வாக்காளர் பட்டியல்களை திருத்தம் செய்வதற்கான சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகள் முகாம்கள் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் 19-11-2025 அன்று முதல் 20.11.2025 அன்று வரை இரு நாட்கள் நடைபெறவுள்ளது .
01.01.2026 தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல்களை திருத்தம் செய்வதற்கான சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகள் விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடுவீடாகச் சென்று கணக்கெடுப்புப் படிவங்களை வழங்கியும், பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை வாக்காளர்களிடமிருந்து திரும்பப் பெற்றும் வருகின்றனர். இதுவரை விருதுநகர் மாவட்டத்தில் 1572654 வாக்காளர்களுக்கான கணக்கெடுப்புப் படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன.
வெளியூர்களில் பணிபுரிபவர்கள் தங்களுக்கான படிவங்களைப் பெற்றுக் கொள்வதை எளிதாக்குவதற்காகவும், 2002-ம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்களைக் கண்டறிவதற்கு உதவி செய்வதற்காகவும், படிவங்களை நிரப்புவதற்கும், நிரப்பப்பட்ட படிவங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் திரும்ப அளிப்பதற்காகவும், அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் நாளை 19-11-2025 புதன் கிழமை மற்றும் 20.11.2025 வியாழக் கிழமை ஆகிய 2 தினங்களிலும், தினசரி காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை சிறப்பு முகாம்கள் விருதுநகர் மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
ஏற்கெனவே வாக்காளர்களாகப் பதிவு செய்துள்ளவர்கள் எவரேனும் இதுவரை கணக்கெடுப்புப் படிவங்களைப் பெற்றுக் கொள்ளாமல் இருந்தால் இச்சிறப்பு முகாம்களுக்குச் சென்று தங்களுக்கான மற்றும் தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கான கணக்கெடுப்புப் படிவங்களைப் பெற்றுக் கொள்ளலாம். மேலும், கணக்கெடுப்புப் படிவங்களை ஏற்கெனவே பெற்றுள்ளவர்கள், பூர்த்தி செய்யப்பட்ட படிவத்தை திரும்ப அளிக்க இயலும்.
படிவங்களைப் பூர்த்தி செய்வதற்கும், 2002-ம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் தங்களது பெயரையோ அல்லது தங்களின் தந்தை/தாய்/தாத்தா/பாட்டி பெயர்களைக் கண்டறிவதற்கும் உதவி தேவைப் பட்டால் இம்முகாம்களுக்குச் சென்று தேவையான உதவியைப் பெற்றுக் கொள்ளலாம். இம்முகாம்களில் அந்தந்த வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், தன்னார்வலர்கள் இந்தப் பணிகளை மேற்கொள்வார்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட படிவத்துடன் எந்த ஆவணத்தையும் இணைத்து வழங்கத் தேவையில்லை. வாக்காளர் பட்டியல் தீவிரத் திருத்தம் தொடர்பாக விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (04562)-1950 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு விபரங்கள் பெற்றுக் கொள்ளவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S,. அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply