வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகள்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகளில், பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள் தேர்தல் ஆணைய வலைதளத்தில் பதிவு செய்யும் பணிகளை கண்காணிக்கவும், குறைவான முன்னேற்றம் உள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்களைக் கண்டறிந்து பணிகளை துரிதப்படுத்துவதற்காகவும் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு மையத்தினை என மாவட்ட தேர்தல் அலுவலர்,மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் பார்வையிட்டார்.1.1.2026 தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல்களை திருத்தம் செய்வதற்கான சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகள் விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடுவீடாகச் சென்று கணக்கெடுப்புப் படிவங்களை வழங்கியும், பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை வாக்காளர்களிடமிருந்து திரும்பப் பெற்றும் வருகின்றனர்.
இதுவரை விருதுநகர் மாவட்டத்தில் 15,79,181 வாக்காளர்களுக்கான கணக்கெடுப்புப் படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன. வெளியூர்களில் பணிபுரிபவர்கள் தங்களுக்கான படிவங்களைப் பெற்றுக் கொள்வதை எளிதாக்குவதற்காகவும், 2002-ம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்களைக் கண்டறிவதற்கு உதவி செய்வதற்காகவும், படிவங்களை நிரப்புவதற்கும், நிரப்பப்பட்ட படிவங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் திரும்ப அளிப்பதற்காகவும், அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் 19-11-2025 புதன் கிழமை மற்றும் 20.11.2025 வியாழக் கிழமை ஆகிய 2 தினங்களிலும் சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை வாக்காளர்களிடமிருந்து திரும்பப் பெற்று அவற்றை தேர்தல் ஆணைய வலைதளத்தில் பதிவு செய்யும் பணிகள் அந்தந்த வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்களில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இப்பணிகளைக் கண்காணிக்கவும், குறைவான முன்னேற்றம் உள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்களைக் கண்டறிந்து அவர்களுடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களைப் பெறுவதைத் துரிதப்படுத்துவதற்காக விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்துத் துறை அலுவலர்களின் குழுக்களை அமைத்து ஒரு கண்காணிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இதே போன்று ஒவ்வொரு வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகத்திலும் ஒரு கண்காணிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தொடர் கண்காணிப்பு மூலம், இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நாளுக்குள்ளாக அனைத்துப் படிவங்களையும் வாக்காளர்களிடமிருந்து பூர்த்தி செய்து பெற்று வலைதளத்தில் பதிவேற்றம் செய்வதை உறுதி செய்ய தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என மாவட்ட தேர்தல் அலுவலர்ஃமாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply