நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு சென்னையில் 21.09.2024 முதல் 06.10.2024 வரை நடைபெறும் கண்காட்சி மற்றும் விற்பனையில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் தங்கள் உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்தலாம்
விருதுநகர் மாவட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) மூலம் கிராமப்புற மற்றும் நகர்ப்புற மகளிரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு நிர்வாக பயிற்சி, நிதி மேலாண்மை பயிற்சி மற்றும் வாழ்வாதார மேம்பாட்டு பயிற்சிகள் (தொழில் முனைவோர் பயிற்சி) அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், வாழ்வாதார மேம்பாட்டு பயிற்சி பெற்ற மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் தொழில் முனைவோர்களாகி சுய தொழில் செய்து வருகின்றனர்.
தற்போது சுய உதவிக்குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை சந்தைப்படுத்தும் வகையில் பல்வேறு கண்காட்சி மற்றும் விற்பனை நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, 21.09.2024 முதல் 06.10.2024 முடிய நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு சென்னை, வள்ளுவர் கோட்டம், அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்தி பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனை நடைபெறவுள்ளது.
இக்கண்காட்சியில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்கள் தாங்கள் உற்பத்தி செய்யும் அனைத்து வகை பொருட்களையும் குறிப்பாக நவராத்திரி திருவிழா சார்ந்த பொருட்கள் மற்றும் கொலு பொம்மைகளை காட்சிப்படுத்தி விற்பனை செய்ய அரிய வாய்ப்பு தரப்படுகிறது.எனவே, இக்கண்காட்சியில் கலந்து கொள்ள விருப்பமுள்ள மகளிர் சுய உதவிக்குழுக்கள் தங்கள் பெயர், முகவரி, உற்பத்தி செய்யும் பொருட்களின் விவரம் மற்றும் அலைபேசி எண் ஆகியவற்றை 31.08.2024 அன்று மாலை 6.00 மணிக்குள் https://exhibition.mathibazaar.com/login என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்களால் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
0
Leave a Reply