விருதுநகர் பாராளுமன்ற மக்களவைத்தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை
விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கையை பொறுத்தவரையில் 6 சட்டமன்ற தொகுதிகளுக்கு தனித்தனியே 6 பிரிவுகளாக அந்தந்த உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கண்காணிப்பில் காலை 08.00 மணிக்கு தொடங்கி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.வாக்கு எண்ணிக்கையின் போது முதலாவதாக காலை 8.00 மணிக்கு தபால் வாக்குகளும், அதன் தொடர்ச்சியாக காலை 8.30 மணிக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளும் எண்ணப்படும். வாக்கு எண்ணும் பணிகளுக்காக ஒவ்வொரு சட்டமன்ற தொகுதி வாரியாக தலா 14 மேஜைகள் அமைக்கப்பட்டு, ஒவ்வொரு மேசையிலும் வாக்கு எண்ணிக்கை கண்காணிப்பாளர், நுண் பார்வையாளர், உதவியாளர் என 3 அலுவலர்கள் வீதம் சீரற்ற தெரிவு முறையில் தேர்வு செய்யப்பட்டு, 102 வாக்கு எண்ணிக்கை மேற்பார்வையாளர்கள், 102 வாக்கு எண்ணிக்கை உதவியாளர்கள் மற்றும் 102 நுண் பார்வையாளர்கள் என மொத்தம் 306 வாக்கு எண்ணிக்கை பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வாக்கு எண்ணிக்கை அலுவலர்களுக்கு வாக்கு எண்ணிக்கையின் போதும், மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன. மேலும், வாக்கு எண்ணும் மையத்தில் வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் இந்திய தேர்தல் ஆணையத்தினால் வகுக்கப்பட்டுள்ள விதிமுறைகளை கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.ஒவ்வொரு சட்டமன்ற தொகுதி வாரியாக 19 முதல் 23 சுற்றுகளில் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.அதன்படி, விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில், 195-திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் உள்ள 304 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள் 22 சுற்றுகளிலும்,196-திருமங்கலம் சட்டமன்ற தொகுதியில் உள்ள 311 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள் 23 சுற்றுகளிலும், 204-சாத்தூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள 286 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள் 21 சுற்றுகளிலும், 205-சிவகாசி சட்டமன்ற தொகுதியில் உள்ள 277 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள் 20 சுற்றுகளிலும், 206-விருதுநகர் சட்டமன்ற தொகுதியில் உள்ள 256 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள் 19 சுற்றுகளிலும், 207-அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் உள்ள 255 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள் 19 சுற்றுகளிலும் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
மேலும் வாக்கு எண்ணும் மையத்திற்கு செல்லும் அனைவரும் பரிசோதனை செய்த பிறகே உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவார்கள். வாக்கு எண்ணும் மையத்திற்குள் கைப்பேசி, கால்குலேட்டர் உள்ளிட்ட எந்தவிதமான மின்னணு சாதனங்களையும் கொண்டு செல்வதற்கு கட்டாயம் அனுமதி இல்லை.எனவே வாக்கு எண்ணிக்கையின் போது இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ள அனைத்து விதிமுறைகளையும் முறையாக பின்பற்றி முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.
0
Leave a Reply