தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் சிறப்புக்குழு உறுப்பினரும், திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் அவர்கள், சிறுபான்மையினர் நலன் திட்டங்கள் குறித்து அனைத்து அரசுத்துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் (23.10.2025) மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.ராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் சிறப்புக்குழு ஆய்வுக்கூட்டத்தில், திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் முனைவர் த.இனிகோ இருதயராஜ் அவர்கள் சிறுபான்மையினர் நலன் திட்டங்கள் குறித்து தொடர்புடைய அரசுத்துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.இக்கூட்டத்தில் மாவட்ட முஸ்லீம் உதவும் சங்கம் மூலம் 200 பயனாளிகளுக்கு ரூ.22.54 இலட்சம் மதிப்பிலும், மாவட்ட கிருஸ்துவ உதவும் சங்கம் மூலம் 10 பயனாளிகளுக்கு ரூ.22.54 இலட்சம் மதிப்பிலும் என மொத்தம் 210 பயனாளிகளுக்கு ரூ.24.54 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழக மக்கள் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக சிறுபான்மையின மக்களை பாதுகாக்கவும் அவர்களது வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் அவர்களுக்கான கல்வி, பொருளாதாரம் மற்றும் சமூக மேம்பாட்டை நோக்கமாக கொண்ட பல்வேறு அரசு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள்.
மேலும், சிறுபான்மையினர் நலத் திட்டங்களை மாவட்ட அளவில் ஆய்வு செய்து பணிகளை துரிதப்படுத்தும் வகையில், கடந்த செப்டம்பர் மாதம் தமிழ்நாடு முதலமைச்சர்அவர்கள்சிறுபான்மையினர்நலன்சிறப்புக்குழுவினைஅமைத்துஅரசாணையினைவெளியிட்டார்கள்.அதனடிப்படையில், (முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினர், சமணர்கள், பார்சிகள் ஆகிய) சிறுபான்மையின மக்களின் சமூக, பொருளாதார கல்வி நிலையை மேம்படுத்த தமிழக அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு நலத்திட்டங்களை சிறப்புக் குழு மாவட்ட அளவில் ஆய்வு மேற்கொண்டு அவற்றை விரைவுபடுத்துவதற்கான பணிகளை செய்து வருகிறது.சிறுபான்மையினருக்கு செயல்படுத்தும் நலத்திட்டங்கள் குறித்து இதுவரை 10 மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்டு, இன்று 11 ஆவது மாவட்டமாக விருதுநகர் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவின்படி, கிருஸ்துவ மற்றும் இஸ்லாமிய மக்களுக்கு பொது கல்லறைத் தோட்டம் மற்றும் கபர்ஸ்தான் அமைத்திட விருதுநகர் வட்டம் கோட்டைப்பட்டியில் நகராட்சிக்குப் பாத்தியப்பட்ட இடத்தில் தலா ஒரு ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேற்படி நிலம் கிருஸ்துவ/ இஸ்லாமிய பிரதிநிதிகளுடன் நேரில் சென்று பார்வையிடப்பட்டது.
மேலும், இக்கூட்டத்தில் விருதுநகர் மாவட்டத்தில் வசிக்கும் சிறுபான்மையின மக்களுக்கு கல்லறைத்தோட்டம்/கபர்ஸ்தான் அமைத்திட நிலம் கோரி வரும் மனுக்கள், தேவாலயம்/மசூதி கட்டிட தடையில்லாச் சான்றிதழ் கோரி வரும் மனுக்களுக்கு முன்னுரிமை அளித்து நடவடிக்கை எடுத்திட வருவாய்த்துறை மற்றும் காவல் துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.மேலும், இக்கூட்டத்தில் முஸ்ஸிம் மற்றும் கிறிஸ்துவ மகளிர் உதவும் சங்கங்களின் செயல்பாடுகள், உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நலவாரியத்தின் செயல்பாடுகள் மற்றும் வழங்கப்பட்ட நலத்திட்ட உதவிகள், உலமா பணியாளர்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம் வழங்கும் மானியத்திட்டத்தின் செயல்பாடுகள், கிறிஸ்துவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியர்கள் மற்றும் பணியாளர்கள் நலவாரியத்தின் செயல்பாடுகள், கிறித்துவ தேவாலயங்கள் பழுது பார்த்தல் மற்றும் புனரமைத்தல் பணிகள், கிறித்தவர்/முஸ்லிம்களின் பயன்பாட்டிற்காக கல்லறைத்தோட்டம்/கபர்ஸ்தான் அமைத்தல், சிறுபான்மையின மாணவிகளுக்கான கிராமப்புற பெண்கல்வி ஊக்கத்தொகை வழங்கும் திட்டம், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம்(TAMCO) மூலம் வழங்கப்பட்ட கடனுதவிகள், சிறுபான்மையினருக்கு மின் மோட்டாருடன் கூடிய விலையில்லா தையல் இயந்திரம் வழங்கும் திட்டம், பிரதான் மந்திரி ஜன்விகாஸ் கார்யகிராம் திட்டம்(PMJVK) உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மேலும், சிறுபான்மையினர் மக்களின் கோரிக்கைகள் மற்றும் கடனுதவி பெறுவதற்கான வழிகாட்டுதல்கள் குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. சிறுபான்மையின இன மக்களுக்கு அனைத்து அரசு திட்டங்கள் சார்ந்த உதவிகளை பெற தொடர்புடைய அரசுத்துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து பணியாற்றிட வேண்டும் என தெரிவித்தார்.இக்கூட்டத்தில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் திரு.த.ஜான்சன் தேவசகாயம், வருவாய் கோட்டாட்சியர்கள் திரு.கனகராஜ்(சாத்தூர்), திரு.மாரிமுத்து(அருப்புக்கோட்டை), கிருஸ்துவ/முஸ்லீம் அமைப்பைச் சார்ந்த நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள், மாவட்ட முஸ்லீம் மற்றும் கிருஸ்துவ சங்கங்களின் செயலாளர்கள் மற்றும் உறுப்பினர்கள், மாவட்ட சிறுபான்மையினர் பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு துறை சார்ந்த அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply