டு செல்லக்கூடிய வகையில் குழந்தை செல்வங்களின் மீது அதிக அக்கறை கொண்டவர்கள் என்ற உணர்வோடு பள்ளிக்கல்வித்துறையில் உட்கட்டமைப்பு திட்டங்களோடு, ஆசிரியர்களுக்கான நலனில் அக்கறையோடு செயலாற்றுகிறார்கள்.
இன்றைக்கு இருக்கக்கூடிய குழந்தைகளுக்கு இந்த கணினி என்பது மிக சாதாரணமாக இருக்கிறது. குழந்தைகள் கைபேசியை பெரியவர்களை விட மிக எளிதாக பயன்படுத்துகிறார்கள். நமக்குத் தெரியாதவற்றை கூட அந்த குழந்தைகள் நமக்கு சொல்லிக் கொடுக்கக் கூடிய அளவிற்கு அவர்களின் அறிவுத்திறன் இன்றைக்கு அதிகமாக இருக்கிறது. அதற்கு இணையாக நம்முடைய கற்றல்முறை இருக்க வேண்டும்.
தற்போது உள்ள ஆசிரியர்கள் அவர்கள் படித்த காலத்தில் இருப்பதற்கும் தற்போதுள்ள கல்வி முறைக்கும் நிறைய வித்தியாசம் மற்றும் முன்னேற்றம் இருக்கிறது. விஞ்ஞான ரீதியாக இன்றைக்கு படிப்பின் தரம் உயர்ந்திருக்கிறது. அதற்கு நாம் இணையாக போட்டி போட வேண்டும் என்று சொன்னால் இது போன்ற மின் சாதனைகளை எல்லாம் உபயோகப்படுத்துகின்ற போதுதான் நம் அறிவுத்திறனை வளர்த்துக் கொள்ள முடியும். குழந்தைகளுக்கு உள்ள சந்தேகங்களையும் நம்மால் தீர்க்க முடியும். இதை எல்லாம் மனதில் வைத்துக் கொண்டுதான் இந்த கையடக்க கணினி வழங்கப்பட்டிருக்கின்றது.
சமுதாயத்தில் ஒழுக்கத்தை கற்றுக் கொடுப்பவர்கள் ஆசிரியர்கள். சமுதாயம் எப்படி செல்ல வேண்டும், எப்படி இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை குழந்தைகள் மனதில் ஊட்டக்கூடியவர்கள் ஆசிரியர்கள். இந்த நாடு எதிர்காலத்தில் ஒரு ஒழுக்கம் மிகுந்த, நாட்டுப்பற்றுள்ள, சிறந்த அறிவாளிகள் கொண்ட நாடாக இருக்க வேண்டும் என்றால் அது ஆசிரியர்கள் கையில் தான் இருக்கிறது. அதற்கு ஆசிரியர்களான நீங்கள் அத்தனை பேரும் தியாக உணர்வோடு பணியாற்ற வேண்டும் என தெரிவித்தார்.
0
Leave a Reply