25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


வத்திராயிருப்பு வட்டத்தில்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

வத்திராயிருப்பு வட்டத்தில் "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" திட்டத்தின் கீழ், பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு வட்டத்தில் "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" திட்டத்தின் கீழ், பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி I A S., அவர்கள் (21.10.2026) பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட அளவிலான அனைத்து அரசுத்துறை உயர் அலுவலர்கள் மக்களை தேடிச்சென்று குறைகளைக் கேட்டறியவும், பல்வேறு துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள், செயல்பாடுகளை விரைவுபடுத்தவும் மற்றும் அரசின் மூலம் வழங்கப்படும் சேவைகளின் தரத்தை மேம்படுத்தவும், மக்களை நாடி மக்கள் குறைகளைக் கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே சென்று ஆய்வு செய்திட "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில், (21.10.2026) விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு வட்டத்தில் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” என்ற திட்டத்தின் கீழ் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.அதன்படி, பசுமை பரப்பை அதிகரிக்கும் நோக்கில் குன்னூர் ஊராட்சியில் நாற்றங்கால் பண்ணையில் மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டு வருவதையும், ரெங்கப்ப நாயக்கன்பட்டி ஊராட்சியில் பெருமளவு மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருவது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. மேலும், வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் பிளவக்கல் பெரியாறு அணையின் நீர் இருப்பு, வரத்து மற்றும் மதகுகளின் பராமரிப்பு செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

பிளவக்கல் பெரியாறு மற்றும் கோவிலாறு அணைகள் முறையே 13.90 சதுர மைல் 9.57 சதுர மைல் நீர்ப்பிடிப்பு பகுதி கொண்டவை. பிளவுக்கல் பெரியாறு அணையின் முழுக்கொள்ளளவு 192.00 மில்லியன் கனஅடியும், பிளவுக்கல் கோவிலாறு அணையின் முழுக்கொள்ளளவு 133 மில்லியன் கனஅடியும் ஆகும். இத்திட்டத்தின் கீழ் நேரடி கால்வாய் மற்றும் 40 கண்மாய்களுக்கு பாசனத்திற்கு நீர் வழங்கப்பட்டு இதன் வாயிலாக 8531.17 ஏக்கர் நிலத்திற்கு பாசன வசதி கிடைக்கும். பெரியாறு அணையில் தற்பொழுது 50.85 மில்லியன் கனஅடி நீரும், கோவிலாறு அணையில் தற்பொழுது 8.02 மில்லியன் கன அடி நீரும் இருப்பில் உள்ளது. மேலும் பெரியாறு அணைக்கு வினாடிக்கு 14.43 கனஅடி நீரும், கோவிலாறு அணைக்கு 0.08 கனஅடி நீரும் வந்து கொண்டிருக்கிறது.மேலும், ரூ.10 கோடி மதிப்பில் பிளவக்கல் பூங்கா புணரமைக்கப்பட்டு வரும் பணிகள் குறித்தும், மீன்வளர்ப்பு பண்ணையின் மூலம் மீன் குஞ்சுகள் வளர்க்கப்பட்டு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகள் மற்றும் பிற மாவட்டங்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருவது குறித்தும், அதன் செயல்பாடுகள் மற்றும் விற்பனை இலக்குகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

மாவட்டத்தில் நரிக்குடி, வத்திராயிருப்பு, திருவல்லிபுத்தூர், சிவகாசி, திருச்சுழி, விருதுநகர், இராஜபாளையம், காரியாபட்டி, வெம்பக்கோட்டை, சாத்தூர் மற்றும் அருப்புக்கோட்டை ஆகிய 11 ஊராட்சி  ஒன்றியங்களில் உள்ள 601 கிராமங்களில் 6,63,595 புல உட்பிரிவுகளில் உள்ள நிலங்களில் கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை 5,60,371 புல எண்கள் கணக்கெடுக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 1,03,224 புல எண்கள் கணக்கெடுக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் உள்ள 23 கிராமங்களில் உள்ள 64,932 புல உட்பிரிவுகளில் உள்ள நிலங்களில் கணக்கீடு பணிகள் நடைபெற்று வருவது குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
இதில் 40,521 புல எண்கள் கணக்கீடு பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 24,411 புல எண்களில் உள்ள பயிர்கள் இணையவழி கணக்கீடு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

வத்திராயிருப்பு கிளை நூலகத்தில் கூடுதல் கட்டிடத்தில் ரூ.9.70 இலட்சம் மதிப்பில் மேற்கூரை அமைக்கப்பட்டு வரும் பணிகள், வத்திராயிருப்பு பேரூராட்சி, ஆகாசம்பட்டி அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வரும் ஊட்டச்சத்து உணவுகள், குழந்தைகளின் வயதுக்கேற்ற உயரம் மற்றும் எடை, வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தின் செயல்பாடுகள், மதிய உணவுத்திட்டம், மாணவர்களுக்கு கற்றல், கற்பித்தல் செயல்பாடுகள் குறித்தும், வத்திராயிருப்பு பகுதியில் செயல்பட்டு வரும் நியாயவிலைக்கடையினை பார்வையிட்டு பொருள்களின் தரம் மற்றும் இருப்பு, பயன்பெறும் குடும்ப அட்டைதாரர்களின் எண்ணிக்கை குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து வத்திராயிருப்பு கால்நடை மருந்தகம் ஆய்வு செய்யப்பட்டது. இப்பகுதிகளில் 23,120 மாடுகள், 28,580 செம்மறியாடுகள், 32,300 வெள்ளாடுகள் என மொத்தம் 84,000 கால்நடைகள் உள்ளன. மேலும், 16,600 கோழிகளும், 430 வளர்ப்பு நாய்களும் உள்ளன. இப்பகுதியில் அதிக எண்ணிக்கையில் கால்நடைகள் வளர்க்கப்படுவதைக் கருத்தில் கொண்டு, கால்நடைகளுக்கு உரிய நேரத்தில் மருத்துவச் சிகிச்சை வழங்குதல், நோய்கள் பரவாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், தேவையான தடுப்பூசிகளைச் செலுத்துதல் மற்றும் கால்நடை வளர்ப்போருக்கு உரிய மருத்துவ ஆலோசனைகளை வழங்குதல் ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், வத்திராயிருப்பு அரசு போக்குவரத்து பணிமனை ஆய்வு செய்யப்பட்டது. இந்த பணிமனையிலிருந்து 7 அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் பேருந்து பராமரிப்பு, எரிபொருள் பயன்பாடு உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
எனவே, அரசின் பல்வேறு துறைகள் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப்பணிகளை எந்த ஒரு தொய்வின்றி பயனாளிகள் மற்றும் பொதுமக்களை சென்றடைவது உறுதி செய்ய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
பின்னர், நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் அனைத்து ஊராட்சிகளில் மேற்கொள்ள வேண்டிய குடிநீர், சுகாதாரம் மற்றும் சாலைப் பணிகள், அரசின் திட்டங்கள் மற்றும் சேவைகள் உரிய பயனாளிகளை சென்றடைவதை உறுதி செய்வது குறித்து அனைத்து அரசு அலுவலர்களுடன் கலந்துரையாடி  அரசின் திட்டங்கள், செயல்பாடுகளை விரைவுபடுத்தவும் மற்றும் வழங்கப்படும் சேவைகளின் தரத்தினை மேம்படுத்தவும் அறிவுரை மற்றும் ஆலோசனைகளை மாவட்ட ஆட்சித்தலைவர்அவர்கள் வழங்கினார்.இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ஆனந்தி, திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) திருமதி வானதி, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) திருமதி மோகனா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அனைத்து அரசுத்துறை உயர் அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News