மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் திருவில்லிபுத்தூர் வட்டாரப் பகுதிகளில் அரசின் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி .I A S., அவர்கள் திருவில்லிபுத்தூர் நகராட்சி தொடக்கப்பள்ளி, திருவில்லிபுத்தூர் நகராட்சி பேருந்து நிலைய வணிக வளாக கட்டடப் பணிகள், புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகள், திருவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனை, வன்னியம்பட்டி காளீஸ்வரி அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி, பருத்தி ஆராய்ச்சி மையம் ஆகியவற்றை (15.09.2026) பார்வையிட்டு ஆய்வு செய்தார்.திருவில்லிபுத்தூர் வட்டாரப் பகுதிகளில் அரசின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள், கல்வி, மருத்துவம், போக்குவரத்து, வேளாண்மை மற்றும் பொதுமக்களுக்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் குறித்து இன்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மாவட்டத்தில் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத்திட்டத்தின் கீழ் 1 முதல் 5 வகுப்பு வரை ஊரகப் பகுதிகளில் 1055 பள்ளிகளில் 46,852 மாணாக்கர்கள், நகர்ப்புற பகுதிகளில் 145 பள்ளிகளில் 22,850 மாணாக்கர்கள் என மொத்தம் 1200 பள்ளிகளில் 69,702 மாணாக்கர்கள் பயன்பெற்று வருகின்றனர். அதன்படி திருவில்லிபுத்தூர் நகராட்சி தொடக்கப்பள்ளியில் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத்திட்ட செயல்பாடுகள், காலை உணவின் தரம், உணவு தயாரிக்கும் இடத்தின் தூய்மை மற்றும் சுகாதாரம், சமையல் நடைமுறைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.மேலும், இந்த திட்டம் 6 முதல் 8 வரை பயிலும் மாணாக்கர்களுக்கும் விரிவு படுத்த முன்னேற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில், வன்னியம்பட்டி காளீஸ்வரி அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மேலும், திருவில்லிபுத்தூர் நகராட்சி பேருந்து நிலையத்தில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.3.25 கோடி மதிப்பில் 29 கடைகள், உணவகம் மற்றும் சுகாதார வளாகத்திற்கான கட்டடங்களும், திருவில்லிபுத்தூர் அத்திக்குளம்-தெய்வேந்திரி ஊராட்சியில் ரூ.16.60 கோடி மதிப்பில் 67 கடைகள், 2 உணவகம், சுகாதார வளாகம் உள்ளிட்ட வசதிகளுடன் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருவதை ஆய்வு செய்யப்பட்டது. இந்த பணிகளை பொதுமக்களின் நீண்டகால பயன்பாட்டை கருத்தில் கொண்டு, தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் முறையாக அமைத்து, கட்டுமானப் பணிகளை நிர்ணயிக்கப்பட்ட தரநிலைகளுக்கு உட்பட்டு குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது
அதுபோல், திருவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் மருத்துவ சேவைகள், உள்நோயாளிகள் மற்றும் வெளிநோயாளிகளுக்கான வசதிகள், மருந்துகளின் இருப்பு, மருத்துவ உபகரணங்கள், குடிநீர் மற்றும் சுகாதார வசதிகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்தும், திருவில்லிபுத்தூர் நகராட்சி நியாய விலைக்கடையில் குடும்ப அட்டைதார்களுக்கு வழங்கப்படும் அத்தியாவசியப் பொருட்களின் இருப்பு, விற்பனைப் பதிவேடுகள் உள்ளிட்டவை குறித்தும், திருவில்லிபுத்தூர் பருத்தி ஆராய்ச்சி மையத்தில் பருத்தி சாகுபடி தொடர்பான ஆராய்ச்சிப் பணிகள், புதிய தொழில்நுட்பங்கள், விவசாயிகளுக்கான பயிற்சிகள், பருத்தி உற்பத்தித் திறனை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.
அரசின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் அனைத்தும் பொதுமக்களின் தேவைகளை கருத்தில் கொண்டு தரமான முறையில் செயல்படுத்தப்படுவதையும், திட்டங்களின் பயன்கள் முழுமையாக பொதுமக்களை சென்றடைவதையும் தொடர்ந்து கண்காணித்து உறுதி செய்ய சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
இந்த ஆய்வின் போது, திட்ட இயக்குநர்(தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்) திரு.இலக்குவன், இணை இயக்குநர்(மருத்துவப் பணிகள்) மரு.செந்தில்குமார், வேளாண்மை இணை இயக்குநர் திரு.மோகன்தாஸ் சௌமியன், முதன்மை கல்வி அலுவலர் திரு.அரவிந்தன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) திரு.கணபதி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வேளாண்மை) திருமதி அ.அம்சவேணி, திருவில்லிபுத்தூர் நகராட்சி ஆணையர் திரு.குமார், உதவி பொறியாளர்கள், அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply