வணிக நிறுவங்களுக்கு தமிழில் பெயர் சூட்டிய பைந்தமிழ் பற்றாளர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் (25.04.2025) தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறையின் சார்பில், வணிக நிறுவங்களுக்கு தமிழில் பெயர் சூட்டிய பைந்தமிழ் பற்றாளர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் வழங்கினார். தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு ஆட்சி மொழிச் சட்டம் 1956 இன் கீழ் அரசு அமைப்புகள், வங்கிகள், தனியார் பள்ளிகள், கடைகள், உணவு நிறுவனங்கள் மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், மற்றும் வணிக நிறுவனங்களில் தமிழ் மொழியின் பயன்பாட்டை அதிகப்படுத்துவதற்கு எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்னும் திட்டத்தின் கீழ் வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
அதன் ஒரு அங்கமாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வங்கிகள், கடைகள், உள்ளிட்ட வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் மற்றும் அனைத்து வகை தொழிற்சாலைகளில் அவற்றின் பெயர் பலகைகள் தமிழில் அமைக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.விருதுநகர் மாவட்டத்தில் அனைத்து கடைகள் நிறுவனங்கள் உணவு நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் 100 சதவிகிதம் மேற்கூறியவாறு அமைக்கப்படுவதை உறுதி செய்ய விருதுநகர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாவட்ட அளவிலான குழு அமைக்கப்பட்டுள்ளது.தொழிலாளர் நலத்துறை, தமிழ் வளர்ச்சி துறை, நகர மற்றும் கிராம உள்ளாட்சி துறை அலுவலர்கள் மற்றும் பல்வேறு வர்த்தகர் மற்றும் வேலை அளிப்போர் சங்க பிரதிநிதிகளை கொண்ட இக்குழுவின் வாயிலாக வரும் 15.05.2025 வரை தமிழில் பெயர் பலகை அமைக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது குறித்து விழிப்புணர்வு கூட்டங்களும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இன்று, விருதுநகர் மாவட்டத்தில் சட்டப்படி தமிழில் பெயர் பலகை அமைக்க வேண்டும் என எடுத்துரைக்கப்பட்டதற்கு இணங்கிய உடனே தமிழில் பெயர் பலகை அமைத்த 100 வணிகர்களுக்கு அவர்களின் இந்த தமிழ் பயன்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக தமிழ் "பைந்தமிழ் பற்றாளர்கள்" என பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அமைப்புகள், வங்கிகள், தனியார் பள்ளிகள், கடைகள், உணவு நிறுவனங்கள் மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், மற்றும் வணிக நிறுவனங்கள் தமது நிறுவனங்களில் சட்டப்படி தமிழ் மொழியில் பெயர் பலகை அமைக்கப்பட்டுள்ளதா என்று சுய பரிசோதனை செய்து, தாமாக முன்வந்து தமிழில் சட்டப்படி பெயர் பலகை அமைத்து முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
“ தமிழ்நாடு கடைகள் நிறுவனங்கள் சட்ட விதிகள், விதி 15, தமிழ்நாடு உணவு நிறுவனங்கள் சட்ட விதி 42 B, மற்றும் தொழிற்சாலைகள் சட்ட விதிகள் 113 ஆகியவற்றில் அனைத்து கடைகள் நிறுவனங்கள் உணவு நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் அவற்றின் பெயர் பலகைகள் தமிழ் மொழியில் முதன்மையாகவும், பிரதானமாகவும் அமைக்க வேண்டும். பிற மொழிகளிலும் எழுத வேண்டும் எனில் தமிழ் மொழிக்கு கீழ் ஆங்கிலத்தில் இரண்டாவது இடத்திலும், இதர மொழிகளில் மூன்றாவது இடத்தில் அதற்கு கீழேயும் எழுதப்பட வேண்டும் என வரையறை செய்யப்பட்டுள்ளது”.மேலும், 15.05.2025 ம் தேதிக்கு பின்னரும் தமிழில் பெயர் பலகை அமைக்காத நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும்.
எனவே, விருதுநகர் மாவட்டத்தில் அனைத்து நிறுவனங்களிலும் 100% தமிழில் பெயர் பலகைகள் அமைக்க அனைத்து கடைகள் உணவு நிறுவனங்கள் தொழிற்சாலைகள் மற்றும் அனைத்து நிறுவன உரிமையாளர்களும் ஒத்துழைப்பு நல்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார். இவ்விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.ராஜேந்திரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திருமதி பிரதௌஸ் பாத்திமா, தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) திருமதி.சீ.மைவிழிச் செல்வி, விருதுநகர், இணை இயக்குனர், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் விருதுநகர், உதவி இயக்குனர், தமிழ் வளர்ச்சி துறை திருமதி சுசிசலா, விருதுநகர் மற்றும் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply