மல்லி வள நாட்டுக் கலை இலக்கியப் பெருவிழா போட்டியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் துவக்கி வைத்து உரையாற்றினார்.
விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் ஸ்ரீ சுந்தரேஸ்வரி கல்வியில் கல்லூரியில் மல்லி வள நாட்டுக் கலை இலக்கியப் பெருவிழா போட்டியினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S,அவர்கள் (21.03.2025) துவக்கி வைத்து உரையாற்றினார்.
நீங்கள் அனைவரும் ஒரு பத்து வருடம் கழித்து அதாவது 2035- ல் இந்த திறமை இருக்கிறவர்கள் அந்த திறமையை அவர்களே மறந்து விடுவார்கள். நிறைய திறமைசாலிகள் திறமையை மறந்து விட்டு வேற வேற பணியில் இருப்பார்கள். ஏனென்றால், அவர்கள் வாழ்க்கையில் அடுத்தடுத்த கட்டத்தில்; நகர்ந்து செல்லும் பொழுது இது செய்வதற்குரிய சூழல்கள் அமையாது. இன்றைக்கு முதல் பரிசு வாங்க கூடியவர்கள் தான் எப்போதும் முதல் பரிசு வாங்குவார்கள் என்று பார்த்தால் நிச்சயமாக இல்லை. இன்றைக்கு சாதாரணமாக இருக்கிறார்கள் நாளைக்கு திறமையானவர்களாக மாற முடியும். பாரதியாரின் புகழ்மிக்க கவிதை இரண்டாவது பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டிருந்தது. பாரதியார் மறைந்து 100 வருடங்களுக்கும் மேலாகவும் பாரதியாரை புகழ்ந்து பேசுகிறோம். பாரதியருடைய கவிதைகள் இன்றைக்கும் மனிதர்களுக்கு ஒளி விளக்காக இருக்கின்றது.
ஆனால் முதல் பரிசு பெற்ற கவிதை யார் எழுதியது, என்ன கவிதை என்று கூட யாருக்கும் தெரியாது. அது ஆய்வாளர்களுக்கு கூட தெரியாது. இதிலிருந்து நாம் கற்றுக் கொள்வது பாடங்கள் என்னவென்றால், மனிதர்கள் ஒவ்வொருவருக்குமே ஒரு திறமை இருக்கிறது. இந்த பூமியில் பிறந்த ஒவ்வொரு உயிரினத்திற்கும் ஒரு திறமை இருக்கிறது. ஒவ்வொரு உயிர், ஒவ்வொரு இனம் எதுவாக இருந்தாலும் பறவை இனமாக இருந்தாலும், விலங்கினமாக இருந்தாலும், மனித இனமாக இருந்தாலும், ஒவ்வொரு உயிருக்கும் தனிப்பட்ட ஒரு பண்பும், திறனும் இருக்கிறது. அது மற்றவர்களுக்கு ஒருபோதும் இருக்காது. ஒளவையாரின் தனிப்பாடலில் கூறும் பொழுது, தூக்காணாங்குருவி, அரக்கு பூச்சி இவையெல்லாம் உருவாக்கக்கூடிய பொருட்களை மனிதர்களால் ஒருபோதும் செய்ய இயலாது.அதனால் நாம் மிகப் பெரிய திறமையானவர்கள், திறமை இல்லை என்று இரண்டையும் இணைத்து ஒருவர் பெரிதாக யோசிக்கவே கூடாது.
வான் குருவியின் கூடு வல்லரக்குத் தொல்கறையான்
தேன்சிலம்பி யாவருக்கும் செய்யரிதால் – யாம் பெரிதும்
வல்லோமே என்று வலிமை சொல் வேண்டாங்காண்
எல்லார்க்கும் ஒவ்வான்று எளிது.
அதனால் ஒவ்வொருவருக்கும் ஏதேனும் ஒரு திறமை அதிகமாக இருக்கிறது. இந்த திறமையினால் என்ன நடக்கும் என்றால், திறமை என்று ஒருவருக்கு இயல்பாக, தான் இருக்கும் என்பது இல்லை என்று தான் புள்ளி விவரங்களும் வெற்றியாளர்களின் உடைய வாழ்க்கையும் குறிப்பிடுகிறது.
2024 -ஆம் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில், ஈட்டி எறிதிலில் தங்கப்பதக்கத்தை வென்ற நீரஜ் சோப்ரா என்ற விளையாட்டு வீரர் அவர் மிகப்பெரிய திறமைசாலி. உலக அளவில் பல்வேறு நாடுகளில் முதலிடத்தை வென்றவர். இயல்பாகவே மிகுந்த திறமைசாலி. ஆனால் 10 ஆண்டுகளுக்கு முன்பாக அவர் ஈட்டி எறிதலில் சாதாரணமாக தான் விளையாடினார். இந்த மாற்றம் எங்கிருந்து வந்தது என்று பார்த்தால் இயல்பாக வந்து வந்துவிட்டதா என்றால் இல்லை. மற்றவர்கள் செய்யாததை அவர் செய்திருக்கிறார் . அதாவது பத்து ஆண்டு காலம் இதற்காக உழைத்திருக்கிறார்.எனவே திறமை என்று இயல்பாக ஒருவருக்கு ஒருபோதும் வருவதில்லை எந்த ஒன்றின் மீது ஆர்வத்தை ஏற்படுத்தி, அதன் மீது தொடர்ச்சியாக உழைப்பையும், கவனத்தையும், நேரத்தையும், செலவழிக்கின்றோமோ அதில் நமக்கு தேவையான ஆற்றல் வருகிறது. அந்த ஆற்றல் தான் திறமை என்று கூறப்படுகிறது. இது போன்ற நிகழ்ச்சிகளை நோக்கமும் இது தான்.
எனவே, ஒரு தொடர்ச்சியாக செயல்பாடுகள், தொடர்ச்சியாக உழைப்பின் மூலமாகத்தான் வெற்றி வருகின்றது தவிர, ஒருபோதும் சுலபமாக வருவதில்லை. யூ-டியூப், இன்ஸ்டாகிராம் மூலம் இளைஞர்கள் மன மகிழ்ச்சி அடைகிறார்கள். அதில் அவர்களின் கவனமும் சிதறுகிறது. ஆனால், எந்த ஒன்று நம் கவனத்தை சிதறடைக்கிறது என்பதை நாம் கட்டுப்படுத்த முடியும்.
நாம் ஒரு வீடியோ பார்க்கும் போது எந்த அளவு மனமகிழ்ச்சி அடைகிறோமோ, நாம் ஒரு வீடியோவை பார்க்கின்ற பொழுது எந்த ஒரு மன மகிழ்ச்சி அடைகின்றோமோ இந்த அழகான கவிதையோ ஒரு சின்ன வீடியோ நமக்கு நிச்சயமாக கொடுக்கிறது.
நான் ஒரு நிகழ்வை பார்க்கும் பொழுது மிகவும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று உடலில் ஏற்படுகின்ற மாற்றம் டொபோமைன் மூளையில் ஒரு ஹார்மோன்கள் சுரக்கும் அந்த ஹார்மோன்களால் மனதுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தும்.
நமக்கு தேவையான மகிழ்ச்சியை, நமக்கு தேவையான சந்தோஷத்தை இது போன்ற கலை இலக்கியங்கள் தான் உறுதி செய்கின்றனர். இன்றைக்கு இளைஞர்களுக்கு குறிப்பாக கல்லூரி மாணவர்களிடம் போதைப்பொருட்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். ஒரு போதை பொருள் தரக்கூடிய இன்பத்தை அல்லது தற்காலிக மகிழ்ச்சியை இதுபோன்ற கலை இலக்கியங்கள் முழுவதுமாக தருகின்றன.
அக்காலை பொழுதினிலே முக்காலை ஊன்றி மூவிரண்டு
போகையிலே ஐந்து தலை நாகமொன்று ஆழ்ந்து கடித்ததுவே”.. என்று
வைத்தியரிடம் புலவர் கூறினார்.
அதற்கு அந்த காலை பொழுதில் கைத்தடி ஊன்றிக்கொண்டு ஆற்றுக்கு நான் செல்லும்போது ஐந்து முட்களைக் கொண்ட நெருஞ்சி முள் ஒன்று குத்தி விட்டது. என்றும் அதற்கு வைத்தியர்”பத்துரதன் புத்திரனின் மித்திரனின் சத்துருவின் பத்தினியின் கால் வாங்கி தேய்!” ..புலவர் தன் காலை தரையில் தேய்த்தார் முள் உதிர்ந்து விழுந்தது. என்பது தான் மருந்து என்று கூறினார்.
இதை தான் இலக்கியம் என்று கூறுகிறார்கள். எப்பொழுதுமே நண்பரைப் போல், ஒரு வழிகாட்டி போல், நல்ல ஆசிரியரைப் போல் நாம் எந்த ஒன்றையும் நிரந்தரமாக நம்ப முடியாது. அதனால் எப்பொழுதும் நம்புவதுக்குரிய ஒரு நண்பனாய், நம்புவதற்குரிய ஒரு ஆசிரியராய், நம்புவதற்குரிய வழிகாட்டியாய் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது நம் வாசிக்கும் அல்லது நாம் பெரும் அனுபவங்கள் தான். வாழ்க்கைக்கான பாடங்களை எப்பொழுது கற்றுக் கொள்கிறார்கள் என்றால், அவர்கள் தொடர்ச்சியான வாசிப்பின் மூலமாகவும், தொடர்ச்சியான கேள்விச் செல்வம் மூலமாகவும் தான் பெற்றுக் கொள்கிறார்கள். எப்பொழுதும் யாராலும் கூற முடியாத அறிவுரையை இலக்கியங்கள் மட்டும் தான் கூறுகிறது.
இதுபோன்று இலக்கியங்களை வாசிக்கும் பொழுது தான் நமது மனதுக்கு தேவையான மகிழ்ச்சி கிடைக்கிறது. மேலும், இது கலை இலக்கியங்களை அடுத்த பத்தாண்டுகள் கழித்து பார்த்தால் இன்றைய உங்களுடைய நிலைமை தொடர் செயல்பாடுகள் மூலமாக இன்னும் பல மடங்கு பெருக வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர்அவர்கள் தெரிவித்தார்.பின்னர், மல்லி வள நாட்டுக் கலை இலக்கியப் பெருவிழா போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டுச்சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.இந்நிகழ்ச்சியில், திருவில்லிபுத்தூர் ஸ்ரீ சுந்தரேஸ்வரி கல்வியில் கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply