டில்லி பாலாஜி மந்திர்.
டில்லி ராமகிருஷ்ணபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா (பாலாஜி) மந்திர், திருப்பதி ஏழுமலையானை நினைவூட்டும் சிறப்புமிக்க வைணவத் திருத்தலமாக விளங்குகிறது. திருப்பதியைப் போலவே இங்கும் பக்தர்கள் முடிக்காணிக்கை செலுத்தும் வழக்கம் உள்ளது.
சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு வேலைவாய்ப்பு மற்றும் குடும்பச் சூழ்நிலை காரணமாக டில்லியில் குடியேறிய தென்னிந்திய மக்கள் ஒன்றிணைந்து இக்கோயிலை அமைத்து வழிபட்டு வந்தனர். பின்னர் நீதிபதி ராஜகோபால அய்யங்கார் தலைமையில் ராஜகோபுரம், அர்த்த மண்டபம், மகா மண்டபம் ஆகியவை கட்டப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தற்போது ஸ்ரீ வெங்கடேஸ்வரா மந்திர் சொசைட்டி கோயில் நிர்வாகத்தை மேற்கொண்டு வருகிறது.
கோயிலின் ஐந்து நிலைகளைக் கொண்ட ராஜகோபுரம் கம்பீரமாக காட்சியளிக்கிறது. கருவறையில் சீனிவாசப் பெருமாள் மூலவராக அருள்பாலிக்கிறார். அலர்மேல் மங்கைத் தாயாருக்கு தனிச் சன்னதி அமைந்துள்ளது.
கோயிலின் முன்புறத்தில் 41 அடி உயரமுள்ள கொடிமரம் செப்புக் கவசத்துடன் அமைந்துள்ளது. பிரகாரத்தில் ஆண்டாள், ஹனுமன், ஆழ்வார்கள், நிகமாந்த மகாதேசிகன், லட்சுமி நரசிம்மர், சுதர்சனாழ்வார், ஹயக்ரீவர், கோபாலர், ஆதிவராகர் உள்ளிட்ட பல்வேறு சன்னதிகள் உள்ளன. கோயிலில் அமைந்துள்ள கண்ணாடி அறையும் தனித்துவமான கலைநயத்துடன் காணப்படுகிறது.
இத்தலத்தின் தலவிருட்சமாக மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை காய்க்கும் மாமரம் கருதப்படுகிறது. கோயில் வளாகத்தில் உள்ள நந்தவனத்திலேயே பூஜைக்குத் தேவையான மலர்கள் மற்றும் துளசி வளர்க்கப்பட்டு சேகரிக்கப்படுகின்றன. நம்மாழ்வார் சன்னதியின் மீது குடை விரித்தது போல் காணப்படும் மகிழ மரமும் இத்தலத்தின் சிறப்புகளில் ஒன்றாகும்.
சித்ரா பவுர்ணமி அன்று இங்கு கஜேந்திர மோட்ச விழா சிறப்பாக நடைபெறுகிறது. வசந்த மண்டபத்தின் அருகில் கஜேந்திரன் என்ற யானையின் சிலை உள்ளது. அதன் அருகிலுள்ள தொட்டியில் நீர் நிரப்பப்பட்டு, யானை நீராட வரும் ஐதீகம் நிகழ்த்தப்படுகிறது. அப்போது பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வருகிறார்.
கார்த்திகை மாதம் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் நடைபெறும் வார்ஷீக விழாவும் முக்கியமானது. அன்று காலையில் சிறப்பு அபிஷேகமும், மாலையில் வீதியுலாவும் நடைபெறும். ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் ஹனுமனுக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. மார்கழி மாத மூல நட்சத்திரத்தன்று ஹனுமனுக்கு வடைமாலை சேவையும் நடைபெறுகிறது.
தங்களது வேண்டுதல்கள் நிறைவேற வேண்டும் என்பதற்காக பக்தர்கள் சனிக்கிழமைகளில் அங்கப்பிரதட்சணம் செய்கின்றனர். கோயிலுடன் செயல்படும் பாடசாலையில் நாலாயிர திவ்யப் பிரபந்தம் மற்றும் ஆழ்வார்களின் வரலாறு ஆகியவை பக்தர்களுக்கு கற்றுத் தரப்படுகின்றன. தினமும் காலையில் நடைபெறும் விஸ்வரூப தரிசனத்தின்போது கோபூஜையும் நடைபெறுகிறது.
புரட்டாசி சனிக்கிழமைகள், வைகுண்ட ஏகாதசி, பங்குனி உத்திரம் ஆகியவை இக்கோயிலில் சிறப்பாகக் கொண்டாடப்படும் முக்கிய நாட்களாகும்.
டில்லியில் இருந்து காந்தி மார்க்கம் வழியாகச் சென்றால் இக்கோயில் சுமார் 22 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
0
Leave a Reply