கரிசல் இலக்கிய கழகம் சார்பில் கோவில்பட்டியில் நடைபெற்ற எழுத்தாளர் கு.அழகிரிசாமி நினைவு கருத்தரங்கம்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் கி.ரா.மணி மண்டபத்தில் 06.07.2024 அன்று கரிசல் இலக்கிய கழகம் சார்பில் தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலுவலர் திரு.அஜய் சீனிவாசன் அவர்கள் முன்னிலையில், நடைபெற்ற எழுத்தாளர் கு.அழகிரிசாமி நினைவு கருத்தரங்கத்தில் விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் சிறப்புரையாற்றினார்.
தென் தமிழ்நாட்டில் இந்தியா முழுவதும் முழுமைக்கும் ஏற்பட்ட தாது வருட பஞ்சம் குறிப்பாக தென்தமிழ்நாட்டில், அதுவும் குறிப்பாக வறண்ட பூமியாக இருக்கக்கூடிய விருதுநகரில் இருக்கக்கூடிய பகுதிகளெல்லாம், வைகைக்கும் தாமரபரணிக்கும் இடையே இருக்கக்கூடிய இந்த வானம் பார்த்த பூமி பகுதிகளில், ஏற்பட்ட தாது வருட பஞ்சத்தில் ஏற்பட்ட சமூக மாற்றங்களை மிக அழகாக பதிவு செய்தவர். ஒரு எழுத்தாளன் ஆய்வாளனாக, வரலாற்று பார்வையாளனாக, இந்த சமூகப் பொறுப்பு மிகுந்த செயல்பாட்டாளராக திகழ முடியும் என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம் கு.அழகிரிசாமி அவர்கள்.இந்த நிகழ்ச்சியை கொண்டாடுவதற்கு காரணம், இன்று நாம் யாரைப் பற்றி பேசுகின்றோமோ, அவர் கல்லூரிக்கு செல்லாதவர், பள்ளியினுடைய மேல்நிலைப் படிப்பைக் கூட படிக்காதவர். ஆனால் தன்முனைப்போடு முயன்று ஒரு மிகச்சிறந்த எழுத்தாழ்மையொடு நிற்காமல், அந்த எழுத்தின் வழியாக இவ்வளவு காலம் கடந்தும், நாம் பேசுவதற்கும், இன்றும் இந்த சமூகத்திற்கு வழிகாட்டுவதற்கும் மிகச் சிறந்த படைப்புகளை எழுதியவர். அவருடைய அந்த வார்த்தை பிரயோகங்கள் மிக கூர்மையாக இருக்கும். கூர்மையான வசனங்களுக்கும், எழுத்துக்களுக்கு சொந்தக்காரர். அவரிடம் இருந்து கற்றுக் கொள்வதற்கு இன்றைய மாணவர்களுக்கும், இன்றைய குழந்தைகளுக்கும், அதைவிட இன்று அவர்களுக்கு கற்பிக்கக் கூடிய ஆசிரியர்களுக்கும் நிறைய இருக்கிறது. அதை நாம் நினைத்துக் கொள்வதற்காகத்தான் இன்று கு.அழகிரிசாமி அவர்களுடைய நினைவு நாள் கருத்தரங்கம். கரிசல் இலக்கிய கழகம் விருதுநகரில் ஆரம்பிக்கப்பட்டு இருந்தாலும், அதற்கென்று நில எல்லை இருக்கக்கூடாது. கரிசல் இலக்கிய ஆர்வலர்கள், அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக இந்த நிகழ்ச்சியை இந்த மண்டபத்தில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
இக்கருத்தரங்கில் நாவுக்கரசர் திரு.நாஞ்சில் சம்பத் அவர்கள், “அழகிரிசாமி இன்று” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் கரிசல் இலக்கிய கழக செயலாளர் மருத்துவர் த.அறம் அவர்கள் வரவேற்புரையும், முனைவர் சத்தியபாலன் அவர்கள் நன்றியுரையும் வழங்கினார்கள்.மேலும், கவிஞர் அகிலா கிருஷ்ணமூர்த்தி அவர்கள் எழுதிய “அன்னதான வரிசையில் செயற்கை நுண்ணறிவு” என்ற ஹைக்கூ கவிதை நூல் வெளியிடப்பட்டது.பின்னர், தமிழ்நாடு கலை இலக்கிய பெரு மன்றம் சார்பில் கு.அழகிரிசாமி நூற்றாண்டை முன்னிட்டு, இணைய வழியில் அவருடைய 110 சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளை “நாளும் ஒரு கதை” என்ற தலைப்பில் கதை சொல்லிய கதை சொல்லிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திரு.சே.ரா.நவீன்பாண்டியன், கல்லூரி மாணவ, மாணவியர்கள், ஆசிரியர்கள், கரிசல் இலக்கிய நிர்வாகிகள், எழுத்தாளர்கள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply