விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், மாரனேரி கிராமத்தில், மக்கள் தொடர்பு திட்ட முகாம்
விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், மாரனேரி கிராமத்தில், மக்கள் தொடர்பு திட்ட முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S,அவர்கள் தலைமையில் (11.09.2024) நடைபெற்றது.
இம்முகாமில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில், சமூக பாதுகாப்புத் திட்டத்தின் மூலம் 19 பயனாளிகளுக்கு ரூ.2,15,250/- மதிப்பிலான பல்வேறு உதவித் தொகைகளையும், 255 பயனாளிகளுக்கு ரூ.1,01,77,085/- மதிப்பில் இணைய வழி பட்டாக்களையும், 15 பயனாளிகளுக்கு ரூ.9,30,000/- மதிப்பில், சாலை விபத்து நிவாரண தொகைகளையும், வேளாண்மைத்துறையின் சார்பில், 3 பயனாளிகளுக்கு ரூ.14,500/- மதிப்பில் நலத்திட்ட உதவிகளையும், தோட்டக்கலைத் துறையின் சார்பில், 8 பயனாளிகளுக்கு ரூ.7,35,000/- மதிப்பிலான கல்தூண் பந்தல் அமைத்தல், சிப்பம் கட்டுதல் அறை, நடமாடும் காய்கறி விற்பனை வாகனம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளையும், மீன்வளத்துறையின் சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.2000/- மதிப்பிலான மீன் குஞ்சுகளையும், உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் 20 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளையும் என மொத்தம் 322 பயனாளிகளுக்கு ரூ.1.21 கோடி மதிப்பிலான அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.
தமிழ்நாடு அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்து திட்டங்கள் பற்றியும் அதற்கான தகுதிகள் பற்றியும் அனைத்து பொதுமக்களும் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கில் இம்முகாம் நடத்தப்படுகிறது. இம்முகாமில் பல்வேறு துறைகளை சார்ந்த அரசு அலுவலர்கள் தங்கள் துறைசார்ந்து என்னென்ன திட்டங்கள் உள்ளன என்பதை எடுத்துரைத்து, அனைத்து திட்டங்களையும் கடைக்கோடி கிராமங்களில் வாழும் ஏழை, எளிய மக்களும் அறிந்து தெரிந்து கொண்டு எவ்வித சிரமமின்றி அரசின் அனைத்து நலத்திட்ட உதவிகளையும் தகுதியான மக்கள் பெற்று பயன்பெற வேண்டும் என்பதற்காகத்தான் ஒவ்வொரு மாதமும் ஒரு கிராமத்தை தேர்வு செய்து, அதனடிப்படையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடத்தப்படுகிறது.
மேலும் இந்த மக்கள் தொடர்பு முகாமில் அரசினுடைய திட்டங்களை மக்கள் அறிந்து கொள்கிற வகையில் பல்வேறு அரசுத் துறைகள் மூலமாக கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டு, அதன் மூலம் பொது மக்களுக்கு திட்டங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டு வருகிறது.
ஏழை எளிய கிராமப்புற மக்கள் தமக்கான சந்தேகங்களை போக்கிக் கொண்டு, அறிவியல் பூர்வமாக தெரிந்து கொண்டு பயன்பெறுவதே இது போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதின் நோக்கம். தமிழ்நாடு அரசு மூலம் ஒவ்வொரு துறையின் மூலமாக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
சிவகாசி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பட்டாசு தொழிற்சாலைகள் மற்றும் அதை சார்ந்த உபத்தொழில்கள் மற்றும் இந்திய அளவிலே அதிகமாக அச்சகத் தொழிலும்; மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.மேலும், தமிழ்நாடு அரசானது, வேளாண்மைத்துறையின் மூலமாக இ-வாடகை என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அதில் நமக்கு தேவையான விவசாய உபகரணங்களை அரசு வழங்கி வருகிறது.கால்நடைத்துறையின் சார்பில், ஒரு ஏக்கர் நிலம் இருந்தால் அந்த இடத்தில் தீவனப் பயிர்களை வளர்ப்பதற்கு உரிய கடன் வழங்கப்படுகிறது மற்றும் கால்நடைகளை பராமரிப்பதற்கு உரிய கடன்களும் வழங்கப்படுகிறது.
தற்போது, பொதுமக்களிடையே மாறி வரும் உணவு பழக்கவழக்கத்தின் காரணமாக நீரிழிவு, இரத்த அழுத்தம் ஆகியவை மூலம், எதிர்ப்பு சக்தி குறைவு ஏற்பட்டு பல்வேறு நோய்கள் வருவதற்கான காரணமாக அமைகின்றது. மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் மூலமாக மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ், பொதுமக்களின் வீடுகளுக்கு சென்று தொற்றா நோய்களான நீரிழிவு மற்றும் இரத்த அழுத்தம் உள்ளிட்ட நோயாளிக்கு பரிசோதனைகளைச் செய்தல், தேவைப்படும் மருந்துகளை வழங்குதல், இயன்முறைச் சிகிச்சை, இயலா நோயாளிகளுக்கு வழங்கக்கூடிய வலி நிவாரணம், ஆதரவு சிகிச்சை ஆகியவற்றை உள்ளடக்கிய மருத்துவச் சேவைகளை நோயாளிகளின் இருப்பிடத்திற்கே சென்று வழங்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக புதுமைப்பெண் மற்றும் தமிழ்புதல்வன் ஆகிய திட்டங்கள் மூலம் 6-லிருந்து 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் பயின்று உயர்கல்விக்கு செல்லும் மாணவ/மாணவியர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000/- ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலமாக நமது பகுதிகளில் கல்லூரி படிப்பை அதிகப்படுத்த வேண்டும்.இந்தியாவிலேயே அதிகப்படியான பள்ளிப்படிப்பை முடித்து விட்டு, கல்லூரிக்கு செல்லக்கூடிய மாணவர்கள் ஒரு மாவட்டத்தில் இருக்கிறார்கள் என்றால் அது நமது மாவட்டம் தான் இந்தியாவில் இருக்கக்கூடிய மாவட்டங்களிலே முதல் மாவட்டமாக இருக்கிறது.
ஒருவர் போதைப்பொருட்களுக்கு அடிமையாகி விட்டார் என்றால் அதற்கென்று அறிவியல் பூர்வமான சிகிச்சை முறைகள் இருக்கிறது. அரசு மருத்துவமனையிலும் போதை மீட்பு மையங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. விருதுநகர், அருப்புக்கோட்டை, காரியாபட்டி, திருவில்லிபுத்தூர், இராஜபாளையம், சாத்தூர், சிவகாசி உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் உள்ளது. இந்த மையங்களில் போதைக்கு அடிமையானவர்களை 15 நாட்களில் விஞ்ஞான பூர்வமாக மருந்து மாத்திரைகளை வழங்கி, முறையான ஆலோசனைகளை கூறி சரி செய்துவிடலாம்.வேலைவாய்ப்புத் துறையின் மூலமாக தனியார் வேலை வாய்ப்பு முகாம்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. படித்து பட்டம் பெற்ற இளைஞர்கள் அரசு வேலைக்கு செல்வதற்காக அவர்களுக்கென்று பயிற்சி வழங்குவதற்காக நான் முதல்வன் திட்டத்தின் மூலமாக பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதுபோன்று அனைத்து துறைகளிலும் பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.
எனவே, பொதுமக்கள் இதுபோன்று பல்வேறு துறைகள் மூலம் அரசு செயல்படுத்தும் திட்டங்களை அறிந்து கொண்டு, பயன்பெற வேண்டுமெனவும், மற்றவர்களுக்கும் அரசின் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டுமெனவும் மாவட்ட ஆட்சித்தலைவர்அவர்கள் தெரிவித்தார்.முன்னதாக இந்த மக்கள் தொடர்பு திட்ட முகாமில் பல்வேறு அரசு துறைகள் மூலமாக அமைக்கப்பட்ட அரசு திட்டங்கள் சார்ந்த அரங்குகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டார்.இந்நிகழ்ச்சியில், சிவகாசி சார் ஆட்சியர் திருமதி ந.ப்ரியா ரவிசந்திரன்.,I A S., மாவட்ட வழங்கல் அலுவலர் திருமதி அனிதா, சிவகாசி வட்டாட்சியர் திரு.லட்சம், அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply