சங்க இலக்கிய கருத்தரங்கம்
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் ஸ்ரீ எஸ்.ஆர்.என்.எம் கல்லூரியில் (11.07.2024) மாவட்ட நிர்வகாம் மற்றும் சாத்தூர் ஸ்ரீ எஸ் இராமசாமி நாயுடு ஞாபகார்த்த கல்லூரி தமிழ்த்துறை சார்பில் சங்க இலக்கிய கருத்தரங்கம், செவ்வியில் இலக்கியங்களின் சிறப்பு(சங்க இலக்கியம் மற்றும் திருக்குறள்) என்ற தலைப்பில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இன்றைய சூழலில் மாணவர்களுக்கு, குறிப்பாக ஆய்வு மாணவர்களுக்கு சங்க இலக்கியம் குறித்தும், திருக்குறள் குறித்தும் இரண்டு நாள் கருத்தரங்கை நடத்தி, அதன் மூலமாக இந்த இரண்டு இலக்கிய செல்வங்கள் தமிழ் சமூகத்தின் வரலாறு மற்றும் பண்பாட்டில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது, இன்றளவும் நமக்கு வழிகாட்டும் இலக்கியங்களாக எப்படி இருக்கின்றன என்பது குறித்து எடுத்துச் சொல்வதே இந்த நிகழ்ச்சியின் நோக்கமாகும்.தமிழ் இலக்கிய மாணவர்கள் சங்க கால இலக்கியங்கள், சங்கம் மருவிய கால இலக்கியங்கள், நீதி நூல்கள் கால இலக்கியங்கள் குறித்து பாடத்திட்டத்தில் பயில்கிறீர்கள். எப்பொழுதுமே ஒரு அறிவியல் படிக்கும்போது, அறிவியலினுடைய தத்துவங்கள் தாண்டி, அதை எப்படி பயன்படுத்துகிறோம் என்பது முக்கியம்.
எனவே எந்த ஒன்றுக்கும் அதனுடைய தத்துவங்கள், அடிப்படைகள், அதனுடைய இலக்கணங்களை புரிந்து கொள்ளும் அதே நேரத்தில், அது எப்படி தனிமனிதனுக்கும் இந்த சமூகத்திற்கும் பயன்படுகிறது என்ற கேள்விகளில் தான் அந்த துறையினுடைய வளர்ச்சி இருப்பதாக நான் கருதுகிறேன். அது அறிவியலாக இருக்கட்டும் அல்லது மனுடவியலாக இருக்கட்டும் இது போன்ற இலக்கிய மாணவர்கள் இந்த கேள்வியை நீங்கள் தொடர்ச்சியாக எழுப்ப வேண்டும்.நாம் படிக்கிறோம் என்றால் அதனுடைய பயன், அதன் மூலம் நீங்கள் அந்த பயனை எப்படி பெற்று கொள்கிறார்கள். அதன் மூலமாக இந்த சமூகத்திற்கு ஏதேனும் பயன் இருக்கிறதா என்ற இரண்டு கருதுகோலையும் வைத்து சங்க இலக்கியத்தையும், திருக்குறளையும் நீங்கள் பார்த்து வரவேண்டும்.
மிகச் சிறந்த தமிழினுடைய ஆய்வறிஞர் ஒளவை துரைசாமி பிள்ளை அவர்கள் தொல்காப்பியத்திற்கும், சங்க இலக்கியத்திற்கும், திருக்குறளுக்கும் இடையே இருக்கக்கூடிய பதங்கள், கிளவிகள், வார்த்தைகளினுடைய மாறுபாடுகள் குறித்து மிக தீவிரமாக ஆராய்ச்சியை மேற்கொண்டார். அந்த ஆராய்ச்சியில் தொல்காப்பியத்திற்கு பிறகு வரக்கூடிய இலக்கியங்களில் சங்க இலக்கியமும், திருக்குறளும் ஒவ்வொன்றும் காலத்தால் சற்று முன்னும் பின்னும் எப்படி வந்தன. சங்க இலக்கியத்தின் உடைய பெரும்பாலான கருத்துக்கள் திருக்குறளில் எப்படி சொல்லப்படுகிறது. திருக்குறளினுடைய மிக முக்கியமான உரிமைகள் சங்க இலக்கியங்களில் எவ்வாறு எடுத்து கையாளப்படுகின்றன என்பது குறித்து தீவிரமான ஆராய்ச்சிகளை மேற்கொண்டவர்.அதற்குப் பிறகு வந்த நீதி இலக்கியங்களும், நீதி நூல் கால இலக்கியங்களும், காப்பிய கால இலக்கியங்களிலும், பக்தி இலக்கிய கால படைப்புகளில் கூட சங்க இலக்கியத்தினுடைய கூறுகளை காண முடியும்.
குறிப்பாக காப்பிய காலத்தை எடுத்துக் கொண்டால், கம்பராமாயணத்தின் உடைய மிக முக்கியமான கருத்துக்கள் சங்க இலக்கியத்திலிருந்தும், அதற்கு பிந்தைய நீதி நூல் கால இலக்கியங்களில் இருந்தும் மிக நேர்த்தியாக, அதுவும் குறிப்பாக திருக்குறளினுடைய வார்த்தைகளை இரண்டு மூன்று பதங்களை நேரடியாக பயன்படுத்தக்கூடிய அளவிற்கு அதனுடைய செல்வாக்கு பின்னாளில் உலகத்தின் தலைசிறந்த கவிஞர்களில் ஒருவராக போற்றத்தக்க கம்பனின் உடைய பாடல்களில் அது இருக்கிறது. இதன் மூலம் முந்தைய இரண்டு இலக்கியங்களும் எத்தகைய வழிகாட்டுதல்களை அவர்களுக்கு வழங்கி இருக்கும் என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும்.இந்த இரண்டு இலக்கியங்களில் இருந்தும் ஒரு தனி மனிதனுக்கும், சமூகத்திற்கும் என்ன பயன் இருக்கிறது. நாம்; படித்ததை தாண்டி அதனுடைய பயன்பாடு ஏதேனும் இருக்கின்றதா என்ற கருத்துக்களில் எடுத்துப் பார்க்கின்றபோது, மிக முக்கியமாக ஒரு மனிதனை இந்த வாழ்வியலுக்கு தயார்படுத்தக்கூடிய பணியை இலக்கியங்கள் செய்ய வேண்டும்.
மனிதன் எப்போதுமே இன்பம் துன்பம் என்ற இரண்டு நிலைகளில் அவனுடைய வாழ்வினை நடத்திக் கொண்டிருக்கின்றான். வாழ்வில் இன்பமும் துன்பமும் மாறி மாறி வந்து கொண்டே தான் இருக்கும். இதை நாம் ஒருபோதும் தவிர்க்க முடியாது. இதில் மனிதன் தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதற்கும் இன்பத்தை கொண்டாடுவதற்கும் பல்வேறு வாய்ப்புகளை அவன் உருவாக்கிக் கொள்கின்றான். ஒரு மகிழ்ச்சி வருகிறது என்றால் அதனை தனி மனிதனாக கொண்டாடுவதற்கும் குடும்பமாக கொண்டாடுவதற்கும் சமூகத்தோடு இணைந்து கொண்டாடுவதற்கும் பல்வேறு வாய்ப்புகளை அவன் உருவாக்கிக் கொள்கின்றான்.
ஆனால் துன்பத்தை அவன் எதிர்கொள்கின்ற போது தான் மிக முக்கியமாக அவன் நுட்பமாக செயலாற்ற வேண்டி இருக்கிறது. தனி மனிதனுடைய துன்பத்தை அவன் எப்படி எதிர்கொள்வது, தனி மனிதன் துன்பத்தை அனுபவிக்கின்ற போது சமூகம் அவனுக்கு எப்படி உறுதுணையாக இருக்கின்றது. இந்த சமூகமே ஒரு துன்பத்தை அனுபவிக்கின்ற போது, எப்படி அதை கடக்க வேண்டும். இந்த இரண்டிற்கும் நம்முடைய இலக்கியங்கள் இன்பத்திற்கு வழிகாட்டுவதை விட துன்பத்திற்கு தான் அதிகமாக வழி காட்டுகிறது.
இன்று இருக்கக்கூடிய நிகழ்கால வாழ்வியலில் அரசியல், சமூகம், பொருளாதாரம், சுற்றுச்சூழல் இந்த நான்கும் தான் இன்றைய உலகில் மிக முக்கியமான புவி அரசியலை தீர்மானிக்கிறது அல்லது புவி அரசியலுனுடைய மாற்றங்கள் இந்த நான்கினுள் ஆதிக்கம் செலுத்துகின்றன. சங்க இலக்கியத்தில் அடுத்து வரக்கூடிய சமூகத்திற்கு வழிகாட்டும் கருத்துக்களும் இருக்கின்றன.தமிழ் சமூகத்தினுடைய 2000 ஆண்டுகால வரலாற்றை எடுத்து பார்த்தோம் என்றால், தமிழ் சமூகத்தில் ஏற்பட்ட பல பண்பாட்டு மாற்றங்கள், பல சமூக சிக்கல்கள், பல ஆதிக்கம் செலுத்தக்கூடிய சூழல்கள் என எல்லாவற்றையும் கல்வியின் மூலமாகத்தான் தமிழ் சமூகம் எதிர்கொண்டு வந்திருக்கின்றது.
தனி மனிதனுடைய வாழ்க்கையை எதிர்கொள்வதற்கும், அதனுடைய சிக்கலில் இருந்து நாம் கவனமாக கையாளுவதற்கும், உதவியை செய்வதற்கும், உதவியை பெறுவதற்கும் உள்ள பண்புகளை பற்றியும், சங்க இலக்கியம் தனிமனித வாழ்வியலுக்கும் சமூக வாழ்வுகளுக்கும் மிக முக்கியமான கருத்துகளை தொடர்ச்சியாக பேசுகிறது.இந்த நிகழ்ச்சி எதற்காக நடத்துகிறோம் என்றால் 2000 ஆண்டுகால மரபில் சொல்லப்பட்ட செய்திகள் இன்றளவும் அதனுடைய பொருத்தப்பாடு இருக்கிறது. அதற்கான தேவை இருக்கிறது. 21-ஆம் நூற்றாண்டில் குறிப்பாக கடந்த 10 ஆண்டுகளில் நுகர்வு கலாச்சாரத்தில் மானுட சமூகம் பூட்டப்பட்டு மிக வேகமாக சென்று கொண்டிருக்கின்றது.
எனவே இந்த நுகர்வு கலாச்சாரத்தில் இது போன்ற விழுமியங்களுக்கு எந்த சிக்கல்களும் வந்து விடக்கூடாது என்பதை நினைவூட்டுவதற்காக தான், உங்களின் மூலமாக இன்னும் ஒரு 2000 நபர்களை சென்று சேர்வதற்காக தான் இந்த கருத்தரங்கு. சங்க இலக்கியமும் திருக்குறளும் உலகின் ஆகச்சிறந்த இலக்கியங்களில் ஒன்று. உலகில்; இலக்கியங்களில் சொல்லப்படக்கூடிய கருத்துக்கள் எந்த சமூகத்திலிருந்து பிறந்து இருக்கின்றதோ அந்த சமூகத்திற்கு சொல்ல வேண்டிய செய்திகளை சங்க இலக்கியம், திருக்குறளை விட வேறு ஒரு இலக்கியம் சொல்லி இருக்க முடியாது. அப்படிப்பட்ட இலக்கியத்தை தொடர்ச்சியாக படியுங்கள். புரிந்து கொள்ளுங்கள். அடுத்தவர்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள். இலக்கியம் சொல்லக்கூடிய வாழ்வியலோடு வாழுங்கள் என தெரிவித்தார்.இந்த கருத்தரங்கு நிகழ்ச்சியில் சென்னை தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வி சேவைகள் கழகம் இணை இயக்குனர் முனைவர் சங்கர சரவணன் அவர்கள் “சங்கத்தின் தங்கம் குரல்”; என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் ஒருங்கிணைப்பாளர் முனைவர் கவிதா அவர்கள் வரவேற்புரையும், கல்லூரி முதல்வர் முனைவர் ராஜகுரு அவர்கள் வாழ்த்துரையும், ஒருங்கிணைப்பாளர் முனைவர் ராமநாதன் அவர்கள் நன்றியுரையும் வழங்கினார்கள்.இந்நிகழ்ச்சியில் கரிசல் இலக்கிய கழக செயலாளர் மரு.த.அறம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.இந்நிகழ்ச்சியில் மாணவ, மாணவியர்கள், பேராசிரியர்கள், அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply