7 தொகுதிகளில் 9,604 தேர்தல் அலுவலர்களுக்கான இரண்டாம் கட்டப் பயிற்சி வகுப்புகள்.
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல்-2026-ஐ முன்னிட்டு, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளில் தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள 9,604 அலுவலர்களுக்கான இரண்டாம் கட்டப் பயிற்சி வகுப்புகள் (15.04.2026) பல்வேறு மையங்களில் நடைபெற்றன.
காரியாபட்டி சேது பொறியியல் கல்லூரி மற்றும் அருப்புக்கோட்டை தேவாங்கர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகிய மையங்களில் நடைபெற்ற பயிற்சி வகுப்புகளை, அருப்புக்கோட்டை தொகுதி பொதுப்பார்வையாளர் திரு. ரஞ்சித் குமார் லால், இ.ஆ.ப., மற்றும் திருச்சுழி தொகுதி பொதுப்பார்வையாளர் திரு. சஞ்சீவ் ஸ்ரீவாஸ்தவா, I A S., ஆகியோர் முன்னிலையில், மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மரு. என்.ஓ. சுகபுத்ரா, I A S,. அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் மற்றும் வாக்குச்சாவடி அலுவலர்கள் (நிலை 1, 2, 3) ஆகியோருக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கையாளுதல் மற்றும் வாக்குப்பதிவு நடைமுறைகள் குறித்து அந்தந்தத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் மண்டல அலுவலர்கள் விரிவான பயிற்சி அளித்தனர்.
தொகுதிவாரியாகப் பங்கேற்ற அலுவலர்களின் விவரம்:
202-இராஜபாளையம்:-பி.ஏ.சின்னையா ராஜா நினைவு மேல்நிலைப்பள்ளி - 1,292 அலுவலர்கள்.
203-திருவில்லிபுத்தூர்: கலசலிங்கம் பல்கலைக்கழகம் - 1,480 அலுவலர்கள்.
204-சாத்தூர்: எஸ்.ஆர்.என்.எம் கல்லூரி - 1,396 அலுவலர்கள்.
205-சிவகாசி: எஸ்.எச்.என்.வி. மேல்நிலைப் பள்ளி - 1,392 அலுவலர்கள்.
206-விருதுநகர்: கே.வி.எஸ். ஆண்கள் மேல்நிலைப்பள்ளி - 1,348 அலுவலர்கள்.
207-அருப்புக்கோட்டை: தேவாங்கர் கலைக்கல்லூரி - 1,296 அலுவலர்கள்.
208-திருச்சுழி: சேது தொழில் நுட்ப பயிலகம் - 1,400 அலுவலர்கள்.
ஒட்டுமொத்தமாக மாவட்டத்தில் மொத்தம் 9,604அலுவலர்கள் இந்தப் பயிற்சியில் பங்கேற்றனர்.
பயிற்சி வகுப்புகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசுகையில், "ஜனநாயகக் கடமையான தேர்தல் பணியில் எவ்விதத் தொய்வுமின்றி செயல்பட இந்தப் பயிற்சி மிக அவசியமானது. நுணுக்கமாக வாக்குப்பதிவு இயந்திரங்களின் செயல்பாடுகளை இப்போதே முழுமையாகக் கற்றுக்கொள்ள வேண்டும். தேர்தல் நாளன்று எவ்விதப் பதற்றமுமின்றி அலுவலர்கள் நேர்த்தியாகச் செயல்பட வேண்டும்" என அறிவுறுத்தினார்.இந்த ஆய்வின் போது அந்தந்தத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
0
Leave a Reply