விருதுநகர் மாவட்டத்தில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்.
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் - 2026-னை முன்னிட்டு, விருதுநகர் மாவட்டத்தில் 100 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்யும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் (SVEEP) மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, (01.04.2026) 208-திருச்சுழி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், மாணவர்களுக்கான தேர்தல் விழிப்புணர்வு போட்டிகள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றன.
நிகழ்ச்சியின் சிறப்பம்சங்கள்:
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திரு. வீ.கேசவதாசன் மற்றும் மகளிர் திட்ட இயக்குநர் திரு. சு.இலக்குவன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், வாக்காளர் விழிப்புணர்வை வலியுறுத்தி மாணவர்களுக்கு ரங்கோலி, பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி மற்றும் கட்டுரைப் போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு திட்ட இயக்குநர்கள் பரிசுகளை வழங்கிப் பாராட்டினர்.
விழிப்புணர்வு செயல்பாடுகள்:
மாதிரி வாக்குப்பதிவு: இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் செயல்பாடு மற்றும் வாக்களிப்பதன் அவசியம் குறித்து மாதிரி வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம் மாணவர்களுக்கு நேரடி விளக்கம் அளிக்கப்பட்டது.
கலை நிகழ்ச்சிகள்: சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் மூவர்ண ஆடை அணிந்து, கோலாட்டம் மற்றும் விழிப்புணர்வு நடன நிகழ்ச்சிகள் மூலம் வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை பறைசாற்றினர்.
உறுதிமொழி மற்றும் கையெழுத்து இயக்கம்:
நிகழ்ச்சியின் நிறைவாக, "எனது வாக்கு விற்பனைக்கு அல்ல" மற்றும் "ஜனநாயக கடமையை தவறாமல் ஆற்றுவேன்" என்பதை வலியுறுத்தி மாணவர்களிடையே கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. தொடர்ந்து அனைவரும் வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.
இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர், உதவித் திட்ட அலுவலர்கள், திருச்சுழி வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ), மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் (SEM) மற்றும் அரசு அலுவலர்கள், மாணவ-மாணவியர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply