நரிக்குடி மற்றும் திருச்சுழி ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் மல்லாங்கிணறு பேரூராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கள ஆய்வு மேற்கொண்டார்.
விருதுநகர் மாவட்டம், நரிக்குடி மற்றும் திருச்சுழி ஊராட்சி ஒன்றியங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா .I A S., அவர்கள் (02.07.2026) கள ஆய்வு மேற்கொண்டார்.மல்லாங்கிணறு பேரூராட்சியில் சாலைகள் ஒருங்கிணைப்பு திட்டம் 2025-2026 (CRIDP 2025-2026) திட்டத்தின் கீழ், ரூ.39.95 கோடி மதிப்பில் புறவழிச்சாலை அமைக்கும் பணியினையும், கழிவுகளை மறு சுழற்சி செய்து மீண்டும் பயன்பாட்டிற்குரிய வளங்களாக மாற்றும் வகையில் அமைக்கப்பட்டுள்ள வளம் மீட்பு பூங்காவினையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மல்லாங்கிணறு பேரூராட்சியில் மாணவர்களுக்கான சமூக நீதி விடுதியினை பார்வையிட்டு மாணவர்களின் தங்குமிடம், கழிவறை வசதிகள் மற்றும் விடுதி வளாகத்தின் தூய்மை குறித்து, வழங்கப்படும் உணவின் தரம், தங்குமிடம் மற்றும் பிற அடிப்படை வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார்.திருச்சுழி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உணவின் தரம், சுவை மற்றும் அளவு குறித்தும், மாணவர்களுக்குத் குறிப்பிட்ட நேரத்திற்குள் உணவு சரியாகச் சென்றடைகிறதா என்பது குறித்தும், சமையல் கூடம் மற்றும் பாத்திரங்கள் சுத்தமாகப் பராமரிக்கப்படுகிறதா என்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.
திருச்சுழி சேதுபதி உயர்நிலைப்பள்ளியில் மாணவர்களின் வருகைப் பதிவேடு, கல்வித்திறன் மற்றும் ஆசிரியர்களின் கற்பித்தல் முறைகள் குறித்தும், பள்ளி வகுப்பறைகளின் வசதிகள், குடிநீர் வசதி, கழிப்பறை தூய்மை குறித்தும், மேலும், திருச்சுழி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் நியாய விலைக்கடையினை பார்வையிட்டு பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் அத்தியாவசியப் பொருட்களின் தரம் மற்றும் இருப்புப் பதிவேடுகள் (Stock Registers) குறித்தும் விரிவான ஆய்வு மேற்கொண்டார்
நரிக்குடி ஊராட்சி ஒன்றியம், பிள்ளையார் நத்தம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் 2025-26 ன் கீழ், ரூ.9 இலட்சம் மதிப்பீட்டில் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருவதனையும் வேளாணூரணி ஊராட்சியில், பிரதான் மந்திரி கனிஜ் க்ஷேத்ர கல்யாண் யோஜனா (PMKKY 2025-26) திட்டத்தின் கீழ் ரூ.20 இலட்சம் மதிப்பில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடப் பணிகளையும் ஆய்வு மேற்கொண்டு பணிகளைத் தரமாகவும், நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள்ளும் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும் என அலுவலர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.
விருதுநகர் மாவட்ட எல்லையான நரிக்குடி ஊராட்சி ஒன்றியம் வலையபட்டி கிராமத்திலிருந்து, இராமநாதபுரம் மாவட்டம் கோடாங்கிபட்டி கிராமத்திற்கு சாலை வசதி செய்து தருவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மற்றும் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மா.சிவகுரு பிரபாகரன், I A S., அவர்கள் ஆகியோர் இணைந்து கூட்டு ஆய்வு மேற்கொண்டனர்.இந்நிகழ்வில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், கிராம ஊராட்சி செயலாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply