சுதந்திர தினத்தன்று தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காமல் இயங்கிய 52 கடைகள், உணவு நிறுவனங்கள் மற்றும் மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் (தேசிய பண்டிகை மற்றும் சிறப்பு விடுமுறை தினங்கள்) சட்டம் 1958ன்படி, தேசிய விடுமுறை தினமாகிய சுதந்திர தினம் – 15.08.2026 அன்று கடைகள் மற்றும் நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. மேற்படி தினத்தில் விடுமுறை அளிக்கப்படாமல் ஊழியர்கள் வேலை செய்ய அனுமதிக்கப்பட வேண்டுமானால் அவர்களுக்கு வேலையளிப்பவரால் இரட்டிப்பு சம்பளம் அல்லது வேறொருநாளில் மாற்று விடுப்பு அளிக்கப்பட வேண்டும்.
அதன்படி, தேசிய பண்டிகை மற்றும் சிறப்பு விடுமுறை தினத்தில் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்த தொழிலாளர்களிடம், கடைகள் மற்றும் நிறுவனங்களுக்கு VA என்ற படிவத்திலும், உணவு நிறுவனங்களுக்கு IVEE என்ற படிவத்திலும், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களுக்கு XIIA படிவத்திலும் கையொப்பம் பெற்று, அதனை தேசிய பண்டிகை மற்றம் சிறப்பு விடுமுறை தினத்திற்கு 24 மணி நேரத்திற்கு முன்னர் சம்பந்தப்பட்ட தொழிலாளர் உதவி ஆய்வாளர்களிடம் சமர்ப்பித்திட வேண்டும்.
மேற்கண்டவாறு படிவம் அனுப்பாமலும், சட்ட விதிகளை அனுசரிக்காமலும் அவற்றிக்கு முரணாக தொழிலாளர்களை பணிக்கு அமர்த்திய 19 கடைகள் மற்றும் நிறுவனங்கள், 28 உணவு நிறுவனங்கள் மற்றும் 05 மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் ஆக மொத்தம் 52 நிறுவனங்களில் முரண்பாடு கண்டறியப்பட்டு, சம்பந்தப்பட்ட கடைகள் மற்றும் நிறுவனங்களின் உரிமையாளர்கள் மீது, தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் ( தேசிய பண்டிகை மற்றும் சிறப்பு விடுமுறை தினங்கள்) சட்டம் 1958, தமிழ்நாடு உணவு நிறுவனங்கள் சட்டம் 1958 மற்றும் மோட்டார் போக்குவரத்துத் தொழிலாளர் சட்டம் 1961 ஆகிய சட்டங்களின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மேலும், தேசிய விடுமுறை தினமான சுதந்திர தினத்தன்று பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் அல்லது மூன்று நாட்களுக்குள் மாற்று விடுப்பு சட்டப்படி அனைத்து நிறுவனங்களும் வழங்க வேண்டும். இச்சட்டத்தை மீறுபவர்கள் மீது சம்பளப்பட்டுவாடா சட்டத்தின் கீழ் மதுரை, தொழிலாளர் இணை ஆணையர் நீதிமன்றத்தில் கேட்புமனு தாக்கல் செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.சுதந்திர தினத்தன்று கிராமங்கள் தோறும் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் கொத்தடிமை தொழிலாளர் முறை அகற்றுதல் குறித்து உறுதிமொழி எடுக்கப்பட்டது என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply