வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் சூரிய சக்தியால் தனித்து இயங்கும் மோட்டார் பம்ப் செட்டுகள் மானியத்தில் வழங்கும் திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்
2019-20 முதல் செயல்படுத்தப்பட்டு வரும் சூரிய சக்தியால் தனித்து இயங்கும் மோட்டார் பம்ப் செட்டுகள் மானியத்தில் வழங்கும் திட்டம், விருதுநகர் மாவட்டத்தில் வேளாண்மை பொறியியல் துறை மூலம் திறந்த வெளி கிணறுகள் மற்றும் ஆழ்குழாய் கிணறுகளில் சூரிய சக்தியால் இயங்கும் மோட்டார் பம்புகள் தனிப்பட்ட பொதுப் பிரிவு விவசாயிகளுக்கு 60 சதவிகிதம் அரசு மானியத்துடனும், ஆதிதிராவிட பழங்குடியினருக்கு 70 சதவீத மானியத்துடனும் மற்றும் சிறு குறு ஆதிதிராவிட வகுப்பினருக்கு 80 சதவீத மானியத்துடனும் செயல்படுத்துவதற்கு மொத்தம் 60 எண்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இத்திட்டம் மாநில அரசு நிதி, மத்திய அரசின் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை திட்டம் , தமிழ்நாடு மின்உற்பத்தி பகிர்மான கழகத்தின் நிதி ஆதாரத்தின் மூலம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு 5ஹெச்பி முதல் 10 ஹெச்பி வரை மோட்டார் பம்ப் செட்டுகள் அமைத்து தரப்படும்.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் விவசாயிகள் பாசன நீரினை சிக்கனமாக பயன்படுத்தும் பொருட்டு, நுண்ணீர் பாசனத்துடன் இணைத்திட உறுதிமொழிக் கடிதம் அளிக்க வேண்டும். வேளாண் பணிகளுக்கு ஆற்றுப்படுகை மற்றும் நீர் நிலைகளில் இருந்து 200 மீட்டருக்குள், கான்கிரீட் காரை இடப்படாத கால்வாய்களிலிருந்து 50 மீட்டருக்குள், நிலத்தடி நீரை இறைக்க வேண்டுமானால் பொதுப்பணித்துறையிடமிருந்து தடையில்லாச் சான்று பெற வேண்டும். மேற்படி தொலைவு வரம்பிற்குள் உள்ள நீர் ஆதாரங்களுக்கு சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகளை அமைத்திட விண்ணப்பிக்கும் பொழுது பொதுப்பணித்துறையின் தடையில்லா சான்றினை இணைத்திட வேண்டும்.
இத்திட்டத்தில் பயன்பெற விருப்பமுள்ள விருதுநகர், அருப்புக்கோட்டை, காரியாபட்டி, திருச்சுழி, நரிக்குடி வட்டார விவசாயிகள் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் அமைந்துள்ள உதவி செயற்பொறியாளர்(வே.பொ) அலுவலகத்திலும் (கைபேசி எண்: 82202-53460), சாத்தூர், சிவகாசி வெம்பக்கோட்டை, திருவில்லிபுத்தூர், இராஜபாளையம் மற்றும் வத்திராயிருப்பு வட்டார விவசாயிகள் கிருஷ்ணன் கோவில், வி.பி.எம்.எம் கல்லூரி எதிரிலுள்ள உதவி செயற்பொறியாளர்(வே.பொ) அலுவலகத்திலும் (கைபேசி எண்: 79041-25715) தொடர்பு கொண்டு விண்ணப்பங்களை அளித்து பயன்பெற வேண்டுமென என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.
0
Leave a Reply