விருதுநகர் மற்றும் சாத்தூர் வட்டாரப்பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்ட பணிகள் மற்றும் அரசு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து கள ஆய்வு .
விருதுநகர் மாவட்டம், விருதுநகர் மற்றும் சாத்தூர் வட்டாரப்பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்ட பணிகள் மற்றும் அரசு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் முன்னிலையில், மாவட்ட கண்காணிப்பு அலுவலர்/தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு கழகத்தின் மேலாண்மை இயக்குநர் திருமதி ஆர்.வி.ஷஜீவனா,I A S., அவர்கள் கள ஆய்வு மேற்கொண்டார்.அதன்படி, விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்க மைதானம் அருகில் அருங்காட்சியகங்கள் துறை சார்பில் ரூ.6.80 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் புதிய அருங்காட்சியக கட்டிட பணிகளின் முன்னேற்றம் குறித்து நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர், விருதுநகர் ஊராட்சி ஒன்றியம் சத்திரெட்டியபட்டி ஊராட்சியில் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களிடம், குழுவின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்து, மகளிர் சுய உதவி குழுக்களுக்கான அரசு திட்டங்கள், வங்கி கடனுதவி, மானியங்கள் உள்ளிட்டவை குறித்து எடுத்துரைத்து உரிய ஆலோசனைகளை வழங்கினார்.அதனை தொடர்ந்து, விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டம் உப்பத்தூரில் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ், கட்டப்பட்டு வரும் கீழ்நிலை நீர்த்தேக்கத்தொட்டி பணிகளின் முன்னேற்றம், அதன் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.மேலும், சாத்தூர் துணை மின் நிலைய அலுவலகத்தின் செயல்பாடுகள் குறித்தும், மின் நிலையத்தில் தேவையான மின் உபகரணங்கள் இருப்பு குறித்தும், மழைக்காலங்களில் சேதமடையும் மின் கம்பங்களுக்கு பதிலாக போதுமான அளவு இருப்பு உள்ள மின் கம்பங்கள் குறித்தும் கேட்டறிந்து ஆய்வு செய்தார்.
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டம் மேட்டமலை ஊராட்சியில் முதியோர் ஓய்வூதிய திட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச வேஷ்டி, சேலைகளை நேரில் சென்று வழங்கி, வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லத்திற்கே சென்று குடிமைப் பொருட்களை வழங்கும் தாயுமானவர் திட்டத்தின் பயன்கள் குறித்து கேட்டறிந்து கலந்துரையாடினார்.அதனைத்தொடர்ந்து, சாத்தூர் ஊராட்சி ஒன்றியம் சின்னக்காமன்பட்டி ஊராட்சியில் நடைபெற்று வரும் உங்களுடன் ஸ்டாலின் என்ற சிறப்பு முகாமினை நேரில் சென்று பார்வையிட்டு, பொதுமக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்து, மனுக்கள் பதிவேற்றம் செய்வது, கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பங்கள் பெறுவதற்கான சிறப்பு பிரிவுகள் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்தார்.
மேலும், சாத்தூர் ஊராட்சி ஒன்றியம் சின்னக்காமன்பட்டி ஊராட்சியில் மகளிர் குழுவின் மூலம் கடன் பெற்று செயல்பட்டு வரும் பிளவர் மில்லினை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, அங்கு பயன் பெறும் சுய உதவிக்குழுக்களின் நபர்களின் எண்ணிக்கை குறித்தும், இதன் மூலம் சுய உதவி குழுக்களுக்கு கிடைக்கும் பயன்கள் குறித்தும் கேட்டறிந்தார்.இந்த ஆய்வின் போது, மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.ராஜேந்திரன், திட்ட இயக்குநர் (தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்) திரு.ஜார்ஜ் ஆண்டனி மைக்கேல், வட்டாட்சியர், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply