பள்ளி மாணவ, மாணவியர்கள் பயணம் செய்யும் தனியார் பள்ளி வாகனங்களின் தரம் குறித்து ஆய்வு
விருதுநகர் ஆயுதப்படை மைதானத்தில் (09.05.2023) பள்ளி மாணவ, மாணவியர்கள் பயணம் செய்யும் தனியார் பள்ளி வாகனங்களின் தரம் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்., I A S,அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பள்ளிக் குழந்தைகளின் பாதுகாப்பு கருதி தமிழ்நாடு மோட்டார் வாகனங்கள் (கட்டுப்பாடு மற்றும் நடைமுறைப்படுத்துதல்) சிறப்பு விதிகள் 2012-ன் படி மாவட்ட நிர்வாகம், காவல்துறை, போக்குவரத்துத்துறை, பள்ளிக்கல்வித்துறை ஆகிய துறைகள் இணைந்து பள்ளி வாகனங்களை கூட்டாய்வு செய்து வருகிறார்கள்.
அதன்படி, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள விருதுநகர், சிவகாசி மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் மற்றும் இராஜபாளையம், அருப்புக் கோட்டை மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகங்கள் ஆகியவற்றின் கட்டுப்பாட்டில் பள்ளி வாகன அனுமதிச்சீட்டு பெற்றுள்ள அனைத்து பள்ளிகளின் வாகனங்களும் இன்று ஆய்வு செய்யப்பட்டது. அதனடிப்படையில், விருதுநகர் மாவட்டத்தில், (விருதுநகர்-46, ஸ்ரீவில்லிபுத்தூர்-28, சிவகாசி-29, அருப்புக்கோட்டை-30, இராஜபாளையம்-48) மொத்தம்-181 பள்ளிகளில், விருதுநகர்-244, ஸ்ரீவில்லிபுத்தூர்-83, சிவகாசி-132, அருப்புக்கோட்டை-154, இராஜபாளையம்-166 என மொத்தம் 779 பள்ளி வாகனங்களுக்கு அனுமதிச்சீட்டு வழங்கப்பட்டுள்ளது. அவற்றில் 779 பள்ளி வாகனங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. அதில் 654 பள்ளி வாகனங்கள் முழுத்தகுதி உடையவையாக உள்ளன. 62 பள்ளி வாகனங்கள் முழுத்தகுதி இல்லாத காரணத்தினால் தகுதியற்றவையாக நிராகரிக்கப்பட்டுள்ளது. நிராகரிக்கப்பட்ட வாகனங்கள் குறைகளை நிவர்த்தி செய்து மீண்டும் ஆய்வுக்கு கொண்டுவர அறிவுறுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள வாகனங்கள் தகுதி பெறும் பொருட்டு பள்ளி நிர்வாகத்தால் வாகன பணிமனைகளில் நிறுத்தப்பட்டு பழுதுநீக்கம் செய்யப்பட்டு வருகின்றன.
இந்த ஆய்வில், தீயணைப்புக் கருவிகள் பொருத்தப்பட்டு முறையாக பராமரிக்கப்படுகிறதா, உரிய மருத்துவ உபகரணங்களுடன் கூடிய முதலுதவிப்பெட்டி பொருத்தப் பட்டுள்ளதா,அவசரகால வழிகள் அமைக்கப்பட்டுள்ளதா, வேகக் கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட்டுள்ளதா, உரிய நடத்துநர் உரிமம் பெற்ற உதவியாளர் மாணவ, மாணவியர்கள் உரிய முறையில் வாகனத்தில் ஏறி இறங்கும் பொழுது உதவி புரியும் வகையில் பணியமர்த்தப்பட்டுள்ளாரா, மாணவ, மாணவியர் வாகனத்தில் எளிதாக ஏறும் வகையில் படிக்கட்டின் முதல் படி தரையில் இருந்து 25 செ.மீ இல் இருந்து 30 செ.மீ ற்குள் உள்ளவாறு அமைக்கப்பட்டுள்ளதா, வாகன ஓட்டுநரின் இருக்கைப்பகுதி தனியாக பிரிக்கப்பட்டுள்ளதா, இருக்கைகள் முறையாக வாகனத்தின் தரைத்தளத்துடன் டீழடவள- மூலம் பொருத்தப்பட்டுள்ளதா, புத்தகப்பைகள் வைத்திட தனியாக இடம் அமைக்கப்பட்டுள்ளதா, வாகனத்தின் தரைத்தளம் நல்ல தரத்துடன் பொருத்தப்பட்டுள்ளதா, வாகனத்தின் பக்கவாட்டு ஜன்னல்கள் மாணவ, மாணவியர் கரம், சிரம் நீட்டாதவாறு, மூன்று நீளமாக கிடைமட்ட கம்பிகளால் பொருத்தப்பட்டு பாதுகாப்பாக உள்ளதா, போன்றவை குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.
பள்ளி வாகனங்கள் மாணவர்களின் பாதுகாப்பு கருதி விபத்தில்லாமல் பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி பள்ளி குழந்தைகளை பாதுகாப்பாக வாகனங்களில் அழைத்து சென்று வர வேண்டும் என பள்ளி வாகன ஓட்டுனர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,இ.ஆ.ப.,அவர்கள் அறிவுறித்தினார்கள். பின்னர், தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை மூலமாக வாகனத்தில் தீ விபத்து ஏற்படும்போது செய்ய வேண்டிய மீட்பு மற்றும் சீரமைப்பு நடவடிக்கைகள் குறித்த செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. பள்ளிகளில் பயணம் செய்யும் குழந்தைகளுக்கு ஆபத்து காலங்களில் செய்யப்படும் முதல் உதவிப் பயிற்சி, விருதுநகர் மாவட்ட 108 அவசர ஊர்தி அலுவலர்களால் செயல்முறை விளக்கம் நடத்தி காண்பிக்கப்பட்டது.
மேலும், இந்த ஆய்வில் கலந்து கொண்ட அனைத்து ஒட்டுநர்கள் மற்றும் உதவியாளர் அனைவரும் பயன்பெறும் வகையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலிருந்து மருத்துவர்கள் இலவசமாக இரத்த அழுத்தம் மற்றும் இரத்தத்தில் சக்கரையின் அளவு பார்க்கப்பட்டது.இந்த ஆய்வின் போது, வருவாய் கோட்டாட்சியர்கள், விருதுநகர், சிவகாசி, மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள், இயக்கூர்தி ஆய்வாளர்கள், பள்ளிக்கல்வி துறையைச் சேர்ந்த அலுவலர்கள், தீயணைப்புத்துறை அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply