விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் தலைமையில் (10.06.2024) நடைபெற்றது.இக்கூட்டத்தில், இலவச வீட்டுமனை பட்டா மற்றும் பட்டா மாறுதல், குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, முதியோர், விபத்து நிவாரணம், மாற்றுத்திறனாளிகள், நலிந்தோர் நலத்திட்டம் மற்றும் விதவை உதவித்தொகை, திருமண உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டது. மேலும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு அமருமிடத்திற்குச் சென்று, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.இம்மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்கள். மேலும் முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்கள். முன்னதாக, விருதுநகர் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் மூலம் 14 பயனாளிகளுக்கு தலா ரூ.96,011/- வீதம் ரூ.13,44,154/- மதிப்பிலான மோட்டார் பொருத்தப்பட்ட மூன்று சக்கர வாகனங்களையும், 3 பயனாளிகளுக்கு தலா ரூ.1,13,400/- வீதம் ரூ.3,40,200/- மின்கலம் பொருத்தப்பட்ட மூன்று சக்கர நாற்காலிகளையும், 10 பயனாளிகளுக்கு தலா ரூ.6,800/- வீதம் ரூ.68,400/- மதிப்பில் இலவச தையல் இயந்திரங்களையும் என மொத்தம் 27 பயனாளிகளுக்கு ரூ.17,52,754/- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.ராஜேந்திரன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திரு.பிரம்மநாயகம், உட்பட பல்வேறு துறை சார்ந்த அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம், சிவஞானபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் (10.06.2024) பள்ளி கல்வித்துறை சார்பில், மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா நோட்டு புத்தகங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ. ப.ஜெயசீலன் I A S,அவர்கள் வழங்கினார்.
மத்திய மோட்டார் வாகன விதி எண்.5-ன் படி 40 வயதிற்கும் மேற்பட்டவர்கள் பதிவு பெற்ற மருத்துவரிடம் மருத்துவச் சான்று பெற்ற பின்னரே புதிய ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கோ அல்லது பழைய ஓட்டுநர் உரிமத்தினைப் புதுப்பிக்கவோ இயலும்.மாநிலத்தின் ஒரு சில இடங்களில் தகுதி வாய்ந்த மருத்துவரிடம் மருத்துவச் சான்று பெறாமல், போலி மருத்துவர்களிடம் சான்றிதழ்கள் தயாரித்து சாரதி மென்பொருளில் பதிவேற்றம் செய்துள்ள நிகழ்வுகள் நடைபெற்று வந்துள்ளன. இது குறித்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனைத் தடுக்கும் விதமாக சாரதி மென்பொருளில் தகுதி வாய்ந்த மருத்துவர்கள் தங்களது இந்தியன் மருத்துவ கவுன்சிலின் பதிவுச் சான்று எண்ணை பதிவேற்றம் செய்து, சாரதி மென்பொருளில் கேட்கப்படும் தங்களது கிளினிக்/மருத்துவமனை உள்ளிட்ட அனைத்து விவரங்களை ஒரு முறை பதிவேற்றம் செய்து கொண்டு தங்களது பெயரினை ஒரு முறை பதிவு செய்துகொள்ள வேண்டும். இதனைத் தொடர்ந்து, தங்களது ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட அலைபேசி எண்ணுக்கு வரும் கடவுச் சொல்லை உள்ளீடு செய்ய வேண்டும். இதனை முடித்த பின்பு அவர்கள் சமர்ப்பித்த ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு, அவர்கள் சாரதி மென்பொருளைப் பயன்படுத்தி விண்ணப்பதாரர்களின் மருத்துவச் சான்றினை பதிவேற்றம் செய்வதற்கு அனுமதிக்கப்படும். மருத்துவர்கள் தங்களது விவரங்களை முதலில் உள்ளீடு செய்து தங்களுக்கான சாரதி மென்பொருளில் நுழைவினை ஒரு முறை உறுதி செய்துகொண்டால் போதுமானது. அவ்வாறு முறையாக சாரதி மென்பொருளில் பதிவு செய்து கொண்ட பின்னர் தொடர்ந்து விண்ணப்பதாரர்களுக்கான மருத்துவச் சான்றினை மருத்துவர்கள் எலக்ட்ரானிக் முறையிலேயே சாரதி மென்பொருளில் பதிவேற்றம் செய்து கொள்ள முடியும்.எனவே இந்தியன் மருத்துவ கவுன்சிலில் பதிவு பெற்ற மருத்துவர்கள் மட்டுமே சாரதி மென்பொருளை இனி பயன்படுத்தி விண்ணப்பதாரர்களுக்கான மருத்துவச் சான்றிதழினை மின்னணு வாயிலாக மட்டுமே பதிவேற்றம் செய்ய இயலும். இதன் மூலம் போலி மருத்துவர்கள் மூலம் வழங்கப்பட்ட மருத்துவச் சான்றிதழை முறைகேடாக பயன்படுத்தி வந்தது தடுக்கப்பட்டுள்ளது.இந்த சாரதி மென்பொருளில் மருத்துவர்கள் தங்களது விவரங்களை உள்ளீடு செய்வது குறித்தும் தங்களது பதிவுகளை உறுதி செய்வது குறித்தும் நாளை (11.06.2024) காலை 11.00 மணியளவில் மாநிலம் முழுவதிலுமுள்ள அந்தந்த வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் மூலம் ஒரு செயல்முறை விளக்கம் காண்பிக்கப்படும். அதில் கலந்துகொண்டு தங்களது பதிவுகளை இறுதி செய்யும் முறைகள் குறித்து மருத்துவர்கள் அறிந்துகொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் நகராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்., I A S., அவர்கள் (08.06.2024) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அதன்படி, திருவில்லிபுத்தூர் நகராட்சி மஜீத் நகர் பகுதியில், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ரூ.1.75 கோடி மதிப்பீட்டில்; கட்டி முடிக்கப்பட்டு, பயன்பாட்டில் உள்ள அறிவுசார் மையம் மற்றும் நூலகத்தையும்,திருவில்லிபுத்தூர் நகராட்சிக்குட்பட்ட மருத்துவர் காலனி FSTP வளாகத்தில், தூய்மை பாரத இயக்கத்தின் கீழ், ரூ.42.50 இலட்சம் மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள குப்பை கழிவுகளை தரம் பிரிக்கும் மையம் கட்டி முடிக்கப்பட்டுள்ளதையும், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.மேலும், நடைபெற்று வரும் பணிகளை விரைவாகவும், தரமானதாகவும் குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்மந்தப்பட்ட அரசு அலுவலர்களை அறிவுறுத்தினார்.இந்த ஆய்வின் போது, திருவில்லிபுத்தூர் ஆணையாளர் திரு.ராஜமாணிக்கம், வட்டாட்சியர் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் உடன் இருந்தனர்.
விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் வட்டம், மல்லிப்புதூர் ஊராட்சியில், குழந்தைகள் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் கீழ் இயங்கும்; சிறுவருக்கான அரசினர் குழந்தைகள் இல்லத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்., I A S ,அவர்கள் (08.06.2024) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.இந்த ஆய்வின் போது, சிறுவருக்கான அரசினர் குழந்தைகள் இல்லத்தில் உள்ள குழந்தைகளின் கல்வி உணவு, இருப்பிடம் உள்ளிட்ட சேவைகள் வழங்கப்பட்டது குறித்து குழந்தைகளிடம் கேட்டறிந்தார். பின்னர், குழந்தைகளின் தனித்திறன்கள், விளையாட்டு விருப்பங்கள் மற்றும் இதர தேவைகள் குறித்து கேட்டறிந்தார்.மேலும், பள்ளிக்கல்வித்துறையின் கலைத்திருவிழாவில் மாநில அளவில் இரண்டாம் இடம் பெற்ற சிறுவருக்கான அரசினர் குழந்தைகள் இல்ல குழந்தைகள் பறை நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டார்.இந்த ஆய்வின் போது, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் திருமதி க.அருள்செல்வி சிறுவருக்கான அரசினர் குழந்தைகள் இல்ல குழந்தைகள் கண்காணிப்பாளர் திருமதி சி.திலகவதி குழந்தைகள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் இருந்தனர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி லயன்ஸ் மேல்நிலைப்பள்ளியில் (09.06.2024) தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப்-IV (TNPSC Group-IV) பணியிடங்களுக்கான தேர்வு நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், IAS., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் (09.06.2024) சிவகாசி மாநகராட்சி, பசுமை மன்றம் மற்றும் ராஜா KSP சேரிட்டீஸ் சார்பில் சிவகாசி செங்குளம் கண்மாயில் சுற்றுசூழல் மறுசீரமைப்பு செய்யும் பணியினை சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் திரு.ஜி.அசோகன் முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் அவர்கள் துவக்கி வைத்தார். வீ.ப.ஜெயசீலன், I A S.,அவர்கள் துவக்கி வைத்தார்.
விருதுநகர் மாவட்டம், ஒண்டிப்புலி நாயக்கனூர் ஊராட்சி, முண்டலப்புரம் கிராமத்தில் (07.06.2024) நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.50இலட்சம் மதிப்பில் கட்டப்பட்ட சமுதாயக்கூடத்தை விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் அவர்கள் முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்., I A S., அவர்கள் திறந்து வைத்தார்.பொதுவாக ஒரு கிராமத்தில், ஒரு நகரத்தில், ஒரு ஊரில் அரசு நிகழ்ச்சி அல்லது தனியார் நிகழ்ச்சி நடக்கும். ஆனால் அரசும், ஊர் பொதுமக்களும் இணைந்து நடத்தக்கூடிய ஒரு நிகழ்ச்சியாக இது அமைந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த நிகழ்ச்சி எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்றால், இந்த கிராமத்தில் பொதுமக்கள் இணைந்து அரசியல் பங்களிப்போடு சுமார் ரூ.50 இலட்சம் செலவில், 2300 சதுர அடி அளவில் சுமார் 200 நபர்கள் அமர்ந்து திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கு இந்த சமுதாய நலக்கூடம் கட்டி இருக்கிறீர்கள்.இதை இந்த கிராமத்திற்கான ஒரு சொத்து என்பதை தாண்டி, இது போன்று அரசுடன் இணைந்து பொதுமக்கள் பங்களிப்புடன் செய்தால் இன்னும் பல்வேறு திட்டங்கள் மற்றும் நலத்திட்டங்கள் நமக்கு நாமே திட்டத்தின் மூலமாக கொண்டு வர இயலும். மேலும் மற்ற கிராமங்களுக்கும் பல்வேறு ஊராட்சிகளுக்கும் நீங்கள் முன்னுதாரணமாக இருப்பீர்கள் என்று சொன்னாலும் கூட அது மிகையாகாது. நிதித்துறை அமைச்சர் அவர்களும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் அவர்களும் இந்த திட்டத்தின் கீழ், மிகப்பெரிய ஒத்துழைப்பை நல்கி, தொடர்ச்சியாக நமது மாவட்டத்தில் 100 சமுதாயக்கூடங்கள் புதிதாக கட்டியும், ஏற்கனவே பல ஆண்டுகளுக்கு முன்பாக கட்டப்பட்டுள்ள சமுதாயக்கூடத்தை பழுது நீக்கியும், சரிசெய்தும் அதனை பொதுமக்கள் பயன்படுத்துவதற்கான ஒரு சூழ்நிலையை உருவாக்கி இருப்பதற்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.மேலும், ஒரு கிராமத்திற்கு சமுதாயக்கூடம் என்பது முக்கியமான ஒன்றாகும். ஒவ்வொரு கிராமங்களிலும் இந்த மாதிரி ஒரு சமுதாயக்கூடம் ஏற்படுத்துவது என்பது அந்த கிராமத்திற்கும், அங்குள்ள பொதுமக்களுக்கும், அனைத்து தரப்பு மக்களுக்கும் நிறைய நன்மைகளை நேரடியாகவும், மறைமுகவாகவும் செய்யக்கூடிய ஒரு அமைப்பாக உள்ளது.எனவே, இப்படிப்பட்ட கட்டிடங்களை அரசு பல்வேறு திட்டங்களின் மூலமாக செயல்படுத்தி வருகிறது. முழுமையாக அரசு திட்டங்களுடன் சேர்ந்து பொதுமக்களும் பங்களித்து செயல்படுத்துவதற்கு தான் நமக்கு நாமே திட்டம் அரசு வழங்கி இருக்கிறது. அதனை நன்கு பயன்படுத்தி சிறப்பாக செயல்பட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.இந்நிகழ்ச்சியில், திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) மரு.தண்டபாணி, விருதுநகர் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் திருமதி சுமதி ராஜசேகர், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் மிளகாய் வத்தல் மண்டபத்தில் (07.06.2024) கரிசல் இலக்கிய கழகம் சார்பில், சுற்றுச்சூழல் தின கருத்தரங்கு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்., I A S., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.கரிசல் இலக்கியத்தையும், கரிசல் பண்பாட்டையும் நாமும் நமது வருங்காலச் சந்ததிகளும் அறிந்து கொள்ளவும், கரிசல் இலக்கியங்கள் பற்றிய ஆர்வத்தை மாணவர்களிடையே ஏற்படுத்துவதும், கரிசல் இலக்கியப் படைப்புகளை மக்களிடையே கொண்டு போய்ச் சேர்ப்பதும், புதிய படைப்பாளர்களை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்திலும், மாணவர்கள், பொதுமக்கள், இளம் எழுத்தாளர்களை ஊக்குவிக்கவும், வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்தவும், கரிசல் இலக்கியத்தை பொதுமக்களிடையே கொண்டு செல்லும் வகையில் “கரிசல் இலக்கிய கழகம்” உருவாக்கப்பட்டு, பல்வேறு கருத்தரங்குகள் மற்றும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாக இன்று சுற்றுச்சூழல் தின கருத்தரங்க நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.கரிசல் மண்ணான நமது பகுதிகளில் நீர் நிலைகளை எவ்வாறு உருவாக்கி, பாதுகாத்தனர். நீரினை தேக்கி விவசாயத்திற்கும், குடிநீருக்கும் எவ்வாறு பயன்படுத்தினார்கள் என்ற குறிப்புகள் கரிசல் இலக்கியத்தில் இடம் பெற்றிருக்கின்றது. பண்டைய காலத்தில் நீர் நிலைகளை எவ்வாறு பாதுகாத்தனர் என்பது குறித்த பல்வேறு ஆய்வு அறிக்கைகள் தெளிவாக எடுத்துரைக்கிறது. நீர் அதிகமாக உள்ள பகுதிகளில் அதன் பெருமைகளை பேசுவதை விட, நீர் குறைவாக உள்ள பகுதிகளில் தான் நீரின் பெருமைகள் பற்றி உணர்ந்துள்ளனர்.நீர்நிலைகள் அனைத்து உயிரினங்களுக்கும் பயன்படும் வகையில் அதன் கட்டமைப்புகளை உருவாக்கியுள்ளார்கள். இவ்வாறு பண்டைய காலங்களில் மிகவும் பாதுகாப்பாக இருந்த நீர்நிலைகள் தற்போது மாசடைந்து வருகின்றது.நீர்நிலைகளில் பல்வேறு இடங்களில் குப்பைகள் கொட்டி வந்துள்ள நிலை மாறி, தற்போது நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வு அனைத்து பகுதிகளிலும் வசிக்கக்கூடிய மக்களுக்கு வந்திருக்கிறது. நமது மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளில் இயற்கை மற்றும் பல்லுயிர் சமநிலையை பாதுகாக்க கூடிய நிறைய பறவை இனங்கள் வாழ்ந்து வருகின்றன.