முடிவுற்ற மக்களவைத் தேர்தல் 2024 தொடர்பாக மக்களின் அறிவு, அணுகுமுறை, பழக்கவழக்கங்கள் குறித்த அடிப்படை ஆய்வு பொதுமக்களிடம் செப்டம்பர் மாதத்தில் மேற்கொள்ளப்பட உள்ளது
முடிவுற்ற மக்களவைத் தேர்தல் 2024 தொடர்பாக மக்களின் அறிவு, அணுகுமுறை, பழக்கவழக்கங்கள் குறித்த அடிப்படை ஆய்வு (Knowledge, Attitude and Practices -Endline Survey) விருதுநகர் மாவட்டத்தில் திருச்சுழி, இராஜபாளையம் மற்றும் சாத்தூர் ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் உள்ள வாக்காளர்களிடையே செப்டம்பர்-2024 மாதத்தில் மேற்கொள்ளப்படவுள்ளது.
தேர்தல் பற்றிய மக்களின் அறிவு நிலை, நம்பிக்கை, வாக்காளர் பதிவு மற்றும் வாக்காளர் பதிவு செய்யாமைக்கான காரணம், வாக்களர்களிடையே கல்வியின் தாக்கம், புலம் பெயர்வு காரணமாக பதிவு செய்யப்படாத வாக்காளர்களின் எண்ணிக்கை, அஞ்சல் வாக்குகள் பற்றிய விழிப்புணர்வு குறித்த விவரங்கள் சேகரிப்பது இவ்வாய்வின் நோக்கமாகும். வாக்காளர்களின் தேர்தல் தொடர்பான விழிப்புணர்வு, தேர்தல் பங்கேற்பில் முதல் முயற்சிகளை முன்னெடுத்து செல்வது, வலுப்படுத்துவது மற்றும் பல்வேறு தேர்தல் பதிவு இடைவெளிகளைக் குறைப்பதற்காக திட்டமிடுவதற்காக இக்கணக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.
ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும், ஐந்து வாக்குச் சாவடிகளில் பத்து வாக்காளர்களிடம் இவ்விவரங்கள் சேகரிக்கப்பட உள்ளது. இளவயது வாக்காளர்கள், பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலின வாக்காளர்கள், மாற்றுத் திறனாளிகள், முதன்முறை வாக்காளர்கள் மற்றும் வயது முதிர்ந்த வாக்காளர்கள் ஆகியோரிடம் முன்னுரிமை அடிப்படையில், பொருள்இயல் மற்றும் புள்ளிஇயல் துறை அலுவலர்களால் விவரங்கள் சேகரிக்கப்பட உள்ளது. இக்கணக்கெடுப்பில் வாக்காளர் பதிவு, வாக்காளர்களிடையே தேர்தல் குறித்த அறிவு, அணுகுமுறை, நடத்தை, நம்பிக்கை மற்றும் நடைமுறைகள், வாக்காளர்களின் விழிப்புணர்வு, வாக்காளர்களின் கல்வி, தொழில், சமூகம், தேர்தல் ஆணையத்தால் மாற்றுத்திறனாளிக்காக உருவாக்கப்பட்ட சாக்ஷம் ஆப் (Saksham app) பற்றி அறிவு, தூண்டுதல்கள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட உள்ளது.
எனவே, உண்மையான புள்ளி விவரங்கள் அளித்து ஒத்துழைப்பு நல்குமாறும் மக்களால் கொடுக்கப்படும் புள்ளி விவரங்கள் மிகவும் இரகசியமாக பாதுகாக்கப்படும் என்றும், மேற்படி விவரங்களின் அடிப்படையில் தேர்தல் நடைமுறைகள் குறித்த கொள்கை முடிவுகளையும், திட்டங்களையும் மேற்கொள்ளப்பட உள்ளதால் (Data based decision making) பொது மக்கள், களப்பணி மேற்கொள்ளும் பொருள் இயல் மற்றும் புள்ளி இயல் துறை அலுவலர்களுக்கு உரிய ஒத்துழைப்பு நல்குமாறு மாவட்ட நிர்வாக சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply