அன்பே பிரதானம், சகோதர அன்பே பிரதானம்!
ஒரே தாய் வயிற்றில் பிறந்து அக்கா,தம்பி, தங்கை, அண்ணன் என்று பாசத்துடன், ஒரு வித வித்யாசமும் இன்றி பெற்றோர்களிடம் வளர்ந்து வருகிறோம். ஒரு வீட்டில்இரண்டாவதாக குழந்தை பிறந்திருக்கிறது. அந்தக் குழந்தையைப் பார்க்கவருபவர்கள் பெரிய குழந்தையிடம் உன் தம்பிப் பாப்பாவை நான் தூக்கிக் கொண்டுபோகிறேன் ,என்று சொன்னால் அக்குழந்தை கோபமாக நம்மைப் பார்த்து. தன் தம்பியைஅணைத்துக் கொள்ளும். ஏன்? தன் தம்பி தன்னை விட்டுப் பிரிந்துசென்றுவிடுவானே? என்ற பயம் கலந்த வருத்தம்.
கேவலம் நிலம், காசு, பணத்திற்காக, நெஞ்சில் ஈவு இரக்கமின்றி, அதே தம்பியை இழக்கத் தயாராகிறார்கள். சகோதர, சகோதரிகளே, உங்களுக்குள்ளே எத்தனையோ பிரச்சனைகள் இருக்கலாம். அதை உங்களுக்குள்ளேயே பேசித் தீர்த்துக் கொள்ளலாம். அதைத்தவிர்த்து மூன்றாம் மனிதரை பிரச்சனை தீர்ப்பதற்கு அணுகுகின்றோம் என்றால்கதை கந்தல் தான். பூனைகளின் அப்பம் பிரச்சனைக்கு குரங்கு தீர்ப்பு சொன்னகதை தான். உங்கள் பிரச்சனையை தீர்க்க கோர்ட், கேஸ், போலீஸ் ஸ்டேஷன் என்றுஅலையாமல் உங்களிடையே பேசித் தீர்த்துக் கொள்வது உத்தமமான விஷயம்.
ஹர்ஷ வர்த்தனர் காலத்தில் நாட்டு நலத்திற்காக கண்ணுக்கு கண், பல்லுக்குப்பல்' என்ற சட்டம் இருந்தது. கையால் பொருளைத் திருடினானா? வெட்டு கையை கண்ணால் ஒரு பெண்ணை தவறான கண்ணோட்டத்துடன் பார்த்தானா? சிரித்தானா? கண்ணைத் தோண்டு! பல்லைத்தட்டு! என்று கடுமையான தண்டனையுடன் நாட்டைச் செம்மையாக ஆண்டு வந்தான். ஆனால் இந்த முறையை குடும்பபாசத்திற்கு நடுவே கொண்டு வருவார்கள் என்று அம்மன்னன் நினைத்திருக்கமாட்டார்.
சொத்தை மொத்தமும் விற்று கோர்ட், கேஸ் என்று அலைவேனே தவிர பைசா தரமாட்டேன் உடன்பிறப்பிற்கு என்று சொல்லும் அளவிற்கு, கொடூரம் கூடிக் கொண்டு விடுகிறது.இந்த தகராறில் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் பெற்றோர்கள். தன் குழந்தைகள் நாம் கஷ்டப்பட்டு சம்பாதித்த காசிற்காக, சண்டை போடுகிறார்களே? இதற்காகவா இந்த சொத்தை அரும்பாடு பட்டு சம்பாதித்தோம் என்று ஆதங்கப்படுகின்றனர்.
பூர்வீகச் சொத்தோ, உங்களுக்கு சேரவேண்டிய சொத்துக்களோ ,ஏமாற்றப்பட்டு அநியாயமாக உங்கள் கைவிட்டுச் சென்றால், உங்கள் வாரிசுகளுக்கு எந்த விதத்திலாவது வந்து சேரும் என்பதில் சந்தேகமில்லை. யாருக்கு சொத்துக்கள் சேர வேண்டுமோ, அவர்களைச் சென்றடையும். சொத்துக்களுக்கு உண்மையான எஜமானரிடம் போய்ச் சேர வேண்டும் என்ற பாசம் இருக்குமாம், இது கதையல்ல நிஜம். இரண்டு தலை முறைக்குமுந்தியவர்கள் இதை அடிக்கடி கூறுவார்கள்.
இந்த அற்பகுணத்தை விட்டொழித்து அன்பு, அன்பு என்று அனைத்தையும் மன்னித்து, மறந்து, விட்டுக் கொடுத்து, "அன்பே பிரதானம், சகோதர அன்பே பிரதானம்" என்ற நல்லெண்ணத்துடன் வாழ்க்கையைத் தொடரலாம்.
0
Leave a Reply