முதியோரைப் பாதிக்கும் வைட்டமின் டி குறைபாடு
முதுமையில் மிகவும் அவசியமானது வைட்டமின் டி ஆகும். இது எலும்பை உறுதிசெய்ய மிகவும் உதவும். நமது உடல் சூரிய ஒளியில் படும்பொழுது தோலுக்கு அடியில் உள்ள ஒரு வகைக் கொழுப்பிலிருந்துவைட்டமின் டி உற்பத்தியாகிறது.சிறுகுடலிலிருந்து கால்சியம் தாதுப்பொருளை உறிஞ்சி ரத்தத்திற்கு அனுப்பி வைப்பதற்கு வைட்டமின் டி தேவைப்படுகிறது. இதனால் எலும்பு வலிமை பெறுகிறது.
வைட்டமின் டி குறையக் காரணங்கள்
சூரிய ஒளி அதிகம் படாமல் இருப்பது.
வீட்டிலேயே முடங்கிக் கிடப்பது.
முதியோர் இல்லங்களில் தொடர்ந்து வசிப்பது.
நோய் காரணமாக நீண்ட நாட்களாகப் படுக்கையிலேயே படுத்திருப்பது.
சத்துள்ள உணவுகளைக் குறைவாக உண்பது.
செரிமானக் குறைபாடு கல்லீரல் மற்றும் சிறுநீரக நோய்ப் பாதிப்பு தொடர்ந்து வலிப்பு நோய்க்கு மாத்திரை எடுத்துக்கொள்வது.
தொல்லைகள்
சதைப் பிடிப்பு, உடல் வலி,உடல் பலவீனம்,அடிக்கடி கீழே விழுதல்,மூட்டு வலி,எலும்பு முறிவு,இதய நோய், மறதி நோய் மற்றும் புற்றுநோய் போன்றவை வர வாய்ப்பு அதிகம் உண்டு.
கண்டறிதல்
ரத்தப் பரிசோதனை மூலம் வைட்டமின் டி எந்த அளவு உள்ளது என்று தெரிந்துகொண்டு அதற்கு தக்கபடி சிகிச்சை பெறலாம். வைட்டமின் டி சரியான அளவு 30 ng/mL -க்கு மேல் இருக்க வேண்டும்.
மருத்துவரின் ஆலோசனைப்படி வைட்டமின் டி 2000 யூனிட் மாத்திரையைத் தினமும் அல்லது 60,000 யூனிட் மாத்திரையை வாரம் ஒருமுறை 2-3 மாதங்கள் தொடர்ந்து சாப்பிட வேண்டும்.
வைட்டமின் டி குறைபாட்டைத் தவிர்க்க..தினமும் குறைந்தது 30 - 60 நிமிடமாவது வெயில் படுமாறு நடைப்பயிற்சி செய்ய வேண்டும்.. தினமும் ஒரு கப் பால் அவசியம்
சைவ உணவுகளில் பால், தயிர், வெண்ணெய் மற்றும் பால் பொருட்களைச் சற்று அதிகம் எடுத்துக்கொள்ளவும். தானிய வகைகளை (ராகி,கம்பு,சோளம், வரகு,தினை ) உணவில் சற்று அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். மீன், மீன் எண்ணெய் (காட்லிவர் எண்ணெய்), முட்டையின் மஞ்சள் கரு, ஈரல், காளான் முதலியவற்றை முடிந்தளவிற்குச் சேர்த்துக்கொள்ளவும்.
கால்சியம் அதிகமுள்ள உணவு தினமும் அவசியம் தேவை. மருத்துவரின் ஆலோசனைப்படி கால்சியம் மாத்திரையை எடுத்துக்கொள்ளலாம்.தினமும் சூரிய ஒளியில் நடப்போம். உடல் எலும்பை உறுதி பெறச் செய்வோம்.
0
Leave a Reply