நமது மாவட்டத்தில் இருக்கக்கூடிய மேற்கு தொடர்ச்சி மலையானது பல்லுயிர் சமநிலையை பாதுகாக்க கூடிய ஒரு மையமாக செயல்பட்டு வருகிறது. மலைகளில் உற்பத்தியாக கூடிய நீரினை முறையாக மேலாண்மை செய்தால், நமது மாவட்டத்தினுடைய அனைத்து பகுதிகளுக்கும் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யலாம். இந்த இயற்கை வளங்களை பாதுகாப்பதற்கும், நீர்நிலைகளை பேணி பாதுகாப்பதற்கும், உரிய சிந்தனையை அடுத்த தலைமுறைக்கு கடத்துகின்ற வேலையை இந்த கரிசல் இலக்கிய கழகமானது தொடர்ந்து செய்யும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.பின்னர், எழுத்தாளர் பாமயன் அவர்கள் சுற்றுச்சூழலும், கரிசல் இலக்கியமும் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.தொடர்ந்து, எழுத்தாளர் பாமா, கரிசல் இலக்கிய கழக பொருளாளர் திரு.பெருமாள் சாமி ஆகியோர் சுற்றுச்சூழல் மற்றும் கரிசல் இலக்கியம் குறித்து வாழ்த்துரை வழங்கினார்கள்.முன்னதாக சுற்றுச் சூழல் குறித்த ஓவிய கண்காட்சியினை கரிசல் இலக்கிய கழக செயற்குழு உறுப்பினர் திரு.ரவீந்திரன் அவர்கள் தொடங்கி வைத்தார்.மேலும், பாரம்பரிய கலைகளான சிலம்பாட்டம், தேவராட்டம், வாள் சண்டை, யோகா உள்ளிட்ட மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.இந்நிகழ்ச்சியில் கரிசல் இலக்கிய செயலாளர் மரு.த.அறம் அவர்கள் வரவேற்புரையும், கரிசல் இலக்கிய கழக செயற்குழு உறுப்பினர் எழுத்தாளர் காமராஜ் அவர்கள் நன்றியுரையும் வழங்கினார்கள்.இந்நிகழ்ச்சியில் அரசு அலுவலர்கள், பொதுமக்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி மாநகராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்., I A S., அவர்கள் (06.06.2024) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அதன்படி, சிவகாசி மாநகராட்சி, பெரியார் காலனியில் காலனியில் 15-வது நிதிக்குழு மானியத்தின் தேசிய நகர்ப்புற சுகாதார பணியின் கீழ் ரூ.30 இலட்சம் மதிப்பில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையம் கட்டப்பட்டு வருவதையும்,கவிதா நகரில் அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் ரூ.43 இலட்சம் மதிப்பில் குழந்தைகளுக்கான பூங்கா மற்றும் விளையாட்டுக்களம் அமைக்கப்பட்டு வருவதையும்,விருதுநகர் - திருத்தங்கல் சாலையில்; செயல்பட்டு வரும் நுண் உர செயலாக்க மையத்தில், சேரிக்கப்படும் குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு, மக்கும் குப்பைகள் அனைத்தும் அதற்கான இயந்திரத்தில் அரவை செய்யப்பட்டு, தொட்டியில் காய வைத்து உரமாக மாற்றப்படும் பணிகள், ரப்பர், நெகிலி, மரக்கட்டை உள்ளிட்ட திடக்கழிவுகளை மறுசுழற்சி செய்யும் பணிகளையும்,சிறப்பு நிதியின் கீழ் ரூ.10 கோடி மதிப்பில் சிவகாசி மாநகராட்சி புதிய அலுவலகம் கட்டப்பட்டு வருவதையும், அண்ணாமலை நாடார் உண்ணாமலை அம்மாள் மேல்நிலைப்பள்ளியில் ரூ. 56 இலட்சம் மதிப்பில் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டு வருவதையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, பணிகளின் தரம் குறித்து ஆய்வு செய்தார்.மேலும், நடைபெற்று வரும் பணிகளை விரைவாகவும், தரமானதாகவும் குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்மந்தப்பட்ட அரசு அலுவலர்களை அறிவுறுத்தினார்.இந்த ஆய்வின் போது, சிவகாசி மாநகராட்சி ஆணையாளர் திரு.கிருஷ்ணமூர்த்தி, பொறியாளர், உதவி பொறியாளர்கள், வட்டாட்சியர், மாநகராட்சி பணியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் உடன் இருந்தனர்.