தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம்(StartupTN) சார்பில் நடைபெற்ற, 101-வது “காபி வித் கலெக்டர்” கலந்துரையாடல் நிகழ்ச்சி
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில்(30.08.2024) தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம்(StartupTN) சார்பில் நடைபெற்ற, புதிய தொழில் தொடங்க ஆர்வமிக்க கல்லூரி மாணவர்கள், ஸ்டார்ட்-அப் சூழல் அமைப்பில் உள்ள பங்குதாரர்கள்(Stakeholders) விருதுநகர் தணிக்கையாளர் அமைப்பின் பிரதிநிதிகளுடனான 101-வது “காபி வித் கலெக்டர்” கலந்துரையாடல் நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள், புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புக்கள், அதற்கான அரசின் திட்டங்கள் குறித்தும், தொழில் திறன்களை ஊக்கப்படுத்தும் வகையிலும் கலந்துரையாடி, பல்வேறு அறிவுரை மற்றும் ஆலோசனைகளை வழங்கினார்.
விருதுநகர் மாவட்டத்தில் பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் கல்வி, பொது அறிவு, விளையாட்டு, ஓவியம், இசை உள்ளிட்ட பல்வேறு திறன் அடிப்படையில் மாணாக்கர்களின் திறன்களை கண்டறிந்து, மாணவ, மாணவியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் அழைத்து கலந்துரையாடும் “காபி வித் கலெக்டர்” நிகழ்ச்சி 07.01.2022 அன்று தொடங்கப்பட்டு, மொத்தம் 100 கலந்துரையாடல் நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளது.
இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம், மாணவர்களுடைய உயர்ந்த இலட்சியம், அவர்களுடைய உயர்கல்வி பயில்வதற்கு வழிகாட்டுதல், போட்டி தேர்வுகளை எதிர்கொள்ளுதல், தோல்வியை எவ்வாறு எதிர்கொள்வது, அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் அவர்களுடைய சந்தேகங்களை அகற்றி, அவர்கள் வாழ்க்கையில் எங்கு பிறந்தோம், நாம் அரசு பள்ளியில் பயின்றோம், நமக்கு வசதி இல்லை, நமக்கு பின்புலம் இல்லை என்பதெல்லாம், வாழ்க்கையில் ஒரு உயர்ந்த இடத்தை அடைவதற்கு ஒரு தடை இல்லை என்பதை புரிய வைத்து, தன்னம்பிக்கை, விடா முயற்சி, கடின உழைப்புடன் தொடர்ந்து உழைத்தால் நாம் எதையும் சாதிக்க முடியும் என்பதை உணர்த்தும் வகையில் சரியான வழிகாட்டுதல் வழங்குவதே இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும்.
இந்நிகழ்ச்சியின் மூலம் எழுத்தாளர்கள், பேச்சாளர்கள், விளையாட்டு வீரர்கள் என பல்வேறு துறைகளிலும் இருக்கக்கூடிய சிறந்த படைப்பாளிகள் மற்றும் சாதனையாளர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பல்வேறு வழிகாட்டுதல்களை வழங்கி வருகிறார்கள்.
அதன் ஒரு பகுதியாக, இன்று(30.08.2024) புதிய தொழில் தொடங்க ஆர்வமிக்க கல்லூரி மாணவர்கள், ஸ்டார்ட்-அப் சூழல் அமைப்பில் உள்ள பங்குதாரர்கள், விருதுநகர் தணிக்கையாளர் அமைப்பின் பிரதிநிதிகளுடனான 101-வது “காபி வித் கலெக்டர்” கலந்துரையாடல் நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மற்றும் StartupTN நிறுவன நிர்வாகிகள் கலந்து கொண்டு, புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புக்கள், அதற்கான அரசின் திட்டங்கள் குறித்து கலந்துரையாடினார்கள்.
தமிழக அரசு புதிய தொழில்களை தொடங்குவதற்கும், ஏற்கனவே செயல்பட்டு வரும் தொழில்களை ஊக்குவிப்பதற்கும் பல்வேறு துறைகள் மூலம் திட்டங்களையும், மானியங்களை வழங்கி, புதிய தொழில் முனைவோர்களை உருவாக்குவதற்கும், தொழில் வளர்ச்சியை பெருக்குவதற்கும் தொடர்ச்சியாக பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.அதில், தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கமானது, மாநிலத்தில் புத்தொழில் மற்றும் புத்தாக்க தொழில்முனைவு செயல்பாடுகளில் தனிக்கவனம் செலுத்தி புத்தொழில் சூழமைவினை வலுப்படுத்தும் நோக்கத்தில், தமிழ்நாடு அரசால் நிறுவப்பட்ட நிறுவனம் ஆகும்.
இந்த நிறுவனம் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் கீழ் 8 நிறுவனமாக இயங்கி வருகின்றது. இந்நிறுவனம் StartupTN என்ற பெயரில் விளம்பரப்படுத்தப்படுகின்றது. தமிழ்நாட்டினை உலகளாவிய அளவில் புத்தொழில் நிறுவனங்கள் இயங்குவதற்கு உகந்த தலைசிறந்த இடங்களில் ஒன்றாக மாற்ற வேண்டும் என்ற நீண்ட கால இலக்கினை முன்வைத்து, புத்தொழில் நிறுவனங்களுக்கு ஆதரவாக துணிகர முதலீட்டு வாய்ப்புகளை உருவாக்கித் தருவது, உலகத்தரம் வாய்ந்த தொழில்வளர் காப்பகங்களை வடிவமைப்பது, தொழில் விரைவாக்க பயிற்சிகள் அளிப்பது, சந்தைத் தொடர்புகளை ஏற்படுத்துவது, தொழில் முனைவு சார்ந்த பல்வேறு செயல்பாடுகளை ஊக்குவிப்பது போன்ற பலவகையான செயல்திட்டங்களை வகுத்து இயங்கி வருகின்றது.
விருதுநகர் மாவட்டம் தொழில் நிறுவனங்கள் அதிகப்படியாக எண்ணிக்கையில் கொண்ட மாவட்டமாகும். நமது பகுதிகளில் காலங்காலமாக இந்த சிறு, குறு, நடுத்தர தொழில்கள் தொடர்ச்சியாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. சமுதாயத்தில் பொருளாதாரத்தில் விளிம்பு நிலையில் இருக்கக் கூடிய மக்களுக்கு அரசினுடைய திட்டங்கள் விரைவாக சென்று சேர வேண்டும் என்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.குறிப்பாக புதிய தொழில் சிந்தனை கொண்ட மாணவர்கள், தொழில் தொடங்க தமிழ்நாடு அரசின் StartupTN என்ற நிறுவனம் மூலம் சிறப்பான வாய்ப்புகள் உள்ளன.
இந்த நிறுவனம் மூலம் தமிழ்நாட்டில் தயாரிப்புகளை பல புத்தொழில் நிறுவனங்கள் புதுமையான உற்பத்தி செய்தாலும் அவற்றை சந்தைப்படுத்துவதிலும் வணிக சந்தையில் தனித்துவமான இடத்தை அடைவதிலும் பல சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். இந்த சிக்கல்களுக்கு தீர்வு காணும் வண்ணம் சந்தைப்படுத்துதல்(Marketing) மற்றும் தனித்த வணிக அடையாளத்துடன் இயங்குதல்(Branding) ஆகியவற்றை குறித்த கற்றல் களமாக "பிராண்ட் லேப்ஸ்" என்ற தொடர் நிகழ்வு ஒருங்கிணைக்கப்படுகிறது.
இன்னும் நமது மாவட்டத்தில் அதிகமாக தொழில் முனைவோர்கள் உருவாக வேண்டும். உற்பத்தி மற்றும் சேவை தொழில்கள் மூலமாகத்தான் பொருளாதார வளர்ச்சி ஏற்படும். மாவட்ட நிர்வாகமும், அனைத்து துறைகளும் புதிய தொழில் முனைவோர்களுக்கு உறுதுணையாக இருக்கும் என தெரிவித்தார்.
0
Leave a Reply