அரசு/அரசு உதவி பெறும் பள்ளிகளில் இளம் பசுமை ஆர்வலர்களை உருவாக்கும் திட்டம்
விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் ராம்கோ பொறியியல் கல்லூரியில் (25.07.2024) மாவட்ட நிர்வாகம், ROAR மற்றும் ATREE தன்னார்வ அமைப்புகள் இணைந்து மாவட்டத்தில் உள்ள அரசு/அரசு உதவி பெறும் பள்ளிகளில் இளம் பசுமை ஆர்வலர்களை உருவாக்கும் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு பயிற்சி வழங்கும் வகையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்களுக்கான 4 நாட்கள் நடைபெறும் உண்டு, உறைவிட திறன் மேம்பாட்டுப் பயிற்சி வகுப்பில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் கலந்து கொண்டு இயற்கையையும், சுற்றுச்சுழலையும் பாதுகாப்பதன் அவசியம் குறித்து உரையாற்றினார்
உலகம் முழுவதும் மக்கள் தொகை பெருக்கம், தொழில்நுட்ப வளர்ச்சிகள், பருவநிலை, தட்பவெப்பநிலை முரண்பாடுகள், உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் இயற்கை மாசுபாடு அடைந்து சுற்றுசூழல் வெகுவாக பாதிக்கப்பட்டு வருகிறது. இதற்காக இந்தியாவிலும், தமிழ்நாட்டிலும் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.பொதுமக்களுக்கு சுற்றுசூழல் பாதிப்பால் ஏற்படும் விளைவுகளை வலியுறுத்தும் வகையிலும், இதைப் பற்றிய ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், அரசும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் பொதுமக்களுக்கும், அடுத்த தலைமுறையினரான மாணவர்களுக்கும் பல்வேறு நிகழ்ச்சிகள் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
அதனடிப்படையில், நமது விருதுநகர் மாவட்டத்தில் மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் என அனைவருக்கும் காடு சூழல், பறவைகள் மற்றும் பூச்சியினங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி சூற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கத்திலும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், மாவட்ட நிர்வாகமும், ROAR மற்றும் ATREE ஆகிய தன்னார்வ அமைப்புகளுடன் இணைந்து காடுகளைப் பற்றியும், வன உயிரினங்களை பற்றியும் அது சூழலுக்கும், மனித வாழ்வியலுக்கும் ஆற்றும் பங்குகளையும் எடுத்துரைத்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது.மாவட்ட நிர்வாகத்தின் மூலம் இளம் பசுமை ஆர்வலர்களை உருவாக்கும் புதிய திட்டம் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.அதன்படி, இராஜபாளையம் ராம்கோ பொறியியல் கல்லூரியில், தேர்ந்தெடுக்கப்பட்ட 40 ஆசிரியர்களுக்கு இயற்கை விழிப்புணர்வு, மரம் வளர்த்தல், நீர்வளம் காத்தல் சார்ந்த பயிற்சி வகுப்பு 24.07.2024 முதல் 27.07.2024 வரை நடைபெறுகிறது.இன்று சுற்றுச்சூழல் பாதிப்பு என்பது மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது. நெகிழி ஒழிப்பு என்பது மிக முக்கியம். அதனை சரிசெய்வதற்காக தமிழ்நாடு அரசு மீண்டும் மஞ்சப்பை இயக்கம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.
சுற்றுசூழல் முக்கியத்துவத்தை பற்றி நம் அனைவரிடமும் தெரிய படுத்த வேண்டும். அது ஒரு மக்கள் இயக்கமாக மாற வேண்டும். மேலும், 20 ஆண்டுகளுக்கு முன்பாக ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கையை விட தற்போது ஆஸ்துமா நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதற்கு முக்கிய காரணம் சுற்றுச்சூழல் மாசுபாடு ஆகும்.நெகிழி பயன்பாட்டை தவிர்ப்பது குறித்தும், திடக்கழிவுகளை மறுசுழற்சி செய்தல், தினசரி பயன்பாடுகளில் இருந்து நெகிழியினை எவ்வாறு குறைப்பது உள்ளிட்டவை குறித்து ஆசிரியர்கள் பயிற்சி பெற்று, அது குறித்து மாணவர்களுக்கு பயிற்சி வழங்க வேண்டும்.விருதுநகர் மாவட்டத்தில் சுமார் ஒரு லட்சத்திற்கு அதிகமான மாணவர்கள் உள்ளனர். அவர்களுக்கு பல்வேறு கட்டங்களாக இது பற்றி பயிற்சி வழங்குவதன் மூலமும், சுற்றுச்சூழல் மாசுப்பாட்டினால் ஏற்படக்கூடிய விளைவுகளை ஆண்டுக்கு சுமார் பத்தாயிரம் மாணவர்களுக்கு எடுத்துக்கூறி சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்த முடியும்.
சுற்றுச்சூழலை பாதுகாக்க மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் என அனைவரும் இணைந்து மக்கள் இயக்கமாக செயல்பட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.இப்பயிற்சியில் முதல் கட்டமாக பல்லுயிர் பரவுதல் என்ற தலைப்பிலும், இரண்டாவது கட்டமாக சூழயியல் மாற்றம் என்ற தலைப்பிலும், இறுதியாக ஐந்திணைகள் பற்றி அறிவோம் என்ற தலைப்பில் களப்பயணம் நடைபெற உள்ளது.இந்த வகுப்பில் பயிற்சி பெறும் ஆசிரியர்கள் இளம் பசுமை ஆர்வலர்களை உருவாக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் உள்ள சுமார் ஒரு இலட்சம் பள்ளி மாணவர்களுக்கு இயற்கை மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாப்பதன் அவசியம் குறித்து பயிற்சிகள் வழங்க உள்ளனர்.இந்நிகழ்ச்சியில், ராம்கோ பொறியியல் மற்றும் இராஜூக்கள் கல்லூரி பேராசிரியர்கள், ROAR மற்றும் ATREE தன்னார்வ அமைப்பு பிரதிநிதிகள், இயற்கை ஆர்வலர்கள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply