வேளாண் பொருட்களின் மதிப்பு கூட்டுதல் மற்றும் பதப்படுத்துதல் தொழில் தொடங்க விரும்பும் தொழில் முனைவோர்கள் மற்றும் நிறுவனங்கள் மானியம் பெற விண்ணப்பிக்கலாம்.
தமிழகத்தின் வேளாண் பொருட்களின் மதிப்பு கூட்டுதல் மற்றும் பதப்படுத்துதல் தொழில் தொடங்க விரும்பும் தொழில் முனைவோர்கள் மற்றும் நிறுவனங்களை ஊக்கப்படுத்திட சிறப்பு திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆர்வமுள்ள வேளாண் தொழில் முனைவோர்கள், பெண்கள், பழங்குடியினர், ஆதிதிராவிடர்கள் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம். ரூ.10 கோடி வரையிலான வேளாண்மை மற்றும் தோட்டக்கலை விளைபொருட்களுக்கான புதிய மதிப்பு கூட்டு மையங்களை நிறுவுவதற்கு முதலீட்டு மானியமாக 25 சதவீதமும், தொழில் முன்னேற்றத்தில் பெண்கள் , ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு குறிப்பாக இவர்களில் பின் தங்கிய வட்டாரங்களில் தொழில் துவங்க ஆர்வமுள்ளவர்களுக்கு கூடுதலாக 10 சதவீதம் என மொத்தம் 35 சதவீதம் என்று அதிகபட்சமாக ரூ.1.5 கோடி மானியம் வழங்கப்படும் .
திட்டச் செலவில் இயந்திரங்கள் மற்றும் கட்டடங்கள் ஆகியவை உள்ளடக்கிக் கொள்ளலாம். ஆனால், நிலம் மற்றும் நடைமுறை மூலதனம் ஆகியவை திட்டச் செலவில் நீங்கலாக்கப்படும். மேலும் பின்னேற்பு தொகையானது முறையே 60% மற்றும் 40% ஆகிய இரண்டு தவணைகளில் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் விடுவிக்கப்படும். இதைத் தவிர அனைத்துப் பிரிவினருக்கும் 5% வட்டிமானியம் 5 ஆண்டுகளுக்கு பின்னேற்பு மானியமாக பயனாளிகளின் வங்கிக் கணக்கில் விடுவிக்கப்படும். மேலும் இத்திட்ட மதிப்பீட்டில் பயனாளிகளின் பங்களிப்பு குறைந்த பட்சம் 5 சதவீதம் ஆக இருக்க வேண்டும் மற்றும் மீதமுள்ள திட்ட நிதியை வங்கியில் வேளாண் உட்கட்டமைப்பு நிதி திட்டத்தின் மூலம் அரசின் கடன் உத்திரவாதத்துடன் (CGTMSE) 2 கோடி வரை கடனுதவி 9% வட்டியுடன் பெறலாம். மேலும் வேளாண் உட்கட்டமைப்பு நிதி திட்டத்தின் மூலம் பெறப்படும் நிதிக்கு 3% வட்டி மானியம் பெறலாம்.
இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க, விண்ணப்பதாரர்கள் வேளாண்மை துணை இயக்குநர் (வேளாண் வணிகம்) அவர்களிடம் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறது. மேலும் பயனாளிகளின் விண்ணப்பங்கள் வேளாண்மை துணை இயக்குநர் (வேளாண் வணிகம்) மூலம் முன்மொழியப்பட்டு, மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாவட்ட அளவிலான தொழில்நுட்ப குழுவினரால் கூர்ந்தாய்வு செய்யப்படும். பின்னர் அவை மாநில அலவிளான திட்ட ஒப்புதல் குழுவிற்கு பரிந்துரை செய்யப்படும். வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை ஆணையர் தலைமையில் இயங்கும் திட்ட ஒப்புதல் குழுவினரால் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பங்களை பரிசீலித்து பயனாளிகளை தேர்வு செய்வார்கள்.மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள வேளாண் வணிக துணை இயக்குநர், வேளாண் வணிகம், 105 மதுரை சாலை, ஒழுங்குமுறை சந்தைக் குழு வளாகம், விருதுநகர் 626001 அவர்களை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா , I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply