எழுத்தாளர் கி.ரா. அவர்களின் 103-வது பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு, எழுத்தார்வம் மிக்க மாணவர்களுக்கு ஒரு நாள் சிறுகதைப் பயிலரங்கம்
விருதுநகர் மாவட்டம், சிவகாசி ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரியில் (16.09.2024) கரிசல் இலக்கிய கழகம் மற்றும் சிவகாசி ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரி இணைந்து ஏற்பாடு செய்த எழுத்தாளர் கி.ரா. அவர்களின் 103-வது பிறந்த நாளை முன்னிட்டு, எழுத்தார்வம் மிக்க மாணவர்களுக்கு ஒரு நாள் சிறுகதைப் பயிலரங்கம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,I A S, அவர்கள் தலைமையில் நடைபெற்றது.பின்னர், கி.ரா.வின் கதைகளில் இருந்து பத்து கதைகளை தேர்ந்தெடுத்து “முத்துக்கதைகள் பத்து” என்ற தலைப்பில் தயாரிக்கப்பட்ட புத்தகங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கல்லூரி மாணவர்களுக்கு வழங்கினார்.
நமது மண்ணில் வாழ்ந்த ஒரு மகத்தான எழுத்தாளர். இந்த மண்ணில் பல நூற்றாண்டுகளாக இருந்த வறுமை, ஜாதி, ஏற்றத்தாழ்வு, பெண் அடிமை, விவசாயிகள் காலங்காலமாக சந்தித்து வரக்கூடிய நெருக்கடிகள், இந்தியா சுதந்திரம் பெற்றதற்கு பிறகு அனைத்து தரப்பு மக்களின் வளர்ச்சியிலும், அவர்கள் வாழ்விலும் விரும்பத்தகுந்த மாற்றங்கள் ஏற்பட்டதா என்பன குறித்த வரலாற்று ஆவணமாக கி.ரா-வின் சிறுகதைகள் இருக்கும்.ஒரு சிறுகதை என்றால் என்ன? சிறுகதையை நீங்கள் எவ்வாறு படைக்க முடியும்? ஒரு சிறுகதை என்பது எப்படி இருக்க வேண்டும் என்பது எல்லாம் கி.ரா.வின் சிறுகதைகளில் இருந்தே நாம் கற்றுக்கொள்ளலாம்.ஒரு சாதாரண கதை என்பது இந்த சமூகத்தில் உள்ள மாற்றங்களை எவ்வாறு பதிவு செய்கிறது. சமூகத்தில் விளிம்பு நிலையில் இருக்கக்கூடியவர்களின் பிரச்சனைகளை எவ்வாறு பதிவு செய்கிறது. எளிய மனிதர்களின் மன உணர்வுகளை எவ்வாறு பதிவு செய்கிறது என்று சொல்லலாம்.
எனவே நீங்களும் இதுபோன்ற எழுத்துக்களை வாசிப்பதன் மூலமாக சமூகத்தின் அனுபவங்களை பெற முடியும். அனைவரும் சிறுகதை வாசித்து விட்டு, சிறுகதை எழுத வேண்டும் என்று அவசியம் இல்லை. ஒரு சிறுகதை வாசிப்பது என்பது அந்த சிறுகதையில் இருக்கக்கூடிய கதை மாந்தர்களின் வழியாக அந்த சூழலில் நாம் வாழ்ந்து பார்க்கலாம்.அந்த கதை மாந்தர்கள் வழியாக மனிதர்களோடு பேசுவது, நாம் எதிர்கொள்ளாத அனுபவங்களை ஒருவேளை எதிர்க்கொண்டால், நாம் எவ்வாறு அதற்கு எதிர்வினை ஆற்றுவோம் என்பது குறித்து நமக்கு சொல்லித்தருவது சிறுகதை.
நம் மண்ணைச் சேர்ந்த கரிசல் இலக்கியத்தின் பிதாமகன் என்று போற்றக்கூடிய தன்னுடைய வாழ்நாளில் ஏறக்குறைய 80 ஆண்டுகள் தொடர்ச்சியாக எழுதிக் கொண்டு சாதாரண மனிதர்கள் பற்றி, விவசாய பெருங்குடி மக்களை பற்றி, தொழிலாளர்களை பற்றி, பெண்களுடைய முன்னேற்றம் பற்றி, பெண் விடுதலைப் பற்றி, எளிய மனிதர்களைப் பற்றி தன்னுடைய கதைகள் முழுவதிலும் பதிவு செய்தவர் எழுத்தாளர் கி.ரா. அவர்கள்.எழுத்தாளர் கி.ரா.வின் அவர்களின் பிறந்த தினமான இன்று நம் அனைவரும் அவரின் சிறுகதைகள் வழியாக இந்த சமூகத்தில் புரிந்து கொள்வதற்கும், நாளை இந்த சமூகம் விரும்பத் தகுந்த மாற்றங்களை அடைவதற்கு நம்முடைய செயல்பாடுகள் வழியாக உறுதி ஏற்பதற்கும் இந்த நாள் இனிய நாளாக அமைந்திருக்கிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், எழுத்தாளர் திரு.கி.ரா.பிரபாகர் அவர்கள் முன்னிலை வகித்தார்கள். எழுத்தாளர்கள் திருமதி.விஜிலா தேரிராஜன், திரு.முத்துபாரதி, திரு.சரவணகாந்த், ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரி முதல்வர் முனைவர் பெ.கி.பாலமுருகன், துணை முதல்வர் செல்வி இரா.முத்துலெட்சுமி, கரிசல் இலக்கிய கழக செயலாளர் மரு.த.அறம், கல்லூரி பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்கள், கல்லூரி மாணவ, மாணவியர்கள் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply