தேசிய நெடுஞ்சாலைகளில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரியில், (24.09.2024) பசுமை தமிழக தினத்தை முன்னிட்டு, திருவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம் மற்றும் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் இணைந்து நடத்திய தேசிய நெடுஞ்சாலைகளில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் மரக்கன்றுகள் நட்டு துவக்கி வைத்தார்.
கடந்த சில நாட்களாக நிலவும் வெப்பநிலை என்பது இதுவரை இல்லாத அளவிற்கு அதிகமாக இருந்து வருகிறது. இதற்கு முன்பாக இந்த தேதியில், இந்த மாதத்தில் அதிகமான வெப்பநிலை இதுவரை பதிவாகவில்லை. நாட்டிலேயே அதிகமான வெப்பநிலை நேற்றைய முந்தைய தினம் மதுரையில் இருந்தது.இதெல்லாம் பருவநிலை மாற்றத்தினால் ஏற்படும் பாதிப்புகளை காட்டுகிறது. குறிப்பாக தமிழ்நாடு அதிகப்படியாக நகர்ப்புறமாக வளர்ச்சி அடையக்கூடிய மாநிலமாக இருக்கிறது. தமிழ்நாட்டில் 50 சதவீதத்திற்கும் மேலான மக்கள் நகரப்புறங்களில் தான் வசிக்கிறார்கள்.
2030ல் இது 70 சதவிகிதமாக மாறி விடும் என்கிறார்கள். வரும் 2040-ல் ஏறத்தாழ 90 சதவீதமான மக்கள் நகர்ப்புற பகுதிகளில் தான் வசிப்பார்கள். அதனால் நகரத்தின் மீது அவற்றின் இயற்கை வளங்களின் மீது நாம் தரக்கூடிய அழுத்தம் என்பது மிக அதிகமாக இருக்கின்றது. இட நெருக்கடி, சுற்றுச்சூழல், தனிமனித சுகாதாரத்தை ஒட்டி வரக்கூடிய பிரச்சினைகள் அதிகமாகும். நகரமயமாகும் போது அதற்கு ஏற்ப சாலைகள் விரிவாக்கம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும் போது உடனடியாக இது சுற்றுச்சூழலை பாதித்து பருவநிலை மாற்றத்தை உண்டாக்கும்.
எனவே நாம் வாழக்கூடிய பூமியில் இந்த பூமியை வாழ்வதற்கு ஏற்ப மாற்ற வேண்டுமானால், உரிய பசுமை பரப்பை நாம் வைத்திருக்க வேண்டும். ஒரு நாட்டில் 33 சதவீதம் பசுமை பரப்பு இருக்க வேண்டும். மூன்றில் ஒரு பகுதி காடுகளாக இருக்க வேண்டும். இது விருதுநகர் மாவட்டத்தில் 10 விழுக்காடுக்கும் குறைவாகவே இருக்கிறது.மரக்கன்றுகளை நடுதலை தினந்தோறும் மேற்கொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் அவர்கள் எந்த துறையில் பணிபுரிபவராக இருந்தாலும், அதை ஒட்டி நம்மால் முயன்ற அளவிற்கு சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கு மரம் நடுதலை அதிகப்படியான எண்ணிக்கையில் மேற்கொள்ள வேண்டும். மரம் நடுவதோடு மட்டுமல்லாமல் அதை ஓராண்டுக்காவது பராமரிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
0
Leave a Reply