வெம்பக்கோட்டையில் மூன்றாம் கட்ட அகழாய்வு பணிகள்
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், (18.06.2024) தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் அகழாய்வு பணிகளை காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்ததை தொடர்ந்து, விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டையில் மூன்றாம் கட்ட அகழாய்வு பணிகளை விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் திரு.ப.மாணிக்கம் தாகூர் அவர்கள் மற்றும் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.ரகுராமன் அவர்கள் முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் நடைபெற்று வரும் அகழ்வாய்வு பணிகளை பார்வையிட்டார்.வைப்பார் ஆற்றின் நதிக்கரை ஒட்டிய நாகரிகத்தில் இருந்து செலுத்தோங்கிய தமிழரின் பண்பாட்டை அறிவியல் பூர்வமாக எடுத்து ஆவண படுத்துவதற்காக ஏற்கனவே வெம்பக்கோட்டை இரண்டு கட்டங்களாக அகழாய்வு பணிகள் முடிக்கப்பட்டு, அதில் எடுக்கப்பட்ட தொல்லியல் பொருட்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.வெம்பக்கோட்டை விஜயகரிசல்குளம் மேட்டுக்காட்டில் கடந்த 16.03.2022 அன்று முதற்கட்டமாகவும், 06.04.2023 அன்று இரண்டாம் கட்டமாகவும், அகழாய்வு பணிகள் தொடங்கப்பட்டு பணிகள் நடைபெற்றன.தற்பொழுது மூன்றாவது கட்ட அகழாய்வு பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்திருக்கிறார்கள்.இந்த மூன்றாம் கட்ட அகழாய்வு பணிகள் சுமார் ரூ.30 இலட்சம் மதிப்பில் இன்று தொடங்கப்பட்டிருக்கின்றது.
வெம்பக்கோட்டை என்பது தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வெம்பக்கோட்டை வட்டத்தில், வைப்பார் ஆற்றின் வடகரையில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது சிவகாசி - கழுகுமலை சாலையில் சிவகாசியிலிருந்து 15 கிமீ தொலைவிலும், கழுகுமலைக்கு தெற்கே 23 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது. அய்யனார் கோயிலுக்கு வடக்கே பெரிய தொல்லியல் வாழ்விட மேடு அமைந்துள்ளது. இத்தொல்லியல் மேடு உள்ளூர் மக்களால் மேட்டுக்காடு அல்லது உச்சிமேடு என்று அழைக்கப்படுகிறது. 25 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் பரந்து அமைந்திருக்கும் வாழ்விடமேடானது தரை மட்டத்திலிருந்து சுமார் 2 மீ உயரம் வரை உயர்ந்து, புவியியல் ரீதியாக 9º 20'3.3972" N மற்றும் 77º 46'2.568" E- க்கு இடையில் அமைந்துள்ளது.தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையால் 2021-2022 ஆம் ஆண்டு வெம்பக்கோட்டையில் அகழாய்வு தொடங்கப்பட்டது. இங்கு மேற்கொள்ளப்பட்ட இரண்டு கட்ட அகழ்வாராய்ச்சியில் மொத்தம் 34 அகழாய்வு குழிகள் தோண்டப்பட்டுள்ளன, மேலும் 7800-க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கிடைத்துள்ளன.
வெம்பக்கோட்டை அகழாய்வில் நுண்கற்காலத்தைச் சேர்ந்த கருவிகள், கருவிகளை செய்ய பயன்படும் மூலப்பொருட்கள் அதிக அளவில் கிடைத்துள்ளன. அகழாய்வில் அதிக எண்ணிக்கையிலான சங்குகளால் செய்யப்பட்ட வளையல்கள், மணிகள், மோதிரங்கள் மற்றும் மூலப்பொருட்கள் கிடைத்துள்ளன. இவை வெம்பக்கோட்டை சங்க காலத்தில் சங்கு பொருட்கள் செய்யும் தொழிற்கூடமாக இருந்தமைக்கானச் சான்றுகளாக அமைகின்றன.இரண்டாம் கட்ட அகழாய்வில் கண்ணாடி மணிகள் உற்பத்தி செய்தமைக்கான தொழிற்கூடச் சான்றுகள் கிடைத்துள்ளன.வெம்பக்கோட்டை உள்நாட்டு மற்றும் வடநாட்டுடன் வணிகத் தொடர்பு இருந்தமைக்கானச் சான்றுகளாக சூதுபவள மணிகள், செவ்வந்திக்கல் மணிகள், மற்றும் அறிய வகை கற்களால் செய்யப்பட்ட மணிகள், தந்தத்திலான செய்யப்பட்ட மணிகள், ஆட்டக்காய்கள், பதக்கங்கள் மற்றும் சுடுமண்ணால் செய்யப்பட்ட முத்திரைகள் கிடைத்துள்ளன.
மேலும் சுடுமண்ணால் செய்யப்பட்ட விளையாட்டுப் பொருட்களான ஆட்டக்காய்கள், பகடைக்காய், பந்துகள், வட்டச்சில்லுகள், சிறிய கலையங்கள் மற்றும் மனித, விலங்கு உருவங்கள் அதிக அளவில் கிடைத்துள்ளன. இரண்டு கட்ட அகழாய்வுகள் சேர்த்து மொத்தம் 13 செப்பு நாணயங்கள் கிடைத்துள்ளன. அதில் வேநாடு சேரர் நாணயங்கள், மதுரை நாயக்கர் கால நாணயங்கள், செஞ்சி நாயக்கர் கால நாணயங்கள் மற்றும் தஞ்சை நாயக்கர் கால நாணயங்கள் கிடைத்துள்ளன.சுடுமண் அணிகலன்களாக மணிகள், காதணிகள், பதக்கங்கள் ஆகியவை கிடைத்துள்ளன. சுடுமண்ணால் செய்யப்பட்ட 20- க்கும் மேற்பட்ட திமிலுள்ள காளைகள் கிடைத்துள்ளன. மேலும் 100-க்கும் மேற்பட்ட இரும்புப் பொருட்களும், 40க்கும் மேற்பட்ட செப்புப் பொருட்களும் கிடைத்துள்ளன. தங்கத்திலான செய்யப்பட்ட 4 அணிகலன்கள் அகழாய்வில் கிடைத்துள்ளன.
அகழாய்வில் சிவப்பு வண்ணப் பானை ஓடுகள், கருப்பு-சிவப்பு வண்ணப் பானை ஓடுகள், மெருகூட்டப்பட்ட கருப்பு வண்ணப் பானை ஓடுகள் மற்றும் சிவப்பு வண்ணம் பூசப்பட்ட வண்ணப் பானை ஓடுகள் போன்றவை கிடைத்துள்ளன.வெம்பக்கோட்டை வாழ்விட மேட்டில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியின் மூலம் இம்மேடானது தொடக்க வரலாற்றுக் கால முதல் -இடைக்கால வரையிலான தொடர்ச்சியான எச்சங்களை வெளிப்படுத்துகிறது.இந்த அகழாய்வில் இதற்கு இருந்து எடுக்கக்கூடிய தொல் தமிழர்களின் தொல்பொருள்கள், சான்றுகள் எல்லாம் விருதுநகர் மாவட்டத்தில் தற்பொழுது சுமார் ரூ.6.8 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரக்கூடிய அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்துவதற்காகவும், இந்த அகழாய்வு பணிகள் மூலமாக வரக்கூடிய சான்றுகளை எல்லாம் ஆவணப்படுத்தி இந்த பகுதியின் உடைய வரலாறு குறித்து நூலாக எழுதுவதற்கு தொல்லியல் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
0
Leave a Reply