காரியாபட்டி வட்டத்தில் "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" என்ற திட்ட கள ஆய்வு
மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட அளவிலான அலுவலர்கள் மக்களை தேடிச்சென்று குறைகளைக் கேட்டறியவும், பல்வேறு துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள், செயல்பாடுகளை விரைவுபடுத்தவும் மற்றும் வழங்கப்படும் சேவைகளின் தரத்தை மேம்படுத்தவும், மக்களை நாடி மக்கள் குறைகளைக் கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே சென்று ஆய்வு செய்திட "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" என்ற புதிய திட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி வட்டத்தில் "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" என்ற திட்டம் மூலம் 18.09.2024 , காலை 9 மணி முதல் 19.09.2024 இன்று காலை 9 மணி வரை நடைபெற்று வருகிறது. இந்த முகாமின் கீழ், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மற்றும் பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் அரசின் திட்டங்கள், செயல்பாடுகளை விரைவுபடுத்தவும் மற்றும் வழங்கப்படும் சேவைகளின் தரத்தை மேம்படுத்தவும் கள ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.அதனடிப்படையில், 18.09.2024 அன்று நள்ளிரவில், காரியாபட்டி காவல் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிசிடிவி கண்காணிப்பு பணிகள் தொடர்பாக பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையினை 18.09.2024 அன்று நள்ளிரவில் பார்வையிட்டு, அங்கு உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களிடம் சிகிச்சை முறைகள், அடிப்படை வசதிகள் குறித்தும் கேட்டறிந்து, காரியாபட்டி அரசு மருத்துவமனையில் இருந்து உயர் மருத்துவ சிகிச்சை, அவசர சிகிச்சை, அறுவை சிகிச்சை மற்றும் பிரசவத்திற்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள், சுகாதார வசதிகள் மற்றும் போதுமான மருத்துவர்கள் மற்றும் மருந்துகள் இருப்பு குறித்து ஆய்வு செய்தார். மேலும், இரவு பணியில் இருக்கும் மருத்துவ ஊழியர்களின் குறைகளை கேட்டறிந்தார்.மேலும், முகாமின் இரண்டாம் நாளான இன்று (19.09.2024)காரியாபட்டி வட்டத்தில் உழவர் சந்தையினை பார்வையிட்டு ஆய்வு செய்து, உழவர் சந்தை அலுவலர்களிடம் காய்கறி விலை நிர்ணயம் குறித்தும் கேட்டறிந்தும், எடைக்கல்லினை ஆய்வு செய்து, பின்னர் உழவர் சந்தைக்கு கூடுதலான விவசாயிகள் மற்றும் நுகர்வோர் வருகையை அதிகரிக்க அறிவுறுத்தினார்.
பத்தாவது வார்டு தாமரை தெரு மற்றும் மருதம் தெருவில் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்குதல் மற்றும் சுகாதாரம், குடிநீர் பராமரிப்பு பணிகள் உள்ளிட்டவைகள் குறித்து பொதுமக்களிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கேட்டறிந்தார்.காரியாபட்டி வட்டத்தில், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ், திடக்கழிவுகளை மக்கும் மற்றும் மக்காத குப்பைகள் என தரம் பிரித்து நுண் உரம் தயாரிக்கும் பணிகள் குறித்து கேட்டறிந்து, பின்னர் பணியாளர்களிடம் குப்பை சேகரிக்கும் முறை மற்றும் அவர்களின் பணி நேரம் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கேட்டறிந்தார்.
காரியாபட்டி பேரூராட்சிக்கு குடிநீர் ஆதாரமாக இருந்து வரும் குளத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.காரியாபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவின் தரம் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார்.
0
Leave a Reply