சேத்தூர் பேரூராட்சியில் தலைமை நீரேற்று நிலையங்களுக்கு 24 மணி நேர மும்முனை வழங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள மின் இணைப்பினை அமைச்சர் அவர்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.
விருதுநகர் மாவட்டம், சேத்தூர் தேர்வுநிலை பேரூராட்சிக்குட்பட்ட துணை மின் நிலையத்தில் (01.09.2025) தமிழ்நாடு மின் உற்பத்தி கழகம் 2023-2024 ஆம் ஆண்டு இயக்கம் மற்றும் பராமரிப்பு நிதித் திட்டத்தின் கீழ் ரூ.2.99 கோடி மதிப்பீட்டில் சேத்தூர் பேரூராட்சிக்கு தலைமை நீரேற்று நிலையங்களுக்கு 24 மணி நேர மும்முனை மின் இணைப்பினை தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் திருமதி ராணி ஸ்ரீகுமார் அவர்கள், இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.தங்கப்பாண்டியன் அவர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.ராஜேந்திரன் அவர்கள் மற்றும் சீர்மரபினர் நல வாரியத்துணை தலைவர் திரு.இராசா அருண்மொழி ஆகியோர் முன்னிலையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.
சேத்தூர் தேர்வுநிலை பேரூராட்சியில் 18 வார்டுகள், 179 தெருக்கள் உள்ளது. இப்பேரூராட்சியில் மொத்தம் சுமார் 22,036 மக்கள் தொகை உள்ளது.சேத்தூர் பேரூராட்சி குடிநீர் ஆதாரங்களான வாழவந்தான் கண்மாய் அருகில் இரண்டு திறந்த வெளிக்கிணறு மற்றும் 12 போர்வெல்கள் அமைந்துள்ளது. பிராக்குடி ஆற்றுப்பாதையில் இரண்டு திறந்த வெளிக்கிணறு, அய்யனார்கோவில் பாதையில் உள்ள சேகரிப்புக்கிணறு ஆகியவற்றில் 12 போர்வெல்கள் அமைந்துள்ளது.மேற்படி குடிநீர் ஆதாரங்களில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டிகளுக்கான 25 மின் இணைப்புகளுக்கு தற்பொழுது 110/11 கே.வி சேத்தூர் துணை மின் நிலையத்திலிருந்து வெளிச்செல்லும் 11 கே.வி சேத்தூர் ஊரக மின் பாதை மற்றும் 11 கே.வி தேவதானம் ஊரக மின்பாதை ஆகியவற்றில் இருந்து மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.
மிகுந்த வறட்சி காலங்களில் தண்ணீர் தேவை அதிகமாக இருப்பதால், தினசரி 12 முதல் 14 மணி நேரம் மட்டுமே மும்முனை மின்சாரம் கிடைப்பதாலும், இதர நேரங்களில் இருமுனை மின்சாரம் மட்டுமே கிடைப்பதாலும் போதிய நீராதாரங்கள் இருந்த போதிலும், சீரான குடிநீர் விநியோகம் செய்ய இயலாத நிலை இருந்ததால் “உங்கள் தொகுதியில் முதலமைச்சர்“ திட்டத்தின் கீழ் 110/11 கே.வி சேத்தூர் துணை மின் நிலையத்திலிருந்து தனி மின்பாதை அமைத்து 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கும் வகையில் மதிப்பீடு அனுமதி பெறப்பட்டு, சேத்தூர் பேரூராட்சி மூலம் ரூ.2.99 கோடி மதிப்பீட்டுத் தொகை செலுத்தப்பட்டு, சேத்தூர் பகுதியில் 229 மின்கம்பங்கள், 30 கி.மீ மின்பாதை மற்றும் 13 மின்மாற்றிகள் அமைத்து தனி மின்பாதை ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேற்படி மின்பாதைக்காக சேத்தூர் துணை மின் நிலையத்தில் 11 கே.வி வாட்டர் ஒர்க்ஸ் என்ற பெயரில் புதிய மின்னூட்டி நிறுவப்பட்டு, மின்பாதை அதில் இணைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் சேத்தூர் பேரூராட்சிகளின் குடிநீர் ஆதாரங்களான 23 மேல்நிலை குடிநீர் தொட்டிகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் கிடக்கப்பெற்று சுமார் 22,036 பயனாளிகள் குடிநீர் பெற்று பயனடைவார்கள் என வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் மேற்பார்வை பொறியாளர்(தமிழ்நாடு மின் உற்பத்தி கழகம்) திருமதி ப.லதா, சேத்தூர் பேரூராட்சி தலைவர் திரு.பாலசுப்பிரமணியன், முன்னாள் தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் திரு.தனுஷ் எம்.குமார், சேத்தூர் செயல் அலுவலர், சேத்தூர் பேரூராட்சி துணைத்தலைவர் திருமதி காளீஸ்வரி உட்பட அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply